வவுணதீவு சூட்டுச் சம்பவம்திட்டமிட்ட சதி-பாராளுமன்றில் ஸ்ரீநேசன்

கடந்த வாரம் வவுணதீவு பிரதேசத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை ஒரு திட்டமிட்ட சதியாகவே தாம் கருதுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

தமிழ் மக்களிடையே பய பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்துத்துவதற்காக   இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களிடையே நிலவும் அமைதியினை சீர்குலைத்து,தமிழ் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நோக்குடனேயே இச் சம்பவம் செய்யப்பட்டுள்ளது எனக் கருத வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அத்தோடு கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு, கடந்த சில வருடங்கள்  சற்று நிம்மதியாக வாழ்ந்து வந்த காலகட்டத்தில் ,ஜனாதிபதியால் புதிய அரசு ஓன்று ஏற்படுத்தப்பட்ட வேளையில் இக்கொலைகள் இடம்பெற்றுள்ளமை சந்தேகத்திடமானதாகும் .புனர்வாழ்வு பெற்று அமைதியாக வாழும் முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து, இச்சம்பவம் செய்யப்பட்டுள்ளதா எனவும் நாம் சந்தேகிக்கிறோம்.இச்சம்பவத்தின் பின்னர் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பல கிராமங்களிலும் பாதுகாப்பு படையினர் தேடுதல்களை செய்துள்ளனர்.பிரதேசத்தில் பதட்டமான நிலமை ஏற்பட்டுள்ளது.

இக்கொலைகளை செய்தவர்களை கைது செய்தது சட்டத்தின் முன் நிறுத்தி  உரிய தண்டனை பெற்று கொடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.