மண்முனை தென்மேற்கு பிரதேசசபை வரவு – செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்.

0
602

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் 2019ம் ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்டம் இன்று(21) வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு சபை அமர்வில் கலந்துகொண்ட உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்ற அமர்வில், 2019ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தவிசாளரினால் முன்வைக்கப்பட்டது.
தவிசாளர் உட்பட 16உறுப்பினர்களைக் கொண்ட மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில், சபை அமர்வின்போது 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டமையுடன், சுயேச்சைக்குழுவினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், முன்வைக்கப்பட்ட வரவு, செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தமையினால் வரவு செலவுத்திட்டம் குறுகிய நேரத்திற்குள் நிறைவேற்றப்பட்டது.

குறித்த வரவு செலவுத்திட்டத்தின் மொத்தமீண்டுவரும் வருமானமாக 46மில்லியன் 504ஆயிரத்து 534ரூபாய் எனவும், மொத்த மீண்டுவரும் செலவினமாக 38மில்லியன் 420ஆயிரத்து 753ரூபாய் எனவும் கூறப்பட்டது. மேலும் கடந்த காலங்களில் சபை வருமானத்தினை விட செலவுகள் அதிகரித்திருப்பதாகவும், மேலதிக செலவுகளை இயன்றளவு தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டும் எனவும், கடந்த காலங்களில் முன்மொழியப்பட்ட பிரேரணைகள் பல இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளதாகவும், எதிர்வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், சபை செயற்பாடுகளின் போது உறுப்பினர்களின் பங்குபற்றல், ஆலோசனைகள் இருக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் வருமானங்களை ஈட்டுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் சபை உறுப்பினர்களால் இதன்போது கூறப்பட்டது.

வரவு – செலவுத்திட்ட சமர்ப்பிப்பின் பின்னர், சபை உறுப்பினர்களால் பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டன. சந்தைக்கான நிரந்தர வாகன தரிப்பிடம் அமைத்தல், வடிகான்கள் அனைத்தும் விரைவாக துப்பரவு செய்யப்பட வேண்டும். சட்டவிரோதமான கசிப்பு உற்பத்திகளை கட்டுப்படுத்துவதற்கான விரைவு செயற்பாட்டை முன்னெடுக்கப்பட வேண்டும், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவர்களை இனங்கண்டு அவர்களை சமுகத்தில் இருந்து ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போன்ற பிரேரணைகள் முன்மொழியப்பட்டு அவை தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது. மேலும் பாடசாலை மாணவர்களது சிகை அலங்காரங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன், எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக சிகை அலங்காரம் செய்யப்படுவதனை உறுதிப்படுத்துவதுடன், அது தொடர்பில் சிகை அலங்கார நிலைய உரிமையாளர்களுக்கு அறிவிப்பதாகவும், பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் 462வர்த்தக நிலையங்களை பதிவுகளை மேற்கொண்டு அனுமதியினைப்பெற்றுள்ளதாகவும், ஏனைய பதிவுசெய்யப்படாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் போராளிகள் பலர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையிலும், தொடர்ந்தும் அவர்களை கைதுசெய்கின்ற, விசாரணைகளை மேற்கொள்கின்ற நிலை தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. இதனால் முன்னாள் போராளிகள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது தவிர்க்கப்பட வேண்டுமென்பதனை வலியுறுத்தி மத்திய அரசாங்கத்திற்கு கடிதத்தினை அனுப்புவதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.