மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளரின் முக்கிய வேண்டுகோள்

(க.விஜயரெத்தினம்)
மூன்றாம் தவணைக்காக அரசபாடசாலைகள்  எதிர்வரும் மூன்றாம் திகதி(3.9.2018)திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதால் மட்டக்களப்பு வலயத்தின் பரிபாலனத்தின் கீழுள்ள சகல பாடசாலைகளும் நாளை ஞாயிற்றுக்கிழமை(2.9.2018)  சிரமதானப்பணிகளை மேற்கொண்டு  துப்பரவு செய்யப்பட வேண்டுமென மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்கள் சகல அதிபர்களையும் கேட்டுக்கொண்டார்.

மூன்றாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பாக  மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:-

நாடளாவிய ரீதியில் மூன்றாம் தவணைக்கான தமிழ்,சிங்களப்பாடசாலைகள் திங்கட்கிழமை (3.9.2018)ஆரம்பிக்கபடவுள்ளது.அரச சுற்று நிரூபத்திற்கிணங்க பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் முதல்நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை பாடசாலை சுற்றுப்புறச்சூழல்,வகுப்பறைகள்,தளபாடங்கள் துப்பரவு செய்யப்படவேண்டும்.

மட்டக்களப்பு வலயத்தில் உள்ள 63 பாடசாலைகளின் அதிபர்கள்,பிரதியதிபர்கள் தங்களது பாடசாலையின் பகுதித்தலைவர்கள்,ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்; பாடசாலையில் சிரமதானப்பணிகள்,துப்பரவு விடயங்களை தெரியப்படுத்தி அவர்களை பாடசாலைக்கு அழைத்து குறித்த வேலைகளை ஞாயிற்றுக்கிழமையே செய்து முடிக்க வேண்டும்.

எதிர்வரும் திங்கட்கிழமை சகல பாடசாலைகளிலும் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட வேண்டும்.தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக பிரதேசத்தில் டெங்கு பரவக்கூடிய வாய்ப்புள்ளது.டெங்கு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கிலும்,பாடசாலையின் வனப்பை பேணும் நோக்கிலும் பாடசாலைகள் துப்பரவு செய்யப்படவேண்டும்.பாடசாலைகளில் டெங்கு உற்பத்திசெய்யப்படுகின்ற இடங்களையும்,அதன் சூழல்களையும் துப்பரவு செய்யப்பட்டு அழிக்கப்படவேண்டும்.

பாடசாலைகளில் சிரமதானம் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை உக்கக்கூடியது,உக்கமுடியாதவாறும்,தரம்பிரிக்கப்பட்டு திண்மக்கழிவகற்றல் மேற்கொள்ளவரும் உள்ளுராட்சி வண்டிகளிடம் கையளிப்பதற்கு ஏற்றவகையில் குப்பைத்தொட்டியில் இடவேண்டும்.

க.பொ.த.உயர்தரப்பரீட்சை விடைத்தாள்கள் திருத்தப்படும் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரப்பாடசாலை,புனித மிக்கல் கல்லூரி என்பன எதிர்வரும் 7ம்திகதிதான் பாடசாலைகள் ஆரம்பமாகும்.