2018ம் ஆண்டில் 2126.56 மில்லியனில் 4828 வேலைத்திட்டங்கள் – மட்டு அரச அதிபர்.

0
627
மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டில் 4828 வேலைத்திட்டங்கள் இனங்காணப்பட்டு 2126.56 மில்லியன் ரூபா நிதியில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 67 வீதமான பௌதீக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை விசேட மீளாய்வுக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதம கணக்காளர், கே.ஜெகதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் கணக்காளர்கள், பிரதி மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்டோரும் பங்கு கொண்டனர்.
இதன் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் 39 தலைப்புகளின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற அபிவிருத்தித்திட்டங்களின் வேலை முன்னேற்றம் தொடர்பாகவும் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர்,
மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டில் 4828 வேலைத்திட்டங்கள் இனங்காணப்பட்டு 2126.56 மில்லியன் ரூபா நிதியில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதில் சுமார் 600 மில்லியன் ரூபாய்கள் நிதி செலவிடப்பட்டுள்ளது.  அதிகமான வேலைத்திட்டங்கள் முடிவுறும் தருவாயில் இருக்கின்றன. அனேகமான வேலைத்திட்டங்கள் இந்த வருடத்தில் நிறைவுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.
குறிப்பாக பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டம், மீள்குடியேற்ற வேலைத்திட்டம், கம்பெரலிய, கிராமசக்தி வேலைத்திட்டம்,  மக்களுடைய அடிப்படை வசதிகள், உட்கட்டுமானம் தொடர்பான அனைத்து வேலைத்திட்டங்களும் ஒவ்வொன்றாக ஆராயப்பட்டது.
67 சதவீதமான பௌதீக முன்னேற்றங்களை நாங்கள் அடைந்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் நிதிச் செலவீனங்களும் போதியளவில் நடைபெற்றிருக்கின்றன. முன்னெடுக்கப்பட்டுள்ள ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இவ் வருடத்திற்குள் நிறைவுறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தின் போது , வேலைத்திட்டங்களை விரைவாக பூரணப்படுத்துதல் தொடர்பாகவும், அவற்றில் உள்ள இடர்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், மேலதிக செயற்பாட்டின் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டது.