கருணா அம்மானுக்கு இரு கேள்விகள். பதிலளிப்பாரா

0
878

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாவது சக்திமிக்க தலைவராகவும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவராகவும் ஒரு காலத்தில் திகழ்ந்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தனது போர்க் கால விடயங்கள் சிலவற்றை மட்டும் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் தெரிவித்துள்ளார்.

‘தான் போராடச் செல்லாவிட்டால் இன்று தான் ஒரு மருத்துவராக இருந்திருப்பேன்’ என்ற தனது ஆதங்கத்தையும் வெளியிட்டிருந்தார்.

குறித்த பேட்டியில், ‘உரிமைகளை வென்றெடுக்கப் போராடியது என்றால் புலிகள் அமைப்பு ஏன் பொதுமக்களைக் கொன்றது?’ என்ற ஒரு கேள்வியை குறித்த சிங்கள ஊடகத்தின் ஊடகவியலாளர் எழுப்பிய போது அவர், பல விடயங்களைக் குறிப்பிட்டிருந்ததுடன்,‘பொதுமக்களைக் கொலை செய்வது தொடர்பில் இயக்கத்தில் இருந்த சில தலைவர்களுக்குப் பிரச்சினைகள் இருந்தன’ எனத் தெரிவித்துள்ளார் அதாவது, முரண்பாடான கருத்துகள் காணப்பட்டன என்ற அர்த்தத்தில் அவர் கூறியுள்ளார் என்றே தெளிவுபடலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவதற்கும் மடிவதற்கும் காரணகர்த்தா என பெரும்பாலான தமிழ் மக்களால் அடையாளம் காணப்பட்டு அவர்களால் வெறுக்கப்படும் உங்களிடம் நான் இரண்டு கேள்விகளை இங்கு முன்வைக்கிறேன்.

பொதுமக்களைக் கொலை செய்வது தொடர்பில் இயக்கத்தில் இருந்த சில தலைவர்களுக்குப் பிரச்சினைகள் இருந்தன’ என்று நீங்கள் கூறியுள்ளீர்களே. இந்த நிலையில், அப்பாவி முஸ்லிம்களைக் கொலை செய்வது தொடர்பில் உங்களின் சில தலைவர்களிடையே எவ்வாறான கருத்துகள் காணப்பட்டன? அத்துடன் இது தொடர்பில் நீங்கள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தீர்கள் என்பதனைக் கூறுங்கள்

வடபுலத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேறுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உத்தரவிட்ட போது, அதற்கும் மேலாக ஒருபடி சென்று வெளியேற்றப்படும் முஸ்லிம்களை வெறுங்கையுடன் அனுப்புங்கள் என்று உத்தரவிட்டது யார் என்பதனையும் நீங்கள் அறிந்திராதிருக்க நியாயம் இல்லை. அவ்வாறு உத்தரவிட்டவர் யார் என்பதனையும் நீங்கள் கூறுங்கள்.

எனவே, இந்த இரு கேள்விகளுக்கும் நீங்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பதில் தருவீர்கள் என நம்புகிறேன்.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்