அடிக்கடி ஏற்படும் மின் தடையால் மக்களுக்கு சிரமம்

0
579

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் – செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட பிரதேசங்களில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் அனைவரும் அன்றாட அலுவல்களில் அதிக சிரமத்தை எதிர்நோக்குவதாக மின் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த பல மாதங்களாக ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட பிரதேசங்களில் பிரதி வியாழக்கிழமை தோறும் முழு நாளும் இருந்து வந்த மின் துண்டிப்பு இப்பொழுது வாரத்தின் மேலும் ஒரு தினத்திலும் அமுலாக்கப்படுவது குறித்து மின் பாவனையாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

அதற்கும் மேலதிகமாகவே தற்போது தினமும் திடீர், திடீரென மின்விநியோகம் தடைப்படத்தப்படுவதால் அதிக அசௌகரியங்களை மின் பாவனையாளர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதன் காரணமாக பல மின்னியல் சாதனங்களும் பழுதடைந்து விடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னறிவித்தல் ஏதுமின்றி அடிக்கடியும், சிலவேளை குறுகிய நேரமாகவும் சிலபோது ஒரு மணி நேரத்திற்குக் குறைவாகவும் அல்லது கூடுதலாகவும் இந்த மின் தடை ஏற்படுத்தப்படுவதாக மின் பாவனையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக இரவு, பகல் பாராது திடீர் திடீரென மின் தடைப்படுத்தப்படுகின்றது.

தற்போது ஆண்டிறுதிப் பரீட்சைக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கும் தங்களைத் தயார்படுத்தும் மாணவர்கள் இத்தகைய முன்னறிவித்தலின்றிய திடீர் மின் துண்டிப்பால் அதிக அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இந்த திடீர் மின் தடை குறித்து ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்துடன் தொடர்பு கொண்டு கேட்டால் வழமையான திருத்த வேலைகள், அல்லது மின் அழுத்தங்கள் கூடிக்குறையும்போது ஏற்படும் நிகழ்வுகள் என பதிலளிக்கப்படுகின்றது.

மின் விநியோக விஸ்தரிப்பு வேலைக்காக மின்சாரம் தடைப்படுத்தப்படுவதாக மின்சார சபையினர் தெரிவிக்கின்றனர்.