ஒருவாரகாலத்துள் திருக்கோவிலுக்கு 300மீற்றருக்கு பாரிய மண்மூடைகள்! இதுவரை 2500 மண்மூடைகள்!

கடலோரப்பாதுகாப்பு திணைக்களத்தின் மாகாணப்பொறியியலாளர் துளசி ஏற்பாடு!
 (காரைதீவு  நிருபர் சகா)
 
திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள  மோசமான கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருவாரகாலத்துள் 300மீற்றருக்கு பாரிய மண்மூடைகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக கடலோரபாதுகாப்புத் திணைக்களத்தின் கிழக்குமாகாணப்பொறியியலாளர் ரி.துளசிநாதன் கூறியுள்ளார். 

 
வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் முன்னாலுள்ள கொங்கிறீட் வீதி கடலரிப்பால் சேதமாகியுள்ளது. ஆலயத்திற்கும் அச்சுறுத்தலாக இக்கடலரிப்பு உள்ளதாக ஆலயநிருவாகமும் தெரிவித்திருந்தது.
 
இதனையடுத்து நேற்றுமுன்தினம் கடலோரபாதுகாப்புத் திணைக்களத்தின் கிழக்குமாகாண பொறியியலாளர் ரி.துளசிநாதன் அங்கு விஜயம்செய்தார். 
திருக்கோவில் பிரதேசபைத் தவிசாளர் இ.வி.கமலராஜன் அங்குள்ள ஆபத்தான அவலநிலைமையை காண்பித்தார். 
 
எந்திரி துளசிநாதன் தலைமையிலான குழுவினர் கடலரிப்பின் நீள அகலம் உயரம் என்பவற்றை அளந்தனர்.மேலும் எவ்வளவு தூரம் பாதிப்பேற்பட்டுள்ளது என்பதையும் கணக்கெடுத்தனர்.
 
அங்குள்ள பாதிப்பு சேதங்களை அவதானித்தபின்னர் அவர் கருத்துக்கூறுகையில்:
 
இந்த நிலைமையைக்கட்டுப்படுத்துவதானால் இருவழிகளுண்டு. ஒன்று இங்கு பாரிய மண்மூடைகளை அதிகமாக அடுக்குதல். இரண்டு கம்பிக்கூட்டிலான பாரிய கருங்கல்வேலி அமைத்தல்.
 
பாரிய மண்மூடைகளுக்கான ஒழுங்குகளை நாம் மதிப்பீடு செய்து கொழும்பு தலைமையகத்தின் அங்கீகாரத்துடன் அதனைச்செய்யமுடியும். இது 20வருடகாலத்திற்கு உத்தரவாதமாகும். அதனைப்பெற்றுத்தர ஒருவாரகாலமெடுக்கும்.
 
கருங்கல்வேலி அமைப்பதென்பது பாரிய செலவினங்களுடன்கூடியது. அதனை உயர்மட்ட அரசியல் செல்வாக்குடன் நிறைவேற்றலாம் என்றார்.
 
இதுவரை 2500 மண்மூடைகள் !
 
இதேவேளை அந்தப்பிரதேசத்தில் உடனடி தடுப்பு நடவடிக்கையாக திருக்கோவில் பிரதேசசபைத் தவிசாளர் இ.வி.கமலராஜன் விளையாட்டுக்கழகங்களின் இளைஞர்களின் உதவியோடு 2500 மண்மூடைகளை அணையாகப் போட்டுள்ளார். 
 
திருக்கோவில் ஸ்புட்னிக் விளையாட்டுக்கழகம் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் சுப்பர்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் இளைஞர்கள் முழுமூச்சாக நின்று கடலரிப்பைத்தடுக்க உதவியுள்ளனர்.
இதற்கு  கரையோரம் பாதுகாப்புத் திணைக்களம் பிரதேசசபை பிரதேசசெயலகம் மற்றும் ஆலயம் என்பன மூடைகளைத்தந்துதவியுள்ளன.
 
முன்பும்; இதேகாலப்பகுதியில் கடலரிப்பு மோசமாகவிருந்தது. அவ்வேளை கடல்நீர் சுனாமிபோல் ஆலயவளாகத்துள் சுமார் 100மீற்றர் அளவில் உட்புகுந்திருந்தது.அருகிலுள்ள தென்னந்தோப்புகளிலும் அதேநிலை. இவ்வருடம் இந்தநிலை.அடுத்தவருடம் வந்தால் கடல் ஆலயத்துள் புகும்.
எனவே இங்கு நிரந்தரமான பாதுகாப்பு தடை ஏற்பாடு மேற்கொள்ளப்படவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.