தீர்வு மூலம் சமாதானம் நிலைக்காவிடின் எதிர்காலத்தை இழந்துவிடும் இலங்கை!

அரசியல் தீர்வின் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்தத் தவறும் பட்சத்தில் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை” என்று இன்றைய தினம் தன்னைச் சந்தித்த ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கரிடம் எடுத்துரைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.

நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட இரா. சம்பந்தன், “முன்னைய அரசோடு ஒப்பிடுகையில் இந்த அரசின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கககளில் மாற்றம் உள்ளது. எனினும், மக்கள் எதிர்பார்த்த அளவில் கருமங்கள் இடம்பெறவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.

மக்களின் அன்றாட ப் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட சுமந்திரன் எம்.பி., “காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், இராணுவத்தின் வசமுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளின் விடுவிப்பு போன்ற விடயங்களில் திருப்திகரமான முன்னேற்றங்கள் இல்லை” என்றார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், “காணாமல்போன தனது அன்புக்குரியவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவிக்கும் ஒருவர் மனதில் சமாதானம் குடிகொள்ள முடியாது. மக்களின் இந்த அடிப்படையான நாளாந்த ஏக்கங்களுக்கு சரியான தீர்வும் நீதியும் கிடைக்க வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்தினார்.