மட்டக்களப்பு தமிழன், யாழ்ப்பாண தமிழன்என்று தமிழர்கள் வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. மட்டக்களப்பில் அமைச்சர் மனோ கணேசன்

0
887

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அபிவிருத்தியில் பாராபட்சம் காட்டப்படுள்ளமை அங்கு செல்லும் போது கண்கூடாக காணமுடிகிறது அதன் காரணமாக எனது அமைச்சிலுள்ள நிதிகளை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பேன் என தேசிய நல்லிணக்கம் சகவாழ்வு ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா வியாழக்கிழமை (10) கல்லூரி முதல்வர் குமாரசாமி அருணாசலம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடந்த ஆண்டு தமது திறமைகளை வெளிப்படுத்திய 490 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – “அரசியல் தீர்வும் அபிவிருத்தியை சமாந்தரமாக மேற்கொண்டால் மாத்திரமே தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு உறுதி செய்யப்படும். இவ்வாறு இல்லாவிடின் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியிலிருந்து வேடிக்கைபார்ப்பவர்களாகவே இருப்போம்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கினோம் அவர்களிடமிருந்து வளங்களைப் பெறுவதற்கு எமக்கு உரிமை உள்ளது அவர்களிடம் பிச்சை கேட்டு பெறவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. ஆதற்காக தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும்.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஜனாதிபதியை மாற்றுவதற்கு வாக்களித்து புதிய ஜனாதிபதியை உருவாக்கிவிட்டு வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கிறார்கள். இந்த நிலையை நாங்கள் வெகு விரைவில் மாற்றியே தீருவாம். எனது அமைச்சிலுள்ள நிதியை வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டத்தில் வாழும் தமிழ் பிரதேசங்களுக்கு பகிர்தளிப்பேன்.

தமிழ் மக்களின் மொழியையும், மண்ணையும், பொருளாதாரத்தையும், கல்வியையும் கட்டிக்காக்கும் அரசியல் அதிகாரம் தமிழர்களின் கரங்களில் இருக்க வேண்டும் அதன் மூலம் எமது மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியும்.

மட்டக்களப்பு தமிழன், யாழ்ப்பாண தமிழன், கொழும்புத் தமிழன், மலையகத் தமிழன், இந்தியத் தமிழன் என்று தமிழர்கள் வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. நாங்கள் அனைவரும் தமிழர்கள் என்ற இணைப்பால் ஒன்றிணைந்துள்ளோம்.

எங்கள் மத்தியில் பிரிவினைகளைக் கொண்டுவந்து பிரதேசவாதத்தைக் கொண்டுவந்து தமிழர்கள் பிரிந்திருப்போமானால் அந்தப் பிரிவினை எதிரிக்குத்தான் சாதகமாக அமையும்” என்றார்