தொண்டராசிரியர் நியமனம் வழக்கு ஒத்திவைப்பு.

0
733

பொன்ஆனந்தம்

தொண்டராசிரியர் நியமனம் தொடர்பாக பாதிக்கப்பட்டதாக கருதப்படும் ஏழு தொண்டராசிரியர்களால் திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வரும் 2ம்திகதி ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக திருகோணமலை மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அத்துடன் சம்பந்தப்பட்ட அரச தரப்பான பிரதி வாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறும் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளம்செழியன் உத்தரவிட்டார்.

திங்களன்று இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வுத்தரவை நீதிபதி அறிவித்தார்.

நியமனம் வழங்கப்படவுள்ள பட்டியலில் இருந்து தமது பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படும் 7 தொண்டராசிர்யர்கள் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் “தமது பெயர்கள் ஆரம்ப நியமன பட்டியலில் இருந்தது.பின்னர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் முன்னர் தமது பெயர்கள் உள்வாங்கப்பட்டிருந்ததாகவும்”; வழக்கில் தெரிவித்திருந்தனர்.

இதற்கான நியாயமான விளக்கத்தை வழக்காளிகள் சார்பில் வழங்குமாறு ஏலவே மன்றால் உத்தரவிடப்பட்டதற்கிணங்க வழக்கு கடந்த திங்களன்று (3.09.2018)எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது வழக்காளிகள் சார்பில் ஆஜாரான சட்டத்தரணி சீ.யோகேஸ்வரன்,

;; “குறித்த விடயத்தை உறுதிப்படுத்தும் வகையில் தகவலறியும் சட்டம் மூலம் குறித்த திணைக்கள அதிகாரிகளிடம் நியமனம் தொடர்பான அமைச்சரவை தீர்மானம மற்றும் இறுதிப்பட்டியல் ; உள்ளிட்ட பல தகவல்களை” தாம் கோரியிருந்ததாகவும் அந்த தகவல்களை தொண்டராசிரியர் நியமனம் வழங்கப்பட்டதன் பின்னர் தாம் வழங்குவதாக தெரிவித்திருந்ததாகவும் மன்றில் தெரிவித்தார்.

இந்நிலையில் அரசதரப்பில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த கிழக்குமாகாண ஆளுநர் அவரது செயலாளர்,மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு அறிவித்தல் அனுப்புமாறு நீதிபதி மா.இளம்செழியன் கட்டளையிட்டதுடன் வரும் 2ம்திகதி ஒக்டோபர் மாதம் இவ்விடயம் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தார்.