கல்முனை மாநகர சதுக்கத்தில் இருந்து பிரதேச செயலகத்தை அகற்றிச் செல்லுமாறு முதல்வர் றகீப் அறிவுறுத்தல்..!

கல்முனை மாநகர சதுக்கத்தில் இருந்து பிரதேச செயலகத்தை அகற்றிச்
செல்லுமாறு முதல்வர் றகீப் அறிவுறுத்தல்..!
(காரைதீவு சகா)
கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதி ஒன்றை அமைப்பதற்காக மாநகர
சபை சதுக்கத்தில் இயங்கி வருகின்ற கல்முனை பிரதேச செயலகத்தை அங்கிருந்து
அகற்றிச் செல்லுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்
அவர்கள்இ பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி அவர்களைக் கேட்டுக்
கொண்டுள்ளார்.
இது தொடர்பிலான அறிவுறுத்தல் கடிதம் மாநகர முதல்வரினால் பிரதேச
செயலாளருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து குறித்த விடயத்தை கல்முனைப் பிரதேச செயலாளர் அம்பாறை
மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அறிய
முடிகிறது.
அறுபது வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த கட்டிடம் ஒன்றில் போதிய வசதிகள்
அற்ற நிலையில்இ இட நெருக்கடிக்கு மத்தியிலேயே கல்முனை மாநகர சபை இயங்கி
வருகிறது. இவற்றை கருத்தில் கொண்டு பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின்
வேண்டுகோளின் பேரில் நகர திட்டமிடல்இ நீர் வழங்கல்இ வடிகாலமைப்பு
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதியொதுக்கீட்டில் மாநகர சபைக்கு புதிய
கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு முதல்வர் ஏ.எம்.றகீப் ஏற்பாடுகளை
மேற்கொண்டு வருகிறார்.
மாநகர சபைக்கு சொந்தமான மாநகர சதுக்கத்திலேயே தற்போது மாநகர சபை மற்றும்
பிரதேச செயலகம் என்பன இயங்கி வருகின்றன. இம்மாநகர சபை சதுக்கத்திலேயே
புதிய கட்டிடத் தொகுதி அமைக்கப்படவுள்ளதால் மாநகர சபையானது தற்காலிகமாக
கல்முனை ஏ.ஆர்.மன்சூர் பொது நூலக கட்டிட தொகுதிக்கு இடமாற்றப்படவுள்ளது.
இந்நிலையிலேயே பிரதேச செயலகத்தையும் இங்கிருந்து அகற்றிச் செல்லுமாறு
முதல்வரினால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதனால் கல்முனை பிரதேச செயலகத்தை வேறொரு பொருத்தமான இடத்திற்கு அவசரமாக
கொண்டு செல்லல் மற்றும் அதற்கென நிரந்தர கட்டிடத்தை அமைப்பதற்கு
நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதை மாவட்ட அரசாங்க அதிபரிடம் பிரதேச
செயலாளர் வலியுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.