கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர்ர் ஆலயமும் பறிபோகலாம்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயமும் பறிபோகலாம்.
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் முஸ்லீம்களின் கைகளுக்கு சென்றுள்ளதாக புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தமிழ் கட்சி தலைவர் கந்தசாமி இன்பராசா கொழும்பில் ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்த கருத்து முஸ்லீம் அரசியல்வாதிகள் மற்றும் தீவிரவாத போக்குடைய முஸ்லீம்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

https://m.youtube.com/watch?v=SraU2o8Tbos&feature=youtu.be
முஸ்லீம் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினரான இன்பராசா மீது விசாரணை நடத்தி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது இனத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் தமிழ் கட்சியின் தலைவர் இன்பராசா பேசி இருப்பதால் அவரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாழைச்சேனை, கிண்ணியா, சம்மாந்துறை என கிழக்கு மாகாணத்தின் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப்புலிகளிடமிருந்த ஆயுதங்கள் முஸ்லீம்களின் கைகளுக்கு சென்றதாகவும் இது தமிழ் சிங்கள மக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என்றும் இன்பராசா அந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்திருந்தார்.
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் முஸ்லீம்களின் கைகளுக்கு சென்றுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் புதிய விடயங்கள் அல்ல.
இதற்கு முதலும் தமிழ் சிங்கள ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிட்டிருந்தன.
குறிப்பாக 2004ஆம் ஆண்டு கிழக்கில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு கருணா மட்டக்களப்பை விட்டு வெளியேறிய போது போராளிகள் பலரும் காடுகளில் ஆயுதங்களை வீசிவிட்டு தமது வீடுகளுக்கு சென்றிருந்தனர். இந்த ஆயுதங்களை சிலர் எடுத்து முஸ்லீம்களுக்கு விற்றதாக கூட அக்காலப்பகுதியில் சில தமிழ் சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
முஸ்லீம்களின் கைகளுக்கு மட்டுமல்ல பாதாள உலக குழுக்களின் கைகளுக்கும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் சென்றதாக கூட செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
முஸ்லீம்களிடமோ அல்லது தமிழ் குழுக்களிடமோ தற்போது ஆயுதங்கள் இல்லை என யாரும் மறுத்து விட முடியாது.
யுத்தம் நடந்த காலத்தில் ஊர்காவல் படை என்ற பெயரில் முஸ்லீம்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. முஸ்லீம் இளைஞர்களுக்கு நானே ஆயுதங்களை வழங்கினேன் என பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா பேசிய காணொளி ஒன்றும் வெளிவந்திருந்தது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து தமிழ் இயக்கங்கள் சொற்ப ஆயுதங்களை கையளித்திருந்தன. அவற்றில் பெரும்பாலானவை துருப்பிடித்த பாவிக்க முடியாதவைகள் தான் அதிகம். அதன் பின்னர் பெருந்தொகையான ஆயுதங்கள் தமிழ் இயக்கங்களின் கைகளுக்கும் வந்து சேர்ந்தன. முஸ்லீம் ஊர்காவல் படைகளுக்கும் வந்து சேர்ந்தன.
யுத்தம் முடிந்த பின் இவர்களிடம் இருந்த ஆயுதங்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் எதுவும் இல்லை. ஆயுதங்கள் ஒப்படைக்காதவரை தமிழ் குழுக்களிடமும் முஸ்லீம் ஊர்காவல் படையிடமும் ஆயுதங்கள் இருக்கின்றன என்பதுதான் அர்த்தம்.
அமைச்சர் றிசாத் பதியூதீன், மற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராகவும் புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் தமிழ் கட்சியின் தலைவர் இன்பராசா கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார்.
இந்த முஸ்லீம் அமைச்சர்கள் இருவர் மீதும் இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ரிசாத் பதியுதீன் மீது மன்னார் ஆயர் சுமத்திய குற்றச் சாட்டை அடிப்படையாக வைத்து விசாரணை செய்யப்படவேண்டும். மன்னார் நீதிபதியை அச்சுறுத்திய குற்றச் சாட்டு வில்பத்து அத்து மீறிய குடியேற்றம,; அளவுக்கு அதிக சொத்து சேர்த்தது போன்ற பல குற்றச் சாட்டுகள் அவர் மீது உள்ளன என இன்பராசா தெரிவித்திருக்கிறார்.
இந்த குற்றங்கள் அவர் சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக் கொண்ட அமைச்சுப் பதவியை கேள்விக் குறியாக்கியதுடன் இலங்கையில் நீதிக்கும் மக்களுக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளார் என அவர் தெரிவித்திருக்கிறார்.
பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு உறுப்பினராகப் பதவியேற்றதும் தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி ஓட்டமாவடி இந்து ஆலயத்தை கையகப்படுத்தி ஓட்டமாவடி பள்ளிவாசல் நிருவாகத்திடம் கொடுத்து தனது நிதியில் சந்தையை கட்டியதாகவும். காத்தான்குடியில் தனக்கு எதிராக வந்த நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நீதிபதியை மாற்றி தனக்கு வேண்டிய நீதிபதியை நியமித்து தீர்ப்பை சாதகமாக மாற்றியதாகவும் முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதம் கொடுத்ததாகவும் ஹிஸ்புல்லா பகிரங்க வீடியோ அறிக்கையை வெளியிட்டதை சுட்டிக்காட்டியிருக்கும் இன்பராசா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவி என்பது இந்துக்களின் வழிபாட்டுத்தலத்தை பறித்து பள்ளிவாசலுக்குக் கொடுப்பதற்காகவா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி, பாராளுமன்றம், நீதி அமைச்சு, நீதிச் சேவைகள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், உயர் நீதிமன்றம், சட்டத்தரணிகள் சங்கம் இவை அனைத்தையும் தாண்டி. தனக்கு எதிரான தீர்ப்பை எழுதிய நீதிபதியை மாற்றி தனக்குச் சாதகமான நீதிபதியை நியமித்து தனக்குச் சார்பான தீர்ப்பு எழுத வைத்ததாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா காணொளி மூலம் ஒப்புதல் அறிக்கை விட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இலங்கை அரசையும் இலங்கை நீதித் துறையையும் கேள்விக் குறியாகியுள்ளதுடன் மக்களுக்கு அரசு மீது அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது என்பதைச் பகிரங்கமாக சிங்கள மக்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் என இன்பராசா தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிக்கைகளை தொடர்ந்தே புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் தமிழ் கட்சி தலைவர் இன்பராசாவுக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் பரவலாக முறைப்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இது முஸ்லீம் மக்கள் மத்தியில் இருக்கின்ற விழிப்புணர்வையும் தமது இனத்திற்கு எதிராக யாராவது பேசிவிட்டால் அல்லது செயற்பட்டால் அதனை எதிர்த்து முறியடிக்கின்ற பலத்தையும் காட்டுகிறது. இந்த வகையில் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான்.
ஆனால் இந்த விடயங்களில் தமிழர் தரப்பு உணர்ச்சியற்ற செக்குமாடுகள் போலவே செயற்படுகின்றனர் என்பது கசப்பான உண்மை.
பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்வதும் தமிழ் மக்களை அச்சுறுத்தும் செயல்தான். தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சுட்டிக்காட்டி சமூக ஊடகங்களிலும் முகநூல்களிலும் எழுதும் தமிழர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்து அச்சுறுத்துவதால் பலர் ஒதுங்கிக்கொண்ட சம்பவங்களும் உண்டு. தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது பொலிஸில் முறைப்பாடு செய்து அவர்களின் முகநூல் கணக்குகளை முடக்கிய சம்பவங்களும் உண்டு.
பொலிஸில் முறைப்பாடு செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தமிழர்கள் பலரும் வாய் மூடி மௌனிகளாகவே உள்ளனர். தமிழர்களுக்கு எதிரான அநீதிகளும் கொடுமைகளும் நில அபகரிப்பு மற்றும் வள அபகரிப்பு அசையும் அசையாக சொத்து அபகரிப்பு என சட்டவிரோத செயல்களும் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது.
மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி ஒட்டமாவடி இந்து கோவிலை சுவீகரித்து பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு வழங்கி அதில் இறைச்சி கடை உட்பட சந்தைக்கட்டிடம் அமைப்பதற்கு நிதியும் ஒதுக்கினேன் என கூறிய அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக எந்த ஒரு தமிழ் அரசியல்வாதிகளும் கண்டன அறிக்கை விட்டதும் இல்லை, முறைப்பாடு செய்ததும் இல்லை, சட்ட நடவடிக்கை எடுத்ததும் கிடையாது.
முஸ்லீம் இளைஞர்களுக்கு ஆயுதம் வழங்கினேன் என்ற கூற்று தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என்றும் இன உறவை சீர்குலைக்கும் செயல் என்றும் எந்த ஒரு தமிழனும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தது கிடையாது.
தனக்கு எதிரான தீர்ப்பை வழங்கிய நீதிபதியை மாற்றி தனக்குச் சாதகமான நீதிபதியை நியமித்து தனக்குச் சார்பான தீர்ப்பை எழுத வைத்ததாக கூறிய பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக எந்த ஒரு தமிழ் சட்டத்தரணியும் நீதிமன்றில் முறைப்பாடு செய்தது கிடையாது.
நீதிமன்றத்தையும் நீதிச்சேவையையும் அவமதிக்கும் வகையில் அமைச்சர் ஹிஸ்புல்லா செயற்பட்ட போதிலும் எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியோ தமிழ் சட்டத்தரணியோ அல்லது சமூக ஆர்வலர்களோ ஏன் முறைப்பாடு செய்யவில்லை.
இது தொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் எந்த ஒரு தமிழ் சட்டத்தரணியும் இதற்கு முன்வரவில்லை.
தமிழர் ஒருவர் இவ்வாறு நீதிமன்றத்தை அவமதித்திருந்தால் அல்லது பள்ளிவாசலை சுவீகரித்திருந்தால் நிலமை எவ்வாறு இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
கிழக்கில் அமைச்சர் ஹிஸ்புல்லா அமைச்சர் அமிர்அலி ஆகியோர் எவ்வாறு தமிழர்களுக்கு எதிராக செயற்படுகின்றரோ அதே போன்று வடக்கில் தமிழர்களுக்கு எதிராக செயற்படுபவர்களில் முதன்மையானவர் அமைச்சர் றிசாத் பதியுதீன்.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதி வழங்கிய மன்னார் நீதிபதியை அச்சுறுத்தி நீதிமன்றத்திற்கு கல் எறிந்து நீதிமன்றத்தை சேதப்படுத்திய சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர் என அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மன்னார் நீதவானுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அமைச்சர் றிசாட் பதியுதீனே ஏற்பாடு செய்து நடத்தியதாகவும் அமைச்சரின் அனுசரணையின்றி அந்தளவு பாரிய ஆர்ப்பாட்டத்தையோ போராட்டத்தையோ நடத்தியிருக்க முடியாது என அப்போது மன்னார் மறைமாவட்ட ஆயராக இருந்த இராயப்பு யோசப் கொழும்பிலிருந்து வெளியாகும் லக்பிம சிங்கள வார பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
இலங்கையின் வரலாற்றில் நீதிபதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதென்றால் அது அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராகத்தான்.
மன்னார் நீதிபதிக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம், மன்னார் நீதிமன்றின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஆகியவற்றை கண்டித்தும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உட்பட குற்றவாளிகளை கைது செய்யுமாறு கோரியும் 2012ஆம் ஆண்டு யூலை மாதம் 20ஆம் திகதி இலங்கையில் உள்ள நீதிபதிகள், மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அச்சுறுத்திய அமைச்சர் றிசாட் பதியுதீனையும் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களையும் கைது செய்யுமாறு இலங்கை நீதிபதிகள் சங்கம் காவல்துறை மா அதிபரை கோரியிருந்தது.
ஆனால் ஜனாதிபதி மகிந்த ராசபக்சவின் செல்லப்பிள்ளையாக இருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததும் கிடையாது.
மகிந்த ராசபக்ச பதவி இழந்து மைத்திரிபால சிறிசேனா பதவிக்கு வந்ததும் அமைச்சுப்பதவிகளை மீண்டும் றிசாத் பதியுதீனும், ஹிஸ்புல்லாவும் பெற்றுக்கொண்டனர். அமைச்சர் என்ற அதிகாரங்களையும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்ற அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு தமிழ் அதிகாரிகளை அடக்கி தமது தமக்கான காரியங்களை சாதித்து வருகின்றனர்.
2015ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய மைத்திரிபால சிறிசேனா 2015ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி இலங்கை சட்டக்கல்லூரி மாணவர்களுடனான சந்திப்பில் பேசும் போது அமைச்சர் றிசாட் பதியுதீனின் அத்துமீறிய செயல்களுக்கு எதிராக அதியுச்ச நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தப் போவதாக தெரிவித்திருந்தார்.
மன்னார் பெரியமடு பிரதேசம் உள்ளிட்ட மன்னார் மற்றும் வவுனியாவின் பல பகுதிகளில் றிசாட் பதியுதீன் பலவந்தமாக தமக்கு ஆதரவான முஸ்லிம்களை குடியேற்று வருகிறார். இது தொடர்பான அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு ஊடகங்களும் இந்த விடயத்துக்கு எதிரான செய்திகளை முன்கொண்டு சென்றிருந்தன. இந்த நிலையிலேயே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
ஆனால் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. ஜனாதிபதி கூறியது போல அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பு நில அளவை திணைக்களம் காணி திணைக்களம் ஆகியவற்றில் தமது ஆட்களை நியமித்த முஸ்லீம் அமைச்சர்கள் எங்கெங்கு அரச காணிகள் இருக்கின்றன. எந்த காணிகள் நீண்டகாலமாக உரிமை கோரப்படாது இருக்கின்றன என்பதை கண்டறிந்து அதற்கு உறுதிகள் முடித்திருக்கிறார்கள்.
இதற்கு உதாரணமாக பல சம்பங்களை குறிப்பிடலாம். அண்மையில் ஆரையம்பதி தமிழ் பிரதேசத்தில் உள்ள ஆலய நிர்வாகிகள் தமது ஆலயத்தை சுற்றி வேலி அமைத்த போது அது தங்களுடைய காணி என காத்தான்குடியை சேர்ந்த சிலர் உரிமை கோரியிருக்கிறார்கள். ஆலயத்தை அண்டி இருந்த அரச காணி ஆலயத்திற்கு வழங்கப்பட்டதாக பிரதேச செயலாளர் தெரிவிக்கின்றார். ஆனால் காத்தான்குடியை சேர்ந்த முஸ்லீம்கள் அது தமது காணி என்கின்றனர்.
நிலையான சொத்துக்கள் மட்டுமல்ல கால்நடைகள் உட்பட அசையும் சொத்துக்களையும் முஸ்லீம்கள் அபகரித்து வருகின்றனர்.
படுவான்கரை பிரதேசத்;தில் உள்ள மக்களின் கால் நடைகளை முஸ்லீம்கள் நாளுக்கு நாள் களவாடி செல்வதை தடுக்க முடியாத அவலநிலையில் தான் தமிழ் மக்கள் உள்ளனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள பண்ணையாளர்கள் ஒன்றிணைந்து சட்டவிரோத மாடு கடத்தலுக்கு எதிராக பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு முன்னால் கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
சட்டவிரோத மாடு கடத்தலை உடனடியாக நிறுத்தக்கோரி பட்டிப்பளை பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினை கையளித்ததுடன், புதன்கிழமை மாடுகடத்தலை தடுத்த நபர்களை தாக்கியமைக்கு எதிராக பட்டிப்பளை பொலிஸ் நிலையம் வரை சென்ற ஆர்ப்பாட்டாக்காரர்கள் முறைப்பாடொன்றையும் பதிவு செய்தனர்.
சில நபர்கள் இப்பகுதிக்குள் வந்து மாடுகளை கடத்தி சென்ற போது அதனை அக்கிராம மக்கள் தடுத்தனர். அம்மக்கள் மீது கடத்தல்காரர்கள் தாக்குதல்களை நடத்தி விட்டு சென்றுள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் போவதில்லை.
முஸ்லீம்களின் கைகளில் ஆயுதங்கள் இருக்கின்றன என சொன்ன இன்பராசாவுக்கு எதிராக பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.
ஆனால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடுமைகள் பற்றி எந்த ஒரு தமிழனும் முறைப்பாடு செய்ததாக தெரியவில்லை.
உணர்ச்சியற்ற செக்குமாடுகளாக தமிழர்கள் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக போராடும் அதிசயம் எதுவும் நடந்து விடப்போவதில்லை.
நாளை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயமும் மாமாங்கேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ள காணிகள் தமக்கு சொந்தமானவை என உரிமை கோரி காத்தான்குடியிலிருந்தோ ஓட்டமாவடியிலிருந்தோ யாரும் வரலாம். ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
( இரா.துரைரத்தினம் )