தமிழன் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அன்று தொடக்கம் இன்றுவரை போராடுகின்றான்ஏனைய இனங்கள் அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றன.

அணைப்பார் யாருமில்லை என்கிறார் தவிசாளர் ஜெயசிறில்!
(காரைதீவு  நிருபர் சகா)
 
தமிழன் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அன்று தொடக்கம் இன்றுவரை போராடுகின்றான். ஏனைய இனங்கள் அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றன. அணைக்க யாரும் முன்வரவில்லை.
 
பொத்துவில் கனகர்கிராம மக்களை மீண்டும் சந்தித்துக்கலந்துரையாடியபோது காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் தெரிவித்தார்.
 
பொத்துவில் கனகர் கிராம தமிழ்மக்களது காணிமீட்புப் போராட்டம் இன்று (05) புதன்கிழமை 23 நாளாக தொடர்கிறது.
 
மூன்று வாரங்களையும் தாண்டி பொத்துவில் மக்களது போராட்டம் வெற்றிகரமாகத் தொடர்கிறது.
 
அவர்களை நேற்று காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில்  சந்தித்தபோது மேலும் கூறுகையில்:
 
தமிழர்க்கு போராட்டம் என்பது புதிதல்ல. அதற்காக நல்லாட்சியிலும் போராட வேண்டிய அவலம் நிலவுகின்றது. உங்களுக்கு எமது பூரணஆதரவு எப்போதும் உண்டு. உடன்பிறப்புகள் என்றவகையில் என்ன தேவையென்றாலும் கேளுங்கள்.செய்து தரப்படும்.
 
நான் 19ஆயிரம் மக்களுக்கு தலைவர். அதுவும் காரைதீவில். இப்பகுதியில் என்றால் உங்களோடு தங்கியிருப்பேன்.
பேராட்டம்வெற்றிபெறும். எனவே தொடருங்கள் நாம் உதவுவோம். என்றார்.
 
இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமுகசேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளைம்  அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் இக்காணியை மீளளிக்க உறுதிகூறியுள்ளநிலையிலும் போராட்டம் இன்று 23நாளாக தொடர்கிறது.
 
போராட்டத்திலீடுபட்டுள்ள தமிழ்மக்கள் இரவுபகலாக அந்த இடத்திலேயே அமர்ந்து தமது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை போராடப்போவதாகக்கூறியுள்ளனர்.
எனினும் நாம் செத்தாலும் இந்த இடத்திலே சாவோமே தவிர எமக்கான உறுதியான ஆவணம் கிடைக்கும்வரை இந்தப்போராட்டம் ஓயாது. இதுதானா நல்லாட்சியின் லட்சணம் ?  நிலத்தைமீட்கும்வரை எமது போராட்டம் ஓயாது  என்று மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கச்செயலாளர் வே.அருணாசலம் சூழுரைத்துள்ளார்.