போலியான விடயங்கள் வேகமாக பரவுகின்றன. உண்மை மௌனமாகவே உள்ளது. உண்மை மிகவும் அமைதியாகவே பயணிக்கும்

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்தபோது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – 2018.09.27


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கான எனது இந்த விஜயம் மிக வெற்றிகரமாகவும் தாய்நாட்டிற்கு பெருமை தேடித்தரும் வகையிலும் அமைந்திருந்தது.

நாம் ஆட்சியை பொறுப்பேற்று நான்கு வருடங்கள் பூர்த்தியடைய இன்னும் சில மாதங்களே உள்ளன. ஆயினும் இந்த குறுகிய காலத்தினுள் நாங்கள் பல வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்றே நான் கருதுகின்றேன்.

2015 ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து இலங்கை மிகவும் விலகியே இருந்தது. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிலிருந்து கிடைக்கப்பெற்ற அழுத்தங்களும் கருத்து வேறுபாடுகளுமே எனது நண்பரான முன்னாள் ஜனாதிபதி இரண்டு வருடங்களுக்கு முன்னரே தேர்தலை நடாத்துவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த அமைச்சரவையின் ஒரு அமைச்சர் என்றவகையில் அந்த தேர்தலை முற்றாக எதிர்த்தவன் நான். அதனை எழுத்துமூலமாகவும் தெரிவித்தேன். ஏனெனில் எனது அரசியல் அனுபவங்கள் காரணமாக அவ்வேளையில் தேர்தலுக்கு சென்றால் அசௌகரியமாக நிலைமைகளை எதிர்நோக்க நேரிடும் என நான் கருதினேன். ஆயினும் அக்கடிதத்தை எழுதிய சந்தர்ப்பத்திலும் நான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவேன் என நான் நினைத்திருக்கவில்லை.

யுத்தத்திற்கு பின்னர் செய்யப்பட வேண்டிய முக்கிய விடயங்களை நிறைவேற்றாத காரணத்தினால் அப்போது அரசாங்கம் கஷ்டமானதொரு நிலைமைக்கு தள்ளப்பட்டது. இங்கு பொருளியல் நிபுணர்கள் இருக்கலாம். ஐக்கிய நாடுகள் சபை மட்டுமன்றி ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜெய்கா, கொய்கா, குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் நிதி நிறுவனங்கள் எம்மை விட்டும் தூர விலகியிருந்தனர். சில சர்வதேச வங்கிகள் நேரடியாகவே எமக்கு வழங்கும் நிதியுதவி, கடனுதவி போன்றவற்றை நிறுத்தியிருந்தன. இதற்கு பல காரணங்கள் இருந்தன. எனவே ஜனாதிபதி பதவியை ஏற்றதும் என் முன் இருந்த முக்கியமான பணி நாட்டுக்காக வேண்டி சர்வதேசத்தை வெற்றிகொள்வதாகும்.

2017ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் 36 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளின் பின்புலத்தை எனக்கு குறிப்பிட முடியும். ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு முதல் இரண்டரை வருடங்களை நான் உலகத் தலைவர்களை சந்திப்பதற்காகவே ஒதுக்கியிருந்தேன். புதியதோர் அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு எமக்கு இடமளியுங்கள், கடந்த அரசாங்கத்துடன் இருந்த கருத்து வேறுபாடுகளை நீக்கிக் கொள்ளுங்கள் என்று நான் அவர்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்தினேன்.

ஐக்கிய நாடுகள் சபையை பகைத்துக்கொண்டு எம்மைப்போன்ற சிறிய நாடுகள் மிகுந்த கஷ்டமான சூழ்நிலையில் உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதியின் அலுவலகத்திற்கு முன்னால் அன்று அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார். அரசாங்கத்தின் தலைவர் சென்று அமைச்சருக்கு இளநீர் வழங்கினார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் இலங்கைக்கு வந்திருந்த வேளையில் அரசாங்கத்தின் பிரதியமைச்சர் ஒருவர் அவரை தனக்கு திருமணம் முடித்துக்கொள்ள முடியுமானால் நல்லது எனக் கூறியிருந்தார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து தெளிவான பதிலை வழங்க முடியாமல் போன காரணத்தினால்தான் இந்த அனைத்து நிறுவனங்களும் தூர விலகியிருந்தன.

இந்த நிலைமையை நாம் மாற்றினோம். இன்று ஐக்கிய நாடுகள் சபை எமது சிறந்த நட்பு அமைப்பாகவுள்ளது. இன்று அவர்கள் எம்முடன் மிகவும் சுமூகமான முறையில் செயற்பட்டு வருகின்றனர். நான் அறிந்த வகையில் உலகில் எந்தவொரு நாடும் இன்று எம்முடன் பகைமை பாராட்டும் நிலையில் இல்லை. அவர்கள் அனைவரையும் நாங்கள் நண்பர்களாக மாற்றியிருக்கிறோம். சுமூகமானதொரு நிலையினை உருவாக்கியிருக்கிறோம். நான் மேலே குறிப்பிட்ட சர்வதேச நிதி நிறுவனங்கள் அனைத்தையும் எமது நாட்டின் அபிவிருத்திக்காக அணிசேர்த்துள்ளோம்.

சில மாதங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட மொரகஹகந்த நீத்தேக்கத் திட்டத்துடன் நிர்மாணிக்கப்படும் களுகங்கை நீர்த்தேக்கத் திட்டம் மற்றும் மூன்று கால்வாய்கள் முக்கியமான திட்டங்களாகும். இந்த நீர்த்தேக்கத்துடன் புதிதாக 2,400 குளங்கள் புனர்நிர்மாணம் செய்யப்படுகின்றன. இந்த திட்டத்திற்கு மட்டும் சுமார் 23,000 கோடி ரூபா செலவிடப்படுகின்றது. தற்போது இந்தத் தொகை கிடைக்கப்பெற்றிருப்பதால் அதன் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்கக் கூடியதாக உள்ளது. அதேபோன்று ஏனைய அபிவிருத்தி திட்டங்களுக்கும் சர்வதேசத்தின் உதவி முழுமையாக கிடைக்கப் பெறுகின்றது.

யுத்தத்தின் கடைசி இரண்டு வாரங்கள் குறித்து அனைவரைப் பார்க்கிலும் விடயங்களை அறிந்தவன் நான் ஆவேன். கடைசி இரண்டு வாரங்களில் நான் தான் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். முன்னாள் ஜனாதிபதி நாட்டில் இருக்கவில்லை. முன்னாள் பிரதமரும் இருக்கவில்லை. இராணுவத் தளபதியும் இருக்கவில்லை. முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் கடைசி இரண்டு வார காலப்பகுதியில் நாட்டில் இருக்கவில்லை. இது பற்றி பெரும்பாலானவர்கள் மறந்து விட்டார்கள். இவர்கள் நாட்டிலிருந்து சென்றது ஏன் என்றும் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினர் கொழும்பு நகரத்திற்கு ஆகாயமார்க்கமாக குண்டுகளை வீசுகின்ற போது வேறு எங்கு எங்கெல்லாம் குண்டுகள் விழுமோ என்ற பயத்துடன் மக்கள் இருந்தனர். நான் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினரின் 05 பயங்கரவாத தாக்குதல்களுக்கு முகங்கொடுத்தவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவ்வாறு தாக்குதலுக்காக வந்த எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் தாக்குதல்களில் உயிரிழந்தனர்.

அமைச்சர்கள் என்ற வகையில் அன்று நாம் காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது சந்தேகமாகவே இருந்தது. அவ்வாறான அனுபவங்களை கொண்டவன் என்ற வகையில் எமது பாதுகாப்பு படையினர் எத்தகைய அர்ப்பணிப்புகளை செய்தார்கள் என்பதை நான் அறிவேன். யுத்தத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் செய்த பாரிய தியாகங்களை நீங்கள் அறிவீர்கள். எத்தனை பேர் உயிர்நீத்தனர். இன்னும் எத்தனை பேர் அங்கவீனமுற்றனர். அவர்களது குடும்பங்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தன. தெளிவாக சொல்வதாயின் நாட்டின் பிரஜைகள் உட்பட 50,000 க்கும் 60,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை குறித்து யாருக்கும் சரியாக கூற முடியாது.

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் என்முன் இருந்த முக்கிய பணி சர்வதேசத்தை வெற்றிகொள்வதாகும். பல தடைகளுக்கு மத்தியிலும் அந்த பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன். எல்.ரீ.ரீ.ஈ இற்கு எதிராக போரிட்ட அனைத்து இராணுவத்தினரும் சிரேஷ்டமான இராணுவ வீரர்களாவர். எமது அரசாங்கத்தின் கீழ் எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிராக செயற்பட்ட எந்தவொருவருக்கும் எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிராக யுத்தம் செய்தார் என்பதற்காக எந்தவொரு இடத்திலும் குற்றப்பத்திரமும் கிடையாது அதேபோன்று அவர்களது சேவைகளுக்கு எந்தவொரு இடையூறும் கிடையாது. பதவி உயர்வுகள், வெளிநாட்டு பயணம் மற்றும் பயிற்சிகள் யுத்தம் இடம்பெற்ற காலத்தை போன்றே யுத்தத்திற்கு பின்னரும் பெற்றுக்கொடுக்கின்றோம்.

அப்போது இந்த யுத்தத்துடன் எவ்வித தொடர்புமற்ற வகையில் எத்தனை கொலைகள் இடம்பெற்றுள்ளன. இந்த கொலைகளுக்கு யார் காரணம். அதற்கு பின்னால் இருந்தவர்களை யார் இயக்குவித்தனர். இவைதான் பிரச்சினைகளாகும். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் எழுந்த முக்கியமான குற்றச்சாட்டு இதுவாகும். லசந்த விக்ரமதுங்கவை யார் கொலை செய்தது. கீத் நொயார் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார், தாஜுதீனை கொலை செய்தவர்கள் யார், சிரச போன்ற ஊடக நிறுவனங்களுக்கு தீ வைத்தவர்கள் யார், ஊடகவியலாளர்கள் ஏன் நாட்டை விட்டுச் சென்றார்கள். இவ்வாறான பல விடயங்களை குறிப்பிட முடியும். தண்டனை பெற்றவர்கள் யாரின் காரணமாக தண்டனையை பெற்றார்கள். முப்படையினருடன் இருந்த தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் எவரேனும் இராணுவ அதிகாரிகளை பயன்படுத்தியிருந்தால் அது பாரிய குற்றமாகும்.

அது இராணுவத்தின் நற்பெயருக்கு இழுக்கானதாகும். இராணுவத்தில் யுத்தத்தில் போரிட்டவர்கள் மற்றும் இன்று சேவையில் இருப்பவர்கள் அனைவருடையவும் கருத்து என்னவென்றால் யுத்தத்திற்கு வெளியே யுத்தத்துடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத வகையில் கொலைகள், தாக்குதல்கள், பயமுறுத்தல்கள் போன்றவற்றிற்கு இராணுவத்தில் எவரேனும் சம்பந்தப்பட்டிருப்பார்களாயின் நாட்டின் பொதுவான சட்டத்திற்கேற்ப அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதாகும். எனவே இத்தகைய நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்கின்றபோது சில இடங்களில் அரசியல்வாதிகள் பிரதிவாதிகளாக உள்ளனர். சில இடங்களில் சாதாரண பொதுமக்களுடன் இருப்பவர்கள் பிரதிவாதிகளாக இருக்கின்றனர்.

சில விசாரணைகளில் இராணுவத்தில் சேவை செய்கின்றவர்கள் பிரதிவாதிகளாகவுள்ளனர். நாட்டின் பொதுச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அதற்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள் என்ற வகையில் யுத்தத்திற்கு வெளியே இத்தகைய நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருப்பார்களாயின் அவர்களுக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது இராணுவத்தினருக்கு செய்யும் பெரும் கௌரவமாகும். அந்த கௌரவத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதனை சரி செய்வது தான் சர்வதேச ரீதியாக எமது இராணுவத்தினருக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கும் முக்கிய விடயமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் எமது இராணுவத்தினரை இணைத்துக் கொள்வதற்கான காரணம் இந்த விசாரணையை நாம் மேற்கொள்வதன் காரணத்தினாலேயே ஆகும். ஐக்கிய அமெரிக்கா இலங்கை இராணுவத்திற்கு வழங்கும் பயிற்சியை நிறுத்தியிருந்தது. என்றாலும் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு பின்னர் மீண்டும் அப்பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா எமக்கு கப்பலொன்றை அன்பளிப்பு செய்தது.

அதேபோன்று அமெரிக்கா எமது கடற்படையினருடன் இணைந்து நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு பயிற்சிகளை அதிகரித்துள்ளது. இதுபோன்ற பல விடயங்களை குறிப்பிட முடியும்.
இந்த விடயங்களை சரி செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றபோது எமக்கு கிடைக்கும் பொருளாதார உதவிகளுடன் சர்வதேச ஒத்துழைப்பும் பலம் பெற்றுள்ளது. யுத்த காலத்தை போன்று இன்றும் நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் அடிப்படைவாதிகள் உள்ளனர். இதற்கான சான்றுகள் ஏராளம் உள்ளன. நாம் இங்கு வருவதற்கு முந்திய தினம் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் ருத்ரகுமார் ஐக்கிய நாடுகள் சபையில் இம்முறையும் பிரகடனமொன்றை செய்திருந்தார். அவர்தான் இலங்கையின் பிரதமர் என்றும் எனவே ஐக்கிய நாடுகள் சபைக்கு வந்து கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இத்தகைய அடிப்படைவாதிகள் உள்ளனர்.

நான் சில மாதங்களுக்கு முன்னர் லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றிய பின்னர் அங்கு வாழும் இலங்கையர்களை சந்தித்த வேளையில் இலங்கையிலுள்ள இரண்டு முஸ்லிம் அமைப்புகள் என்னை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்தனர். அப்போது நான் ஏன் இரண்டு அமைப்புகளாக என்னை சந்திக்க வேண்டும் என தூதுவராலய அதிகாரிகளிடம் கேட்டேன். அப்போது அவர்களை இரண்டு அமைப்புளாகவன்றி ஒரே அமைப்பாக சந்திக்கும் படி கூறினேன். எமக்கு ஒன்றாக வர முடியாது வேறு வேறாகவே சந்திப்போம் என அவர்கள் கூறியிருந்தனர். அந்த இரண்டு சாராரிடமும் நான் முதலில் கூறிய விடயம் நீங்கள் இலங்கையர் என்ற வகையில் இங்கிருக்கும் முஸ்லிம் மக்கள் என்ற வகையில் உங்களுக்கு ஏன் ஒன்றாக சந்திக்க முடியவில்லை. இங்கே நீங்கள் பிரிந்திருப்பீர்களானால் இலங்கையிலுள்ள பிரிவினை பற்றி நீங்கள் எப்படி பேசமுடியும் எனக் கேட்டேன். அங்கு வருகை தந்திருந்த முஸ்லிம் பெண்மணியொருவர் என்மீது குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். ஜனாதிபதி அவர்களே இந்த அரசாங்கம் எமது முஸ்லிம் மக்களை கவனிப்பதில்லை என்றும் கண்டியில் முஸ்லிம்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறினார். நீங்கள் ஜப்பானுக்கு சென்ற வேளையில் ஞானசார தேரரையும் அழைத்துச் சென்றிருந்தீர்கள் எனக் கூறினார்.

ஞானசார தேரரை நான் தான் கூட்டிச் சென்றேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் என்று நான் அவரிடம் கேட்டேன். சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பத்திரிகையிலும் வெளிவந்துள்ளன என கூறினார். அங்கு தான் நீங்கள் பிழை விடும் இடம் என நான் அவரிடம் கூறினேன். ஞானசார தேரர் நான் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அங்கு சென்றிருந்தார். ஜப்பானின் டோக்கியோ நகருக்கு அண்மையில் பல விகாரைகள் உள்ளன. அங்கு சென்று இலங்கையர்களை சந்தித்த வேளையில் அங்குள்ள அனைத்து விகாரைகளுக்கும் செல்வதற்கு நேரமில்லாத காரணத்தினால் அங்கிருந்த அனைத்து விகாரைகளினதும் தேரர்களுக்கும் நான் அழைப்பு விடுத்திருந்தேன். அப்போது தான் ஞானசார தேரரும் அங்கு வருகை தந்திருந்தார். தேரர் அவர்களே நீங்கள் எப்படி இங்கு எனக் கேட்டேன். ருவன்வெலிசாயவில் பூஜை ஒன்று உள்ளது. அதற்கு 60,000 காவி உடைகள் தேவைப்படுகின்றன. அதன் நிமித்தமே நான் பல நாடுகளுக்கும் செல்கிறேன்.

அதற்காகவே இங்கு வந்தேன் எனக் கூறினார். அந்த கலந்துரையாடலின் பின்னர் தேரர் அவர்களுடன் நான் சுமூகமாக கலந்துரையாடுவதனை அங்கிருந்த சிலர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு இருந்தனர். இதனைக் கண்ட இலங்கையர்கள் ஜனாதிபதி ஞானசார தேரரையும் ஜப்பானுக்கு அழைத்து சென்றிருக்கின்றார் எனக் கூறினர். பெரும்பாலான விடயங்கள் இவ்வாறு தான் இடம்பெறுகின்றன. போலியான விடயங்கள் வேகமாக பரவுகின்றன. உண்மை மௌனமாகவே உள்ளது. உண்மை மிகவும் அமைதியாகவே பயணிக்கும். எனவே நாம் எப்போதும் இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாத்து வந்திருக்கிறோம். அதேபோன்று சர்வதேசத்தின் ஒத்துழைப்பையும் நாம் அதிகரித்திருக்கின்றோம்.

இலங்கையில் ஜனநாயகமும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் ஜனாதிபதியை போன்று சமூக ஊடகங்களின் தாக்குதல்களுக்குள்ளான வேறு ஒருவர் கிடையாது. சமூக ஊடகங்களில் இதுபோன்று முன்னர் இருந்தவர்கள் மீது சேறு பூசப்பட்டிருக்குமானால் உலகில் வேறு எங்கேனும் ஒரு இடத்தை தேடிச் சென்றிருப்பர். அதுவே அவர்களின் நிலைமை. பத்திரிகை ஆசிரியர்களும் லசந்த விக்ரமதுங்க போன்றவர்களும் அத்தகைய இழிவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. கீத் நொயர் போன்றர்களுக்கு அத்தகைய நிலைமைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. தென்னகோன் போன்றவர்கள் தாக்குதல்களுக்குள்ளாகி நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டி ஏற்பட்டது. போத்தல ஜயந்த இங்கில்லை என நான் நினைக்கிறேன். அவர் இந்த நாட்டில் இருக்கிறார். எனினும் இந்த மூன்றரை வருட காலப்பகுதியிலும் இதுபோன்ற காரணங்களினால் எந்தவொருவரும் நாட்டை விட்டுச் செல்லவில்லை. நாட்டுக்கு திரும்ப வந்திருக்கிறார்கள். எந்தவொரு ஊடக நிறுவனத்திற்கும் தீ வைக்கப்படவில்லை. எந்தவொரு பத்திரிகை ஆசிரியரும் நடு வீதியில் கொலை செய்யப்படவில்லை. கண்ணுக்கு புலப்படுகின்ற, புலப்படாத வெற்றிகளும் உள்ளன. நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டு, ஊடகச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று உலகில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. டொலரின் பெறுமதி அதிகரித்துள்ள நிலைமையினால் எமது நாட்டின் ரூபாவின் பெறுமதி குறைந்துள்ளது. இது வாழ்க்கைச் செலவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் செய்யும் சேவையை நாம் மிகவும் மதிக்கின்றோம். உங்களது சேவையின் மூலம் தாய்நாட்டுக்கும் வழங்கும் கௌரவம் குறித்து உங்களை நாம் மதிக்கின்றேன். இலங்கையர்கள் உலகில் எங்கிருந்தாலும் கெளரவமாக தங்களது அறிவு முதிர்ச்சி மற்றும் ஆனுபவங்களுடன் ஏதேனும் தொழில்களைச் செய்கின்றார்கள் என்றால் அது நாட்டுக்கு பெருமையாகும். நாம் அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களில் உலகின் ஏனைய நாடுகளின் அரசாங்கங்களைப் போன்று பல்வேறு தடைகள் சவால்கள் உள்ளன. இவை அனைத்துடனும் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இங்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். நன்றி.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018-09-28