இலங்கை வரலாற்றில் தமிழ் பிரதேசங்களில் முதன்முறையாக வாழ்க்கைக்கான தொழில் வழிகாட்டல் கண்காட்சி

வாழ்க்கைக்கான தொழில் வழிகாட்டல் கண்காட்சி, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 17.09.2018ம் திகதி தொடக்கம் 19.09.2018ம் திகதி வரை, காலை 8.30மணி தொடக்கம் மாலை 5.30மணி வரை நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டல் பிரிவு, வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளை அபிவிருத்தி திட்டம் போன்றன இணைந்து இக்கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளனர்.

வாழ்க்கைக்கான தொழில்துறை தெரிவு, கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பாடத்தெரிவு, கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பாடத்தெரிவு, பல்கலைக்கழக தெரிவு, வெளிவாரி பட்டப்படிப்பு, ஏனைய பல்கலைக்கழக தெரிவு, துறைசார் சிறப்பு பாடசாலைகள், தொழில்கல்வி வாய்ப்புக்கள், விசேட தேவையுள்ளோருக்கான வாய்ப்புக்கள், நேர்முகத்தேர்வு ஆயத்தமாதல், ஆற்றுப்படுத்தலின் அவசியம், அரசாங்க வட்டி சலுகை கடன்திட்டம் ஆகிய மையங்கள் அமைக்கப்பட்டு இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

ஒருவர் தன்னையும், தன் திறமைகளையும் அறிந்து கொள்வதற்காகவும், உணர்ந்து கொள்வதற்குமான வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கிலும், என்னிடம் இருக்கும் விசேட திறமைகளை உணர்ந்து, நான் செல்ல வேண்டிய பாதையென்ன? எனக்கு சார்பாக வளர்க்க வேண்டிய மேலதிக திறமைகள் யாவை? எனக்கு பொருத்தமான தொழில்துறை யாது? அதற்கு சார்பாக நான் தெரிவு செய்ய வேண்டிய பாடசாலைசார் பாடங்கள் யாவை? எனக்கு பொருத்தமான தொழிற்துறை யாது? எனக்கு இருக்கும் வாய்ப்புக்களை நான் எவ்வாறு அடைவது? தெரிவு பாதை தடுமாறினால் எனக்கு சார்பாக இருக்கும் ஏனைய பாதைகள், வழிகள் என்ன? தெரிந்து கொண்ட தொழிற்துறையை பின்பற்ற நாடக்கூடிய அரச மற்றும் ஏனைய நிறுவனம் சார் உதவிகள் என்ன? போன்றவற்றிற்கான பதில்களை வழங்கும் நோக்கில் முதன்முறையாக இக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.