வாழ்க்கைக்கான தொழில்வழிகாட்டல் கண்காட்சிதிறந்து வைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் இன்று(17) திங்கட்கிழமை தொழில் வழிகாட்டல் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.

பத்து மையங்களை கொண்டு நடாத்தப்படுகின்ற இக்கண்காட்சியை, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.ரி.எம்.நிசாம் வைபவரீதியாக திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் பிரிவும், வேள்ட்விஸன் நிறுவனமும் இணைந்து நடாத்தும், குறித்த கண்காட்சி நாளையும்(18) நாளைமறுதினமும்(19) காலை 8.30மணி தொடக்கம் மாலை 5.30மணி வரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியை இலவசமாக பார்வையிட முடிவதுடன், பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகள் ஆகியோரும் இன்றைய தினம், குறித்த கண்காட்சியை பார்வையிட்டனர்.

வாழ்க்கைக்கான தொழில்துறை தெரிவு, கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பாடத்தெரிவு, கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பாடத்தெரிவு, பல்கலைக்கழக தெரிவு, வெளிவாரி பட்டப்படிப்பு, ஏனைய பல்கலைக்கழக தெரிவு, துறைசார் சிறப்பு பாடசாலைகள், தொழில்கல்வி வாய்ப்புக்கள், விசேட தேவையுள்ளோருக்கான வாய்ப்புக்கள், நேர்முகத்தேர்வு ஆயத்தமாதல், ஆற்றுப்படுத்தலின் அவசியம், அரசாங்க வட்டி சலுகை கடன்திட்டம் ஆகிய மையங்கள் அமைக்கப்பட்டு, பங்குபற்றல், விரிவுரை, செய்முறைகள் ஊடாகவும் இங்கு விளக்கமளிக்கப்படுகின்றன.

ஒருவர் தன்னையும், தன் திறமைகளையும் அறிந்து கொள்வதற்காகவும், உணர்ந்து கொள்ள கூடியதாகவும், விசேட திறமைகளை உணர்ந்து, நான் செல்ல வேண்டிய பாதையென்ன? எனக்கு சார்பாக வளர்க்க வேண்டிய மேலதிக திறமைகள் யாவை? எனக்கு பொருத்தமான தொழில்துறை யாது? அதற்கு சார்பாக நான் தெரிவு செய்ய வேண்டிய பாடசாலைசார் பாடங்கள் யாவை? எனக்கு பொருத்தமான தொழிற்துறை யாது? எனக்கு இருக்கும் வாய்ப்புக்களை நான் எவ்வாறு அடைவது? தெரிவு பாதை தடுமாறினால் எனக்கு சார்பாக இருக்கும் ஏனைய பாதைகள், வழிகள் என்ன? தெரிந்து கொண்ட தொழிற்துறையை பின்பற்ற நாடக்கூடிய அரச மற்றும் ஏனைய நிறுவனம் சார் உதவிகள் என்ன? போன்றவற்றிற்கான பதில்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இக்கண்காட்சி ஒழுங்கபடுத்தப்பட்டுள்ளதாக, வலயக்கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.