மட்டக்களப்பு மாவட்டத்தின் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு நிகழ்வு சித்தாண்டி ஈரளக்குளம் கிராம அதிகாரி பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கலடி பிரதேச சபையின் சித்தாண்டி வட்டார உறுப்பினர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உட்பட கட்சியின் பிரநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஈரளக்குளம், இலுக்கு, கூழாவடி ஆகிய கிராமங்களின் நடாத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்ந்து உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

இந்த வகையில் குளங்கள் திருத்துதல், வீதிகள் திருத்துதல், வீதி அருகாமையில் உள்ள காடுகளை அகற்றல், ஆலயங்களின் கட்டுமானத்துக்கு உதவுதல், குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து, பாலங்கள் அமைத்தல், காணிகளுக்கு உறுதி, ஒப்பம் வழங்கல், பாடசாலை மாணவர்களின் கல்வி பிரச்சனை, மக்களின் வாழ்வாதார பிரச்சனை உட்பட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டது.

இவ்வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இலுக்கு பாடசாலைக்கு கணனி தொகுதி வழங்குவதற்கும், ஈரளக்குளத்தில் ஒன்றரை இலட்சம் ரூபாய் நிதியில் பொதுக் கிணறு கட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி வழங்கியதுடன், இலுக்கு, ஈரளக்குளம் ஆகிய கிராம மக்களின் சுயதொழில் நடவடிக்கைக்கு உதவுவதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு என்னால் வழங்கப்பட்ட எழுத்து மூல வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி கிரான் பாலத்தை மிக விரைவாக அமைப்பதற்கும், அதற்கு முன்பாக கிரான் குடும்பிமலை வடமுனை ஊத்துச்சேனை தொடர் வீதியை அமைப்பதற்கும் முன் வந்தமையையும், தேசிய நல்லணிக்க அமைச்சு மூலம் ஒழுங்கு செய்த பாலங்களையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

மேலும் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து தான் வழங்கிய மகஜரில் சித்தாண்டி இலுக்கு தொடர் பாலம் சம்பந்தமாக குறிப்பிட்டு இப்பாலம் கட்டாயம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மக்கள் மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மானிய அடிப்படையில் வீட்டுத் திட்டங்கள் வரும் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதி என்ற ரீதியில் இப்பிரிவு முன்னுரிமை வழங்கப்பட்டு வீடுகள் அமைக்கப்படும் எனவும் உறுதி வழங்கினார்.

இதன்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் கிரான்புல் அணைக்கட்டு கட்டுதல் சார்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.