மனோவின் கேள்வியும் மைத்திரியின் மௌனமும்

<நேற்று நடந்தது>

நேற்று இரவு ஐதேமு-மைத்திரி பேச்சின் போது, மைத்திரி திரும்ப, திரும்ப தனக்கும், ரணிலுக்கும் இடைப்பட்ட முரண்பாடுகளை வரிசைப்படுத்திக்கொண்டே வந்தார்.

போதாததுக்கு, அமைச்சரவை அமைச்சர்களான உங்களுக்கு இவை எல்லாம் தெரியும்தானே என எம்மையும் துணைக்கு அழைத்து பேசிக்கொண்டே போனார்.

எல்லோரும் பேசினார்கள். நான் ஆரம்பத்தில் பேசவில்லை. இனி இது தொடர்பில் இவரிடம் பேசுவது என்பது நேரத்தை வீணடிக்கும் செயல் என நான் மௌனமாகவே கேட்டுக்கொண்டு இருந்தேன்.

ஒரு கட்டத்தில், மௌனத்தை கலைத்து பேசினேன்.

ஜனாதிபதி அவர்களே! ஐதேமு என்பதுக்கு உள்ளே ஐதேக மட்டும் இல்லை. தமுகூ, ஸ்ரீலமுகா, அஇமகா, ஹெல உறுமய, ராஜித-அர்ஜுன குழு என 23 எம்பீக்கள் இருக்கிறோம்.

நாம் அனைவரும் உங்களுக்காக 2015ம் வருடம், நாடு முழுக்க ஓடோடி கடுமையாக தேர்தல் பணி செய்தவர்கள். ஐதேக ஆதரவு மட்டுமல்ல, எங்கள் மக்களும் உங்களுக்கு பெருவாரியாக ஆதரவு வழங்கினார்கள்.

உங்களுக்கும், பிரதமர் ரணிலுக்கும் பிரச்சினைகள் இருந்தது ஓரளவு எங்களுக்கு தெரியும். ஆனால், 2015ம் வருடம், நாம் ஒன்று சேர்ந்து தோற்கடித்த மகிந்தவை அழைத்து வந்து பிரதமராக நியமிக்கும் அளவுக்கு அந்த முரண்பாடு இருந்தது என எங்களுக்கு தெரியாது.

எனவே உங்கள் இந்த செய்கை எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

என் கேள்வி இதுதான்.

ஐதேகவை தவிர்த்து எங்களை மட்டுமாவது அழைத்து, பிரதமர் ரணிலுடனான உங்கள் முரண்பாடுகளை, இன்று சொல்வதை போல், நீங்கள் ஏன் விலாவாரியாக எடுத்து கூறவில்லை? இந்த முரண்பாடுகள் தீராவிட்டால், நீங்கள் ஒரு கடும் முடிவை எடுக்க நேரிடும் என எமக்கு ஏன் தெரிவிக்கவில்லை?

அப்படி நடந்திருந்தால், நாங்கள் உங்களுக்கும், பிரதமருக்கும் இடையில் இருந்த முரண்பாட்டில் தலையிட்டு இருப்போமே!

என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சிங்கள மொழியில் நேரடியாக கேட்டேன். அவர் எந்த ஒரு பதிலும் எனக்கு சொல்லவில்லை. என் முகத்தை ஒரு கணம் உற்று பார்த்துவிட்டு, அடுத்த விஷயத்துக்கு போய் விட்டார். அடுத்த ஐந்து நிமிடத்தில் பேச்சுவார்த்தை முடிந்தது.

என்னுடன் ரவுப், ரிஷாத், திகா, கபீர் ஆகிய தமிழ், முஸ்லிம் எம்பிக்களும் அங்கே அமர்ந்திருந்தார்கள். அவர்களை தவிர, சஜித், ரவி, லக்ஸ்மன், அகில, மலிக், கயந்த, ராஜித, அர்ஜுன ஆகிய எம்பிக்களும் இருந்தார்கள்.

(இரவு 8 மணியளவில் நாம் ஜனாதிபதி செயலகத்துக்கு உள்ளே நுழையும் போது, அங்கிருந்து நிமல், தயாசிறி, மகிந்த சமரசிங்க ஆகியோர் வெளியேறினார்கள்)

மனோகணேசனின் முகப்புத்தகத்திலிருந்து