நகர்புற மாணவன் கிராமப் புற பாடசாலையில் கற்று வரலாற்று சாதனை : மாகாணமே திரும்பிப்பார்ப்பு

0
1016

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட உன்னிச்சை 6ம் கட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஜெயராஜ் துகிந்கிறேஸ், வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில், 196புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தினையும், இலங்கைப்பூராகவும் நான்காவது இடத்தினையும் பெற்று, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் வரலாற்று சாதனையை நிலைநாட்டி பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமையை சேர்ந்துள்ளான்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஆசிரியர் ஆளனி பற்றாக்குறையாக உள்ள பாடசாலைகளில், உன்னிச்சை 6ம்கட்டைப் பாடசாலையும் ஒன்றாகும். இருந்தபோதிலும் வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இச்சாதனையை மட்டக்களப்பு நகர் பகுதியினை வசிப்பிடமாக கொண்ட மாணவனே நிலைநாட்டியுள்ளான்.

மாணவர்களை கற்பிப்பதற்காக நகர்புறங்களை நாடி செல்லும் பெற்றோர்கள் பலர் உள்ள நிலையில், நகர்புறத்திலிருந்து வருகைதந்து கிராமப்புற பாடசாலையில், அதிலும், குறிப்பாக வசதி வாய்ப்புக்கள் மிகவும் குறைந்த உன்னிச்சை 6ம்கட்டை பாடசாலையில் கற்றே இம்மாணவன் இச்சாதனையை புரிந்துள்ளான்.

குறித்த மாணவனின் தாயிடம் மாணவனின் சாதனை நிலைநாட்டல் தொடர்பில் வினவியபோது, மட்டக்களப்பு நகர்புறத்தில் தான் வசித்தாலும், உன்னிச்சை 6ம்கட்டை பாடசாலையிலே தரம் -5 மாணவர்களுக்கு கற்பித்து வருவதாகவும், தனது மகனையும் தான் கற்பிக்கும் கிராமப்புற பாடசாலையிலே கற்பித்து சாதனையை நிலைநாட்டிக் காண்பிக்க வேண்டுமென்ற அவாவில், தரம் 1, 2, 3 ஆகிய வகுப்புகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவியநிலையில், தரம் 4ல் அப்பாடசாலையில் மாணவனை இணைத்தாக குறிப்பிட்டார். மேலும், பாடசாலை ரீதியாகவும், கல்வி திணைக்களங்கள் ஊடாகவும் வழங்கப்படும் கற்பித்தலை, வழிகாட்டலைக் கொண்டு, மேலதிக வகுப்புக்கள் இன்றிசாதிக்க முடியுமென்பதனை எடுத்துக்காட்டும் நோக்கிலும் தனது மகனை கிராமப்புறப்பாடசாலையில் இணைத்து இச்சாதனையை நிலைநாட்டியுள்ளாதாக தெரிவித்தார்.

சாதித்த குறித்த மாணவனை, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.மகேந்திரகுமார், க.ஹரிகரராஜ், கோட்டக்கல்விப் பணிப்பாளர் சோமசுந்தரம், உதவிக்கல்விப் பணிப்பாளர் உள்ளிட்டோர் நேரடியாக பாடசாலைக்குச் சென்று வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். இதேவேளை உன்னிச்சைப்பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 148புள்ளிகளை பெற்றுள்ளமையுடன் எட்டு மாணவர்கள் 70புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.