இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மட்டக்களப்பில் நினைவுத்தூபி

0
722

(க.விஜயரெத்தினம்)
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மட்டக்களப்பில் நினைவு தூபி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட உள்ளது.        மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முயற்சியில் முன்னெடுக்கப்பட உள்ள மேற்படி நினைவு தூபி அமைக்கும் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(25.11.2018)காந்தி பூங்காவிற்கு முன் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் காசித்தம்பி-சித்திரவேல்,மாநகரசபை பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன், ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு நினைவுத்தூபிக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டக்களப்பு மாநகரசபையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.                     மாநகரசபையின் அனுமதியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களின் நிதிப்பங்களிப்புடன் தூபி கட்டிமுடிக்கப்படவுள்ளது.

வரலாற்றில் ஊடகவியலாளர்களின் பணி மகத்தானது.அதுவும் இலங்கையைச் சேர்ந்த  ஊடகவியலாளர்கள் பலர் உண்மைகளை வெளிக் கொண்டு வந்தமைக்காக படுகொலை செய்யப்பட்ட மிக மோசமான பதிவுகள் அதிகமாக உள்ளது.

வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறக் கூடாது என்பதற்காகவும், உண்மைக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த அந்த உத்தம ஊடகவியலாளர்களை வரலாற்றில் என்றும் மறக்க கூடாது என்பதற்காகவும், இந்த நினைவு தூபி அமைக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.