வடக்கு மக்களை புலிகள் எனும் கண்ணோட்டத்தில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்

தெற்கில் கிளர்ச்சி செய்தவர்கள் மீதான பார்வை மாற்றமடைந்ததைப்போல, வடக்கில் யுத்தம் செய்தவர்கள் மீதான பார்வையும் மக்களிடத்தில் மாறவேண்டுமென உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

”30 வருடகால யுத்தம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. இந்தநிலையில், அனைவரையும் இணைத்துக்கொண்டு ஐக்கியமாக பயணிக்கவேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.

எனினும், சில ஊடகங்கள் இந்த கடமையை நிறைவேற்ற முன்வருவதில்லை. தற்போது நாட்டில் யுத்தம் இல்லை. அப்படியிருக்கும்போது இனியும் வடக்கு மக்களை புலிகள் எனும் கண்ணோட்டத்தில் பார்ப்பதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

தெற்கிலும் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கானவர்கள் தேவையில்லாமல் கொல்லப்பட்டனர். ஆனால், நாம் இந்த கிளர்ச்சிக்குக் காரணமானவர்கள், அதனை மேற்கொண்டவர்கள் என அனைவரையும் இன்று மன்னித்துவிட்டோம். கொழும்பு, விஹாரமாதேவி பூங்காவில் வைத்தே கார்த்திகை வீரர்கள் நினைவுகூரப்படுகின்றனர். அப்படியிருக்கும்போது, வடக்கை மட்டும் ஏன் நாம் வேறு ஒரு கோணத்தில் பார்க்கவேண்டும்?

ஐக்கிய தேசியக் கட்சியானது இந்த நாட்டில் அனைத்து இன மக்களுக்கும் சொந்தமான ஒரு கட்சியாகும். நாம் இனிமேல், பேதங்களை பாராது ஐக்கியமாகப் பயணிக்க வேண்டும்” என்றார்.

நன்றி

ஆதவன்