அழிந்து போகும் அம்பாறை ஆலங்குளம் சிவன் கோயில்!

0
770
அம்பாரை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆலங்குளம் முஸ்லிம் (
அட்டாளைசேனை பிரதேச செயலகம்) பிரதேசத்தில் காணப்படும் சிவன் கோவில் இன்று
அழிந்து போகும் நிலையிலுள்ளது.
பரந்து விரிந்திருக்கும் ஆலமரம் அதனருகில் அழகிய கோயில் விழுதுகளால்
சுற்றி வளைக்கப் பட்டிருக்கும் இடிந்த கட்டிடத் துண்டங்கள் என அந்த
புராதன காலத்தை மீட்டுப்பார்க்கிறது.
அந்த தொல் நிலத்தை மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும் என இந்துக்கள்
அபிமானிகள் விரும்புகிறார்கள்.
நம் மூதாதையர்களின் காலடிகளை பின் தொடர்ந்து தமிழர் அடையாளங்களை பேணுவோம்
என்று கூறும் அவர்கன் இந்து கலாசார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும்
பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தொல்பொருளியலாளர் என்கே.திருச்செல்வம்
உள்ளிட்டோர் கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகின்றனர்.
அம்பாறை மாவட்ட இந்து அமைப்புகள் அதில் கவனம் செலுத்துவார்களா ? என்று
இந்துக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது தொடர்பாக என்.கே.எஸ்.திருச்செல்வம் (வரலாற்று ஆய்வாளர்.) அவர்களிடம் கேட்டபோது அவர் பல தகவல்களை இவ்வாறு கூறுகிறார்.
அக்கரைப்பற்று நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் மேற்குப் பக்கத்தில் ஆலங்குளம் கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தின் பண்டைய பெயர் ஆலடிக்கல் என்பதாகும். இங்கிருந்த ஆலமரத்தின் கீழ் ஒரு சிறிய பாறை அமைந்து இருந்தபடியால் இவ்விடம் ஆலடிக்கல் எனப் பெயர் பெற்றது.
இங்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்பு தமிழ் மக்கள் சிலர் வாழ்ந்து வந்தனர். இவ்விடத்தின் அருகில் அவர்களின் நெற்காணிகள் இருந்தபடியால் இங்கிருந்த ஆலமரத்தின் கீழ் ஓர் கல் பிள்ளையாரை ஸ்தாபித்து பூஜித்து வழிபட்டு வந்தனர். இந்தப் பிள்ளையார் கோயில் ஓர் திறந்தவெளி மரக் கோயிலாக அமைந்திருந்தது.
1871ஆம் ஆண்டு ஆலடிக்கல் எனப் பெயர் பெற்றிருந்த இந்த இடம் 1891 ஆம் ஆண்டு ஆலையடிக்கல் எனவும் 1901ஆம் ஆண்டு ஆலையடிக் குளம் எனவும் திரிபடைந்துஇ தற்போது  ஆலங்குளம் என அழைக்கப்படுகின்றது.
 1891 ஆம் ஆண்டு இப்பகுதியில் 25 தமிழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 1901ஆம் ஆண்டு இங்கு 20 பேர் இருந்தமை பற்றி இலங்கை குடிசன மதிப்பீடு கூறுகின்றது.
கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கல்லோயா அபிவிருத்தி சபை உருவாக்கப்பட்டு இங்கினியாகல என்னுமிடத்தில் சேனநாயக்க சமுத்திரம் கட்டப்பட்டது. இது 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்பு இங்கினியாகல முதல் அக்கரைப்பற்று வரையான பகுதியில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டபோது இங்குரானை என்னுமிடத்தில்  சீனித் தொழிற்சாலையும் கட்டப்பட்டது.
சேனநாயக்க சமுத்திரத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் அதன் வலது கரை கால்வாய் மூலம் பாதாகொடை குளம்இ அளஹேன குளம்இ மலையடிக் குளம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டது. மேலும் இறக்காமம் குளம்இ இலுக்குச்சேனைக் குளம் ஆகியவற்றின் நீர் கால்வாய்கள்  மூலம் அக்கரைப்பற்றின் வடக்கிலுள்ள வலது கரை நெற்காணிகளுக்கும் கிடைக்கும் வகையில் கால்வாய்கள் வெட்டப்பட்டன.
இக்காலகட்டத்தில் அதாவது 1955ம் ஆண்டளவில் ஆலங்குளம் பகுதியில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.
இதன்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் சைவப் பெரியவர் இங்கு உயர் அதிகாரியாக் கடமையாற்றினார். இவர் இங்கிருந்த சைவ மக்களின் துணையுடன் ஆலமரத்தின் கீழ் திறந்த வெளியில் அமைந்திருந்த பிள்ளையாருக்கு ஒரு கோயிலை கட்டி பூஜை வழிபாடுகள் நடைபெற ஏற்பாடு செய்தார்.
அதன்பின்பு இக்கோயில் இப்பகுதியிலிருந்த சைவ மக்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வழிபடப்பட்டது. அதே சமயம் ஆலங்குளத்தில் அருகில் இருந்த அட்டாளச்சேனை பகுதி மக்களும் இப்பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் காலத்துக்காலம் இங்கிருந்த இரு இனங்களுக்கும் இடையில் ஏற்பட்ட சில கசப்புணர்வு சண்டையாக மாறிஇ ஒரு கட்டத்தில் ஆலங்குளத்தில் இருந்த சைவ மக்கள் பலர் இக்கிராமத்தை விட்டு வெளியேறினர். அதன்பின்பு இங்கு முஸ்லிம் மக்களே  பெரும் பான்மையாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் இங்கிருந்த பிள்ளையார் ஆலயமும் கைவிடப்பட்டு  அழிவுற்றது. தற்போது  கருவறை மீது ஆலமரத்தின் விழுதுகள் வளர்ந்து ஆலய கட்டிடமும் இடிந்து சிதைந்து காணப்படுகின்றது.
சுமார் 150 வருட  பாரம்பரியமிக்க இந்தப் பிள்ளையார் ஆலயம் இன்று பொலிவிழந்து சிதைந்து காணப்படுகிறது. ஒரு காலத்தில் சீரும் சிறப்புடன் விளங்கிய இவ்வாலயம் மீண்டும் கட்டியெழுப்ப படுமா?….