முறாவோடை சைவ ஆலயங்களின் தீர்த்தக் கிணறுகளுக்குள் கால்நடைகளின் கழிவுகள் கொட்டப்படுவதாக முறைப்பாடுய முரண்பாடுகளை உருவாக்க சில குழுக்கள் முயற்சி என குற்றச்சாட்டு

தமிழர்கள் வாழும் பகுதியில் கால்நடைகளின் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதாக கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் க.கிருஸ்ணப்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முறாவோடை தமிழ் கிராமத்தில் உள்ள காளி கோவில் மற்றும் மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் முறாவோடை பிரதேசத்தைச் சேர்ந்த மாடு, ஆடு இறைச்சி வியாபாரம் செய்யும் சில நபர்கள் கழிவுப் பொருட்களை இரவு வேளைகளில் கொட்டிவிட்டுச் செல்வதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 1990ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் உதவியுடன், ஊர்காவல் படையினர், முறாவோடை தமிழ் கிராமத்திலிருந்து மக்கள் அனைவரையும் விரட்டியடித்திருந்தனர். தமிழ் மக்களின் நிலங்களையும் அபகரித்திருந்தனர். 

அத்துடன், இங்குள்ள காளியம்மன், பிள்ளையர் ஆலயங்களின் தீர்த்தக் கிணறுகளுக்குள் இறைச்சிக்காக வெட்டப்பட்ட மாட்டின் தலைகள் உட்பட கால்நடைகளின் கழிவுப் பொருட்களைக் கொட்டுவதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டனர்.

இப்பகுதியில் இலங்கை இராணுவம் முகாமிட்டிருந்தமையினால் 26 வருடங்களுக்குப் பின்னர் மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ளனர். ஆனாலும் குறிப்பிட்ட சில சக்திகளின் செயற்பாடுகளினால் சமூகங்களிடையே முரண்பாடுகள் உருவாக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

26 வருடங்களின் பின்னா் மீளக்குடியேறியுள்ளமையினால் பகைமைகளை மறந்து இந்த பகுதியில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றித்து வாழ வேண்டிய அவசயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

நன்றி கூர்மை