மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவையும் மாவட்ட கலாசார அதிகார சபையும் இணைந்து நடத்தும் மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழா இன்று 22ஆம் திகதி சனிக்கிழமை பண்பாட்டு பவனியுடன் கோலாகலமாக ஆரம்பமானது.
நான்கு அமர்வுகளாக நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள இவ்விழாவினை மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையேற்று நடத்துகிறார்.
மூவினங்களின் பாரம்பரியம், தொன்மை மற்றும் விழுமியங்களை வெளிப்படுத்தும் பண்பாட்டுப் பேரணி மற்றும் பல் மத கலாசார வெளிப்பாடுகளுடன் கல்லடி விபுலானந்தா மணி மண்டபத்திலிருந்து ஆரம்பமாகி விழா நடைபெறும் மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக்கல்லூரி வரை சென்றது.
அதனைத்தொடர்ந்து கண்காட்சி அரங்கான முதலாவது அமர்வு ஆரம்பமானது. நான்கு அமர்வுகளாக நடைபெறும் இவ்வருடத்துக்கான மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழா நிகழ்வொழுங்கில், முதலாவது அமர்வில், புத்தக, பாரம்பரியப் பொருட்களின் கண்காட்சி, இலத்திரனியல் காட்சிகள் அடங்கிய கூடத்தினை அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளரும் மாவட்ட கலாசார பேரவைத் தலைவரும் கலாசார அதிகார சபையின் நிறைவேற்றுத் தலைவருமான மா. உதயகுமார் திறந்து வைத்தார்.
வி.சி கந்தையா அரங்கில் நடைபெறும் நிகழ்வுகள் மங்கல விளக்கேறற்றலுடன் ஆரம்பமாகின. அதில் மட்டக்களப்பின் வரலாற்றுப் பதிவுகள் ஒளிப்படம் காண்பிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து கிழக்குபல்கலைக்கழக நுன்கலைத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் சு.சந்திரகுமார் ஒருங்கிணைப்பில் பலாச்சோலை கலைஞர்களின் புலிக்கூத்து ஆற்றுகை நடைபெற்றதுடன், பாரம்பரிய விளையாட்டுக்களான கிளித்தட்டு, வட்டக்காவடி, பொர்த்தேங்காய் உடைத்தல் போன்ற விளையாட:டுக்கள் நடைபெற்றன.
முதல் அமர்வின் இறுதி நிகழ்வாக உள்ளுர் கலைஞர்களின் நிபுணத்துவப் பகிர்வு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்று அரசாங்க அதிபரின் உரையும் நடைபெற்றது.
இன்றைய இரண்டாம் அமர்வு- பி.ப. 3.00 மணி முதல் 6.00 மணி வரை நாடக அரங்கு (புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அரங்கு நடைபெறவுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரை ஆய்வரங்கு (பித்தன் ஷா அரங்கு மற்றும் பி.ப. 3.00 மணி முதல் 6.00 மணி வரை கலையரங்கு (வித்துவான் கமலநாதன் அரங்கு) ஆகியன நடைபெறவுள்ளன.
இன்றைய முதல் அமர்வில், மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் கலைஞர்கள், ஆலுவலர்கள், எழுத்தாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.