அகவை அறுபதில் வலயககல்விப பணிப்பாளர் பாஸ்கரனுக்கு மணிவிழா

0
1084

-கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா

1958ம் ஆண்டு மார்கழி மாதம் 05ஆம் திகதி மட்டக்களப்பு களுதாவளை கிராமத்தில் கணபதிப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த க.பாஸ்கரன் தனது ஆரம்பக் கலவியை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் தொடங்கி உயர்தரத்தை விஞ்ஞானப் பிரிவில் கற்றார்.

வெளிவாரிப் பட்டப்படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்று கலைப் பட்டதாரியாகி பட்ட பின்படிப்பையும் பூர்த்தி செய்து கல்வி தொடர்பான பல்வேறு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்களையும் பெற்று உடற்கல்வி ஆசிரியராக பணியைத் தொடங்கினார்.

தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டக் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா, பட்டப் பின் கல்வி டிப்ளோமாவையும் பெற்றுக் கொண்டார்.

பின்பு தொலைக்கல்விப் போதனாசிரியராக மட்டக்களப்பு கல்வித்திணைக்கள அலுவலகத்தில் செயற்பட்டதுடன், 90 களில் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்று மட்டக்களப்பு உடற்கல்வித் துறையை மிகச் சிறப்பான முறையில் முன்னேற்றினார்.

அத்தோடு பல மாவட்ட, மாகாண, தேசிய மட்ட வெற்றிகளை மட்டக்களப்பு மாவட்டம் பெற்றுக்கொள்ளக் காரணமாக இருந்தார்.

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நிருவாகத்துக்குப் பொறுப்பாக இருந்த பாஸ்கரன் 2011ல் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையேற்று, இலங்கையின் பின்தங்கிய கல்விப் பிரதேசமான மட்டக்களப்பு மேற்கு வலயத்தினை மிகுந்த சிரமத்தின் மத்தியில் தான் கடமையேற்று 6 மாத காலப்பகுதியில் 97வது இடத்திற்கு முன் நகர்த்தினார்.

அவரது அயராத முயற்சியும் சேவை நோக்கும் உதவி புரியும் உள்ளமும் நட்புடன் பழகும் மனப்பாங்கும் இந்த மண்ணின் மைந்தனாக அடையாளம் காட்டியது.

மட்டக்களப்பு மண்ணின் எழுச்சிக்காக மிகப்பற்றுறுதியுடன் பல்வேறு இடையூறுகளின் மத்தியில், சவால்களுக்கு முகம்கொடுத்து தனது வளர்ச்சிப்பாதையில் அயராது உழைத்தார்.

தன்னுடைய கருத்துக்களோடு உடன்பட்ட அனைவரையும் ஓரணி திரட்டி மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் மறுமலர்ச்சிக்கு உரம் ஊட்டினார்.

சைவத்தையும், தமிழையும் மிகுந்த ஆர்வத்துடனும் பற்றுறுதியுடன் புத்துயிரூட்டினார். அந்த வகையில் 2014ல் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராகப் பதவியேற்றார்.

தனது காலத்தில் மட்டக்களப்பு வலயத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரலாறு காணாத அடைவு மட்ட உயர்ச்சியை ஏற்படுத்தினார்.

பல்வேறு விமர்சனங்களின் மத்தியிலும் எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் தனது கருத்துக்களையும், நோக்கங்களையும், செவ்வனே இன்முகத்துடனும், நட்புடனும் எடுத்துச் சென்றார். மிகுந்த சவால்களையும் போராட்டங்களையும் விமர்சனங்களையும் தனது கடமை நாட்களில் எதிர்கொண்ட பாஸ்கரன், மகிழ்ச்சியோடும் புத்துணர்வோடும் சவால்களுக்கு முகம் கொடுத்து சிறப்பான முறையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தை வழி நடத்தினார்.

இலங்கை ஆசிரிய துறையிலும், கல்வித்துறையிலும் ஏனைய துறைகளுடனும் அவருடைய அணுகுமுறைகள் அவரை ஒரு சிறந்த நண்பனாகக் காட்டியது.

ஏழை எளியவர் என்ற பாகுபாடின்றி, கற்றவன், கல்லாதவன் என்ற வேறுபாடின்றி அதிகாரி தொழிலாளி என்ற வர்க்க வேறுபாடின்றி அனைவருடனும் நட்புடைமையுடனும், கடமையுணர்வுடனும் பழகினார்.

சத்திய வழியும், மதப்பற்றும், சகோதரத்துவ மனப்பான்மையும் உதவி புரியும் மனோபாவமும், அவர சமூக மட்டத்தில் மிகப்பெரும் தொண்டனாகிய தலைவனாக மேலெழுப்பியது அந்தத் தொண்டனுக்கு இன்று மணிவிழா.

மணிவிழாக்காணும் மிகப்பெரும் தலைவனாகிய பாஸ்கரனுக்கு கல்வியுலகு தலைவணங்கி வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறது.