கொக்கட்டிச்சோலையில் அருகிவரும் பாரம்பரிய போசாக்கு கண்காட்சி

0
616

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அருகிவரும் பாரம்பரிய போசாக்கு உணவுக்கண்காட்சி இன்று(26) திங்கட்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

பல்துறைசார் போசாக்கு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற தானியங்கள், இலைவகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட 150க்கு மேற்பட்ட உணவுப்பண்டங்கள் இதன்போது கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற, இக்கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் வைபவரீதியாக திறந்து வைத்து பார்வையிட்டார்.

வேள்ட்விஸன் நிறுவனத்தின் அனுசரணையுடன், அன்னையர் குழுவினரால், குறித்த உணவுப்பண்டங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. ஒரு தானியத்தினைப் பயன்படுத்தியே 10க்கு மேற்பட்ட உணவுப்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போசாக்கு குறைவான பிள்ளைகளின் போசாக்கினை அதிகரிப்பதற்காக பிள்ளைகளுக்கு வழங்கவேண்டிய உணவு, அதன் அளவு தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், அதுதொடர்பிலான பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நிகழ்வில் பிரதேசத்தினைச்சேர்ந்த பெண்கள் பலர் கலந்துகொண்டிருந்தமையுடன், பாடசாலை மாணவர்களும் பங்கேற்றிருந்தனர். கலந்துகொண்டிருந்த அனைவருக்கும் உள்ளுர் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கஞ்சியும் வழங்கப்பட்டது. மேலும், கலாசார மண்டப வளாகம் அமைந்துள்ள பகுதியில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.