தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு மாநகரசபையின் 2019ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்றைய தினம் 23 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.
மாநகரசபையின் வரவுசெலவுத் திட்டத்திற்கான விசேட அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது மாநகரசபையின் 20 வட்டாரங்களுக்குமான அபிவிருத்திகள் தொடர்பில் மாநகர முதல்வரினால் விளக்கம் அளிக்கப்பட்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வரவு செலவுத் திட்டத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேற்சைக் குழுக்கள் என்பன ஆதரித்தன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன எதிர்த்து வாக்களித்தன. ஆதரவாக 29 வாக்குகளும் எதிராக 06 வாக்குகளும் பெறப்பட்டு மேலதிகமாக 23 வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. 03 உறுப்பினர்கள் சபை அமர்விற்கு வருகை தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.