மட்டு மாவட்டத்தில் சோளம் பயிரை தாக்கும் “பட்டாளப்புழு”

0
432

மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் விரிவாக்கல் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் உப உணவுப் பயிர்களின் நோய் தாக்கம் தொடர்பில் தெளிவூட்டும் கருத்தரங்கு மட்டக்களப்பு சத்துருகொண்டான் விவசாய பயிற்சி நிலையத்தில் திங்கட்கிழமை (19.11.2018 ஆம் திகதி நடைபெற்றது.

இக் கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் உதவி விவசாயப் பணிப்பாளர்கள், விவசாயப் போதனாசிரியர்கள் உள்ளிட்ட விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு நடாத்தப்பட்டது.

தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உப உணவுப் பயிர் செய்கை, சேனைப் பயிர் செய்கை ஆரம்பமாகியுள்ளது.

இந்த பயிர் செய்கையில் பிரதானமாக சோளம் செய்கை பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, இச் சோளம் செய்கையில் கடந்த ஆண்டுகளில் இல்லாத பட்டாளப்புழு எனும் நோய் தாக்கம் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் மலையார்கட்டு, பாலையடிவட்டை பிரதேசத்தில் பரவியுள்ளதனை கண்டுபிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக தெளிவுபடுத்தும்வகையில் இக் கருத்தரங்கில் விளக்கமளிக்கப்பட்டது.

இங்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராசா தெரிவிக்கையில்,

“பட்டாளப்புழு” எனும் நோய் தாக்கம் அம்பாறை மாவட்டத்தில் அதிகம் காணப்படுகின்றது, இது தற்போது எமது மாவட்டத்தின் மண்டூர் பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ளது, இது தொடர்பில் விவசாயிகள் மிக எச்சரிக்கையுடன் விழிப்பாள இருக்க வேண்டும்.

இந் நோய் எமது மாவட்டத்தில் ஏனைய பிரதேசத்திற்கும் பரவாதிருக்கும் வகையில் விவசாயிகளுக்கு மாவட்ட ரீதியில் தெளிவுபடுத்தும் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய வலயங்களிலும் நடைபெறவுள்ளது என பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராசா தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை 21ஆம் திகதி மலையார்கட்டு, பாலையடிவட்டை பிரதேசத்திலும் எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் வடக்கு வலயத்திலுள்ள வெருகல், ஈரலக்குளம் பிரதேசத்திலும், எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை மத்தி வலயத்திலுள்ள சில்லிக்கொடியாறு, ஒளிமடு, பெரியபுல்லுமலை பிரதேசத்திலும் ஆரம்பக்கட்டமாக நடைபெறும் இதில் பிரதேச விவசாயிகள் கலந்துகொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும் எனவும் பிரதி விவசாயப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உயிரியல் துறை தலைவர் கலாநிதி. ரொட்ணி நிரஞ்சனா, மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராசா போன்றோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.