அறிவுறுத்தலை மீறி கடலுக்குச் செல்லும் மீனவர்கள்

0
443

அம்பாறை மாவட்டத்தில் நிலவி வந்த சீரற்ற காலநிலை தற்போது குறைவடைந்து பொதுமக்கள் தமது இயல்பு நிலைமைக்கு திரும்பி வருகின்றனர்.

 

இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கடற்றொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையிலும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் இன்றைய தினம்(12) கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதை காண முடிகின்றது.

 

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கடற்பரப்பு வழமை நிலையில் இருப்பதால் மீனவர்கள் தமது தொழில் மும்மூரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

தென் வங்காளவிரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காகக் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விரிவடைந்து வடக்கு-வடமேற்கு திசையில் தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமணிடலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட வானிலை அதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.

 

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புக்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதுடன், இக்கடற் பரப்பின் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடிய நிலைமை காணப்படுவதால் இச்சந்தர்ப்பங்களில் கடற்பிரதேசம் ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படுமெனவும்  வளிமணிடலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் மீனவரகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக தமது வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிப்படைந்திருந்தாகவும் தற்போது சீரான காலநிலை நிலவுவதால் தாம் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்துவில், நிந்தவூர், சாய்ந்தமருது, காரைதீவு, கல்முனை மற்றும் மருதமுனை பிரதேசங்களில் கடற்றொழிலாளர்கள் தமது அன்றாட மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதை அவதானிக் முடிந்தது.

 

சீரான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை சீரான முறையில் மேற்கொண்டு வருவதோடு, சந்தைகளில் பொருட்கொள்வனவில் ஈடுபட்டு வந்தமையினையும் காண முடிந்தது.