மட்டக்களப்பு தாந்தாவில் கறுவா அறுவடைவிழா.ஏற்றுமதிக் கிராமங்களை உருவாக்க வேண்டும் .மேலதிக அரசாங்க அதிபர்

நீர்த்தட்டுப்பாடு, யானைப் பிரச்சினைகளை போராட்டமாக எடுத்துக் கொண்டு ஏற்றுமதிக்கிராமங்களை உருவாக்கவேண்டும் – மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த்

நீர்த்தட்டுப்பாடு, யானைப் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றினை ஒரு போராட்டமாக எடுத்துக் கொண்டு ஏற்றுமதிக் கிராமங்களை உருவாக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தெரிவித்தார்.

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கறுவா அறுவடை விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்தின் தலைமையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் தாந்தாமலை – ரெட்பானா கிராமத்தில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றும்போதே மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கனவாக இருந்த ஒரு ஏற்றுமதிப் பயிரை எமது மாவட்டத்தில் பயிரிட்டு அறுவடை செய்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். கிராமத்தினுடைய விவசாயிகளாகிய மக்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல. நாங்கள் அறிவுரைகள் வழங்குகின்ற பட்சத்தில் அதற்குச்செயல் வடிவம் கொடுக்கின்றவர்கள். ஆகவே இவ்வாறான ஒரு நிகழ்வு நிறைவேறியிருப்பது பெருமிதமான விடயம்.

குறிப்பாக நெல் தவிர்த்து, ஏற்றுமதிப் பயிர்களும், உப உணவுப் பயிர்கள், பாரம்பரியமான மரக்கறி வகைகளுக்கு சர்வதேச ரீதியான கிராக்கி உள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது மக்களே ஏற்றுமதிக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சாதாரணமாகக் குறிப்பிட்டால் எமது பிரதேசத்தில் முருங்கை இலை,கருவேப்பிலை என அனைத்துப் பொருள்களையும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு நிலை இருக்கிறது. அந்த வகையில் நிறையவும் சந்தை வாப்புக்கள் இருக்கின்றன.

ஆகவே விவசாயிகளாகிய நாங்கள் இந்தப்பிரதேசத்தின் வளத்தின் உச்ச பயனை பெற்றக்கொள்ளும் முகமாக குறிப்பாக நீர்த்தட்டுப்பாடு, யானைப் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றினை ஒரு போராட்டமாக எடுத்துக் கொண்டு ஏற்றுமதிக் கிராமமாக மாற்ற வேண்டும் என்பது மாவட்ட உத்தியோகத்தர்கள் அனைவரதும் நோக்கமாக இருக்கிறது.

குறிப்பிட்ட காலத்துக்கள் எங்களுடைய மாவட்ட,பிரதேச உத்தியோகத்தர்கள், விவசாயத் திணைக்கள, ஏற்றுமதி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து குறிப்பிட்ட சில பயிர்களை அறிமுகம் செய்து தேசிய, சர்வதேச தரத்துக்குக் கொண்டு வருவதற்கு எமது விவசாயிகள் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம். அதனைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.

இந்நிகழ்வில், மண்முனை தென்மேற்குபிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஸ், மாவட்ட விவசாயப்பணிப்பாளர் வை.பி.இக்பால், மாத்தளை ஏற்றுமதி விவசாயத் திணைக்கள விரிவாக்கல் உத்தியோகத்தர் எம்.ஏ.எம். இல்மி மற்றும் எம்.ஏக்கநாயக்க, மட்டக்களப்பு ஏற்றுமதி விவசாயத் திணைக்கள விரிவாக்கல் உத்தியோகத்தர் நர்த்தனா குகதாசன், மற்றும் உத்தியோகத்தர்கள், விவசாயிகள் பொதுமக்கள் எனப்பலரும்கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வினை அடுத்து, கறுவா உற்பத்தி மற்றும் முக்கியத்துகவம் குறித்து மாத்தளை ஏற்றமதி விவசாயத் திணைக்கள விரிவாக்கல் உத்தியோகத்தர் எம்.ஏ.எம். இல்மி விளக்கவுரை வழங்கினார். அதனையடுத்து, அதிதிகளுக்கு நினைவுப் பரிசில்களும், கறுவாக்கன்றுகளும் வழங்கப்பட்டு, கறுவா அறுவடை, நிடைபெற்றது.