கல்நந்தி புல்லுண்ட மகிமைபெறு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர்.

(படுவான் பாலகன்) திருமூலரால் சிவபூமி என அழைக்கப்பட்ட இலங்கைத் திருநாட்டில் பல சிவ தலங்களும்; அமைந்து இணையில்லா அற்புதங்களையும், அருளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன. கிழக்கிலங்கையிலே மீனினங்கள் கவிபாடும் இயற்கை எழில் கொஞ்சும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே 18கிலோ மீற்றர் தொலைவில் மருதநில மண்வாசமும், கிராமத்து அழகுடனும் கொக்கட்டிச்சோலையில் சுயம்பாக தோன்றி அளவில்லா அற்புதமும், அருள் மழையும் பொழியும் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமே கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆகும்.

இவ்வாலயத்தின் வரலாறு மிகப்பழமையானது என்பதை கல்வெட்டுக்கள் மூலமாகவும், கர்ணபரம்பரைகதைகள் ஊடாகவும், நூல்கள் வாயிலாகவும் அறிய முடிகின்றது. அவ்வகையிலையே குணசிங்கன் என்னும் அரசன் மட்டக்களப்பினை ஆளும் போது கலிங்க ஒரிசா தேசத்தை அரசு புரியும் குகசேனனுடைய புத்திரியாகிய உலகநாச்சி என்பவள் மண்முனையை சிற்றரசு புரிந்த வேளையில் கொக்கட்டி மரங்களால் சூழப்பட்ட ஒரு வனத்திலே திகடன் எனும் வேடுவன் தேன் எடுக்கச் சென்று அங்கு மரத்தினை வெட்டியபோது அதிலிருந்து இரத்தம் பாய்ந்து ஓடுவதைக் கண்டுக் வேடுவன் பயமடைந்து ஓடிச்சென்று அரசி உலகநாச்சியிடம் தெரிவித்தான். பிற்பாடு உலகநாச்சி அதை பார்வையிட்டு அது ஒரு சிவலிங்கம்தான் என உணர்ந்து முதலில் ஒரு கொத்துப்பந்தலிட்டு ஒரு ஆலயம் அமைத்து வடநாட்டில் இருந்து பட்டர்கள் மூவரை அழைத்து பூசை செய்தனர் என்பது வரலாறு.

கி.பி.12ம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் தோற்றம் பெற்று வளர்ந்த வீர சைவ வழிபாடு இங்கு தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றது. வீர சைவம் என்பது சாதி முறைக்கு எதிராக சமத்துவத்தை பேண வேண்டும் எனும் இலட்சியத்தோடு பசவேசரால் கர்நாடகத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இச்சமயம் கலிங்கமாகோனால் கி.பி.13ம் நூற்றாண்டில் இவ்வாலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு பூசை செய்பவர்களை சங்கமர் என அழைக்கும் மரபும் உண்டு.

இவ்வாலயத்தின் உற்சவமானது ஆவணி மாதத்தில் வருகின்ற வளர்பிறை பிரதமையும் உத்தர நட்சத்திரமும் கூடிய திருநாளில் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சகல குடித்திருவிழாக்களும் நடைபெற்று பூரணைக்கு பிற்பாடு வரும் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும் அன்றிரவு திருவேட்டையும் மறுநாள் காலை தீர்தோற்சவமும் நடைபெறும்.
கிழக்கிலங்கையில் தேரோடும் ஓர் ஆலயம் என்பதினால் இவ்வாலயத்தின் உற்சவத்தினை தேரோட்டம் என மக்கள் அழைப்பதுமுண்டு. இத் தேர்கள் தர்மசிங்க மன்னனால் சோழநாட்டில் இருந்து கி.பி 958ல் சிற்பிகளை வரவழைத்து மூன்று தேர்;களையும் அமைத்தான் என மட்டக்களப்பு மாண்மியம் கூறுகின்றது. அதில் தேரோட்ட நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட தெய்வக் குற்றம் காரணமாக ஓர் தேர் தேரோடும் பாதையை விட்டு விலகி ஆலயத்திற்கு தென்மேற்கு திசையில் உள்ள மதிலை உடைத்து ஆற்றுக்குள் விழுந்து விட்டதாக முன்னோர்கள் குறிப்பிடுகின்றனர். மிகுதியாக உள்ள இரண்டு தேர்களும் இன்றுவரை தேரோட்டத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. பல கலைசிற்பங்கள் நிறைந்த சித்திரத்தேரிலே உமையவள் சகிதம் சிவபெருமானும் மற்றைய சிறிய தேரில் பிள்ளையாரும் எழுந்தருளி பக்தர்களால் வடம்பிடித்து வீதிவலம் இழுத்து வரும் காட்சி அற்புதமாய் இன்றுவரை இடம்பெற்று வருகின்றது.

முக்குக தேசம் என அழைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திலே படுவான்கரைப்பிரதேசம் முழுக்க முழுக்க கலிங்க ஆட்சிக்குட்பட்ட பிரதேசமாகும். இப்பகுதியின் பல முக்கிய கோயில்களும் கலிங்க மகோன் வகுத்த சட்ட திட்டங்களே இன்றும் நடைமுறையிலுள்ளன. கலிங்கமாகோன் வகுத்த வன்னிமைகளும், மாகோன் வகுத்த கோயில் நிர்வாகமுறைகளுமே இன்றும் உள்ளன இவ்வாலயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதுடன் ஆலயத்தின் நிருவாகிகளை வண்ணக்குமார் என அழைக்கும் பாரம்பரியமும் உண்டு.

மாகோன் வகுத்த நிர்வாக முறைகளையும், பாரம்பரிய பண்புகளையும் பேணி வருகின்ற இவ்வாலயத்தின் சுயம்புலிங்கம் பல்வேறு திருவிளையாடல்களையும் நிகழ்த்தி வருவதும் அற்புதமே. போர்த்துக்கேயர் காலத்தில் பல இந்துக்கோயில்கள் இடித்தழிக்கப்பட்டது. அவ்வகையில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயமும் போர்த்துக்கேயரின் பார்வைக்கு உள்ளாகி தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு போர்த்துக்கீசர் வருகை தந்து பூசை செய்து கொண்டிருக்கும் குருக்களிடம் நந்தியினைப் பார்த்து இது என்னவென வினவ நந்தியென நடுக்கத்துடன் குருக்களும் கூறி நிற்க இக்கல் நந்தி புல்லுண்ணுமா என போர்த்துக்கீச தளபதி மீண்டும் கேட்டான். அதற்கு குருக்களும் என்னசெய்வதென்று அறியாது ஆம் என பதிலளித்தார். பின் இன்று பூசை முடிந்துவிட்டது. நாளை வாருங்கள் என குருக்களும் கூறி அனுப்பினார். போர்த்துக்கீச தளபதி சென்றதும் குருக்களும் இறைவனை வணங்கி நின்றார். மறுநாள் போர்த்துக்கீசர் கூறிய நேரத்திற்கு கோயிலுக்குள் நுழைத்தான் குருக்களிடம் புல்லை நந்திக்கு வழங்குமாறு கூற நந்தியும் எழுந்து புல்லையுண்டு, சாணம் இட்டு சத்தமிட்டது. இதைக்கண்ட போர்த்துக்கீசனும் அவ்விடம் விட்டு ஓடினான் இவ்வாறு பல அற்புதங்கள் நிகழ்ந்த ஆலயமாக கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் போற்றப்படுகின்றது.

இவ்வாலயத்தின் இவ்வருடத்திற்கான மகோற்சவம் கடந்த 11ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 2018.09.30திகதி பி.ப.04.00மணிக்கு தேரோட்டமும், இரவு திருவேட்டைநிகழ்வும் 01.10.2018ம் திகதி திங்கட்கிழமை தீர்த்தோற்சவமும், கொடியிறக்கமும் இடம்பெற்று மகோற்சவம் நிறைவுபெற உள்ளது.

சுயம்பாய் தோன்றி நிற்கும் எம்பெருமானின் தேரோட்டத்தில் கலந்து அவர் அருள் பெறுக.