மண்முனை தென்மேற்கு பிரதேச சபை, தமக்கு தேவையான காணியை ஒழுங்கு முறையில் கோரவில்லை

மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்படும் உக்கக்கூடிய கழிவுகளை சேகரித்து வைப்பதற்கான இடத்திற்கான காணியை, பிரதேசசபை ஒழுங்குமுறையில் இன்னமும் கோரவில்லையென மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச தினக்கூட்டம் இன்று(11) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற போதே இதனைக்குறிப்பிட்டார்.
பிரதேச செயலாளர் தொடர்ந்தும் கூறுகையில்,
அரச காணிகளை பகிர்ந்தளிப்பதற்கான அதிகாரம் பிரதேச செயலாளருக்கு உள்ளது. இதன் பொருட்டு திணைக்களங்கள் தமக்கு தேவையான, தாம் இருக்கின்ற அரசகாணிகளுக்கான அனுமதியினை பிரதேச செயலாளரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு உரிய திணைக்களத்தின் செயலாளர் எழுத்துமூலம் பிரதேச செயலாளரிடம் கோரவேண்டும். அவ்வாறு கோரப்படுகின்ற போதே அதற்கான அனுமதியினை வழங்கமுடியும்.

மண்முனை தென்மேற்கு பிரதேசசபைக்கு குப்பை கொட்டுவதற்கு காணி தேவையுள்ளதாக கூறியிருக்கின்றனர். ஆனால் இதுவரை தமக்கு தேவையான காணியினை உரிய அமைச்சின் செயலாளரின் ஊடாக இன்னமும் கோரவில்லை என்றார்.

குறித்த தினக்கூட்டத்தில் அரச, அரசார்பற்ற திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமையுடன், அவர்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. இதன்போது, மாணவர்கள் பாடசாலைக்கு யாருடன் சமுகம் கொடுக்கின்றனர் என்பது தொடர்பில் அதிபர், ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்பதுடன், ஆண்பிள்ளைகள் கல்வியினை இடைநடுவில் நிறுத்துகின்ற செயற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும் கூறப்பட்டது. மேலும், பிரதேசத்தில் டெங்கு, மதுபோதை போன்றவற்றினை ஒழிப்பதற்கான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுக்குமாறும் பிரதேச செயலாளரினால் வலியுறுத்தப்பட்டதுடன், மந்தபோசாக்கு, யானைவேலிப்பிரச்சினை, வீடமைத்தலுக்கான நிதிவழங்கல் தொடர்பிலும் உரிய கவனத்தினைச் செலுத்துமாறும் உரிய திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கூறப்பட்டது.