வாழைச்சேனையில் மழைக்கு மத்தியில் மாற்றுத் திறனாளிகள் தினம்

உலகளாவிய ரீதியில் மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை ஒரு பில்லியனாக உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலகமும், வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு இணைந்து சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று வெள்ளிக்கிழமை பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தர்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

உலகளாவிய ரீதியில் மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை ஒரு பில்லியனாக உள்ளது. இந்த தொகையாக உலக சனத்தொகையில் 15 வீதமாக இருக்கின்றது. இதில் முக்கிய குழுவினர்களாக மாற்றுத் திறனாளிகள் காணப்படுகின்றனர்.

இலங்கையை பொறுத்த வரையில் பதினாறு இலட்சத்து பதினேழாயிரத்து தொல்லாயிரத்து இருபத்தி நான்கு (1617924) பேர் மாற்றுத் திறனாளிகள் என இனங்காணப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் பத்தொன்பதாயிரத்து மேற்பட்டவர்கள் காணப்படுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாயிரம் பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு பெரிய தொகையினர் எங்களுடைய சமூகத்துடன் இணைந்து வாழ்;ந்து வருகின்றனர். இவர்களை அரவணைத்து எமது சமூகத்திலே விசேட திறமையுடையவராக இனங்கண்டு அவர்களுக்கு தேவையானவற்றை அனைவரும் ஒன்றிணைந்து செய்து கொடுக்க வேண்டும்.

மாற்றுத்திறனாகளின் திறமைகளை எங்களுடைய பிரதேச அபிவிருத்திக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். அனைவரும் ஒன்றிணைந்து மாற்றுத்திறனாகளின் திறமைகளை வெளிக்கொணர பாடுபட வேண்டும் என்றார்.

மாற்றுத்திறனாகளிகளை வலுவூட்டல் மற்றும் உள்வாங்கல், சமத்துவத்தை உறுதிப்படுத்தல் அதற்காக பாடுபடுவோம், குரல் கொடுப்போம் பயணிக்க தயார் ஆனால் நாம் எல்லோரும் தயாரா என்ற தொனிப்பொருளில் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமான பேரணியானது மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வழியாக வாழைச்சேனை துறைமுகம் வரை சென்றது.

வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் சி.பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் வ.வாசுதேவன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிரூபா பிருந்தன், கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்கள சிரேஸ்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார், கோறளைப்பற்று சமூக சேவை உத்தியோகத்தர்களான திருமதி.சி.சிவநாயகம், க.ஜெகதீஸ்வரன், செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல், கண்பார்வையற்ற 12 பேருக்கு அன்பளிப்புக்கள், அங்கங்களை இழந்த 18 பேருக்கு அன்பளிப்புக்கள், கிராம ரீதியாக தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அன்பளிப்புக்கள், படுக்கையில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அன்பளிப்புக்கள் என்பன வழங்கி வழங்கப்பட்டது.

இங்கு வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பால் மாற்றுத்திறனாளிகளாக இருந்து கொண்டு சிறந்த சமூக சேவை மற்றும் சுயதொழில் புரிவோரை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், கோறளைப்பற்று மத்தி சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் வி.செல்வநாயகம், வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் சி.பரமானந்தம், ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.