மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று நடந்தேறிய அதிசயம்.

ஓய்வில் சென்ற பணிப்பாளர் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம். – புதிய பணிப்பாளருக்கும் தெரியாமல் கதிரையில் அமர்ந்து கொண்ட சம்பவம் -மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அரங்கேற்றம்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தாது, பணிப்பாளரின் கதிரையில் ஓய்வுபெற்ற பணிப்பாளர் அமர்ந்து கொண்டமை முறையற்ற செயலாகும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், இச்சம்பவம் இன்று(12) நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பில், ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பவுள்ளதாகவும், இன்று மாலை குறிப்பிட்டார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர், இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகவிருந்த வைத்தியர் இப்றாலெப்பை அண்மையில் ஓய்வுபெற்றிருந்தார். இப்பதவிக்காக கலாரஞ்சினி கணேசலிங்கம் புதிதாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஓய்வுபெற்றுச் சென்ற இப்றாலெப்பை, மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு, கடமையிலிருந்த புதிய பணிப்பாளராக்கு தெரியப்படுத்தாது இன்று(12) பணிப்பாளர் கதிரையில் அமர்ந்து கொண்டுள்ளார். இச்செயற்பாடானது, சேவையிலிருந்த பணிப்பாளரையும், நிருவாகத்தினையும் அவமதிக்கும் செயலாகும். மேலும், சிரேஸ்ட தகமையுள்ள பணிப்பாளர் நியமிக்கப்பட்டிருக்க, ஓய்வில் சென்ற பணிப்பாளர் அவசர அவசரமாக ஒப்பந்த அடிப்படையில் போதனா வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளமை, சிரேஸ்ட தரத்தில் உள்ள, வைத்தியதுறைக்கு நீண்ட காலம் சேவையாற்றிய அதிகாரிகளை பாதித்துள்ளன. சிரேஸ்ட தரத்தில் பணிப்பாளராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஓய்வு பெற்றுச் சென்றவரை மீண்டும் நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக அதிகாரமுள்ள அரசியல்வாதிகள், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு புதிய ஒப்பந்த அடிப்படையிலான நியமனத்தினை இரத்து செய்து, பணிப்பாளுரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அமைப்புக்கள், சமூக நலன் விரும்பிகள், வைத்தியதுறைக்கு பங்களிப்பு செய்பவர்கள் அனைவரும் விழிப்புள்ளவர்களாக மாறவேண்டும். இத்தோடு தினக்கூலிக்கு, சுகாதார தொழிலாளியாக நியமனபெற்ற ஒருவரை கணினி துறைக்கு கடமையில் அமர்த்துமாறு அமைச்சர் ஒருவர் கடிதங்களை அனுப்பி, அவரை கணனி துறைக்கு நியமனம் வழங்கும் அளவிற்கு, மத்திய அரசாங்கத்தில் சுகாதார துறையில் உள்ள அமைச்சர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களை புறக்கணிப்பதென்பது ஆரோக்கியமான விடயமல்ல. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற பணிப்பாளரின், நியமனத்தினை இரத்து செய்து புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பணிப்பாளரை நிரந்தர பணிப்பாளராக நியமிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.