மட்டக்களப்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை காத்தவர்கள் தமிழர்களே

பரீட் மீராலெப்பை 33

இன்று முன்னாள் பிரதியமைச்சர் பரீட் அவர்களுடைய 33 ஆவது நினைவு நாளாகும். தமிழ், ஆங்கிலம், சிங்களம், அரபு ஆகிய நான்கு மொழிப் புலமையும், தேர்ந்த வாசிப்பும், அரசியலறிவும், வாதத் திறனும் இன்னும் பல தராதரமும்- திறமையும் அமையப் பெற்றிருந்த டாக்டர் பரீட் அவர்களைப் பற்றி நிறைய எழுதியும் பேசியும் உள்ளேன்.ஆகவே இவ்வருடம் அவரது காலத்து அரசியலில் தமிழ்- முஸ்லிம் உறவும்- பிரிவும் பற்றி சிறிதாக எழுத விரும்புகிறேன்.

1977 ஆம் ஆண்டு தொகுதி வாரியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அன்றைய முஸ்லிம் பெருந்தலைவராயிருந்த பதியுத்தீன் மஹ்மூத் அவர்களை மட்டக்களப்பில் தோற்கடித்து பரீட் வெற்றிவாகை சூடியிருந்தார்.இவரது இந்த அபார வெற்றியில், ஏறாவூர் முஸ்லிம் வாக்காளர்களுடன் 6000 தமிழ் வாக்காளர்கள் கைகோர்த்திருந்தனர்.

அப்போது, மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியாகும். 1970 ஆம் ஆண்டையத் தேர்தலில் மட்டக்களப்பின் இரண்டு உறுப்பினர்களாகவும் தமிழர்களே தெரிவு செய்யப்பட்டனர். 77 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் பரீட் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி இருக்கமாட்டார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் அன்று ஏற்பட்டிருந்த தலைமைத்துவப் பனிப் போரின் நிமித்தமாக இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் அண்ணன் இராசதுரை தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்திலும், கவிஞர் காசி ஆனந்தன் சூரியன் சின்னத்திலும் போட்டியிட வைக்கப்பட்டனர்.அண்ணன் அமிர்தலிங்கத்தின் இந்த முடிவுக்கு இராஜதுரையும், காசியும் ஒப்புக் கொண்டனர். 70 ஆம் ஆண்டு இரண்டு தமிழர் பிரதிநிதித்துவம் கிடைத்த அனுபவத்தைக் கருத்தில் எடுத்து இத்தேர்தலில் நாமிருவரும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் இவர்கள் ஒப்புதலுக்கு வந்தனர்.

இத்தேர்தலில் இராஜதுரை கேள்விக்கிடமின்றி முதலாவது உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பரீட் 26000 வாக்குகளைப் பெற்று இரண்டாம் உறுப்பினராகத் தெரிவானார். காசியானந்தன் 22000 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்துக்கு வந்து தோல்வியைத் தழுவினார்.பரீட்டுக்கு தமிழர்களின் 6000 வாக்குகள் கிடைக்காதிருந்தால் அவர் வெறும் 20000 வாக்குகளையே பெற்றிருப்பார். இவ்வாறு நிகழ்ந்திருந்தால் இரண்டாவது உறுப்பினராக கவிஞர் காசியே அன்று நாடாளுமன்றுக்குச் சென்றிருப்பார்.

எனவே, 1977 இல் மட்டக்களப்பின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் காத்தவர்கள் தமிழர்களேயாகும்.

தமிழர்களில் சிறு தொகையினர் பரீட்டுக்கு வாக்களித்தமைக்கு பரீட்டின் குடும்பம் பல்லாண்டுகளாகத் தமிழர்களுடன் நெருங்கிய பாச உணர்வோடு பழகியமையும், பரீட்டின் தந்தை சேர்மன் அவுலியாவின் அடக்கத்தலத்தின் மீது இந்துக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் காரணமாகும். சேர்மன் அவுலியாவின் அடக்கத்தலத்தின் தலைமாட்டில் நடப்பட்டிருக்கும் “மீசான்” கட்டை, பாம்பின் விசத்தை இழுத்து பாம்பு கடித்த நபரைக் காக்கும் வல்லமை கொண்டதாக தமிழ் முஸ்லிம் மக்களினால் அன்று நம்பப்பட்டது. இன்றும் கணிசமானோர் இதனை நம்புகின்றனர்.

இப்படியாக இருந்த தமிழ் முஸ்லிம் அரசியல் உறவு ஜே.ஆர் கொண்டு வந்த மாவட்டத் தேர்தல் முறையினால் கேடு கெடத் தொடங்கிற்று.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களான தேவநாயகம் கெபினட் அமைச்சராகவும்,பொத்துவில் கனகரத்தினம் மாவட்ட அமைச்சராகவும், பின்னர் அரசாங்கத்தில் இணைந்த இராசதுரை கெபினட் அமைச்சராகவும் கோலோச்சத் தொடங்கினர். இதனால் அன்று மட்டக்களப்பில் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பரீட் அதிகாரக் கீழிறக்கத்தை அனுபவித்தார். இந்நிலையினால் பரீட் ஜனாதிபதியுடன் முரண்பட்டு பிரதமர் பிரேமதாசாவுடன் நெருங்கிச் செயல்படலானார். பரீட்டின் இந்த தந்திரச் செயற்பாட்டால் ஜேயார் இவருக்குப் பிரதியமைச்சர் பதவியை வழங்கவேண்டி ஏற்பட்டது.

மேற் சொன்ன நிலைமைகளால் தேவநாயகம் ,கனகர்
மற்றும் இராசதுரை ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மட்டு – அம்பாறை தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிரான பரீட்டின்
செயற்பாடுகள் தமிழருக்கு எதிரான செயற்பாடுகள் போல அமைந்தன. அவ்வாறே பிரச்சாரப்படுத்தப்பட்டன.