யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி அச்சுறுத்தல்

பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில்  வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் புங்கங்குளம் பகுதியைச் சேர்ந்த சுமித்தி தங்கராசா (வயது-33) என்ற சுயாதீன ஊடகவியலாளருக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

நாயன்மார்கட்டு பிள்ளையார் கோவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் வழிபாட்டுக்குச் செல்வேன். இன்றும் வழமைபோன்று அங்கு வழிபாடு முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது, இனந்தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் சென்றார்.அவர் என்னை மோத வருகிறார் என்று எண்ணி வீதியைவிட்டு விலகிச் சென்றேன். எனினும் என்னை இலக்கு வைத்து வந்து மோதிவிட்டு, அச்சுறுத்தும் வகையில் பேசிவிட்டு அவர் தப்பித்தார்.

நிலை தடுமாறி விபத்துக்குள்ளான நான் காயங்களுக்குள்ளானேன்.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்தேன். நாளைக் காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்குவேன் என்று சுயாதீன ஊடகவியலாளர் செல்வி சுமித்தி தங்கராசா தெரிவித்தார்.