தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இலக்கிற்குக் குறுக்கே நில்லாதுமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகி வழிவிடவேண்டும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இலக்கிற்குக் குறுக்கே நில்லாது 2008 ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகி நின்றதுபோல் விலகி வழிவிடவேண்டும். தீராத நோயொன்றைக் குணப்படுத்த அறுவைச் சிகிச்சைதான் ஒரேயொரு வழி என்றாகிவிட்டால் அதனை மேற்கொள்வதுதானே விஞ்ஞானபூர்வமான செயற்பாடு ஆகும் என கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான த.கோபாலகிருஸ்ணன்  தெரிவித்துள்ளார்.

கடந்த 22.08.2018 அன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரிடத்தில் சந்தித்து கலந்துரையாடிய நிகழ்வு கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான த.கோபாலகிருஸ்ணன்  தலைமையில் இடம்பெற்றது.
அது சம்பந்தமாக த.கோபாலகிருஸ்ணன்  மின்அஞ்சலில் அனுப்பிய கேள்வி பதில் நேர்காணல். 

கேள்வி : கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரிடத்தில் சந்திக்க வைத்த வரலாற்று நிகழ்வொன்றினைக் கிழக்குத் தமிழர் ஒன்றியம் சாதித்துள்ளது. இச்சந்திப்பின் நோக்கம் என்ன?
பதில் : எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் ஒரே அணியாக போட்டியிடுவது சம்பந்தமாக ஏற்கனவே அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் தனித்தனியே சந்தித்துப் பேசி அவர்களின் நிலைப்பாடுகளை அறிந்தோம். எனினும் கிழக்குத் தமிழர் ஒன்றியம் இது சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வரும் முன்னர் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரிடத்தில் சந்திக்க வைத்து திறந்த கலந்துரையாடலை மேற்கொண்டு மக்களுக்கு உகந்ததான ஒருமித்த முடிவொன்றை எடுப்பதற்கான அதாவது முரண்பாடுகளுக்குள்ளும் ஓர் உடன்பாட்டைக் காணுவதற்கான முன் முயற்சியே இது.
கேள்வி : இது சாத்தியப்படுமா?
பதில் : கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள், கருத்தியல்கள், கட்சிகள், சின்னங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான் என்பதை மனம் கொண்டால் முரண்பாடுகளுக்குள்ளும் ஓர் உடன்பாடு காண முடியும். அத்;தகைய மனப்பக்குவம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைப்பீடங்களுக்கு ஏற்பட வேண்டும்.
கேள்வி : கட்சிகள் ஒன்றிணைவதாயின் எந்த சின்னத்தில் போட்டியிடுவது?
பதில் : பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைய சம்மதிக்கின்ற கட்சிகளையெல்லாம் ஒரு கூட்டு அணியாக (Alliance) ஒன்றிணைத்து அந்தக் கூட்டு அணியை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் (M.O.U) தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்து ஒரு பொதுச்சின்னம் ஒன்றினைப் பெற்று அப்பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைத்து போட்டியிடுவது. அப்பொதுச்சின்னம் தற்போதுள்ள கட்சியொன்றின் சின்னமாக இருக்கமுடியாது.
கேள்வி : இவ்வாறான கூட்டு அணியின் கொள்கைகள் என்ன?
பதில் : பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணையும் கட்சிகளெல்லாம் ஒன்றுகூடிக் கலந்துரையாடிக் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் வகுத்துக் கொள்ளும். அவை உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பெற்று அவை பின்னர் மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பெறும்.
கேள்வி : அதனால் இணைந்த வடக்கு கிழக்கு எனும் தமிழரின் கொள்கை பாதிப்படையாதா?
பதில் : இல்லை. கிழக்குத் தமிழர் ஒன்றியம் தனது அரசியல் நிலைப்பாட்டினைத் தனது வேலைத்திட்டத்தில் தெளிவாக கூறியுள்ளது. அது இதுதான் “ இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வாக அதிகுறைந்த பட்சம் இலங்கையின் வடக்குகிழக்கு மாகாணங்கள் இணைந்து ஒரே அலகாக அமைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய போதிய அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பெற்ற ஒற்றை மொழிவாரி மாநில சுயாட்சி அலகையே கிழக்குத் தமிழர் ஒன்றியம் ஆதரிக்கும். ஆனால் அத்தகையை தீர்வு எட்டப்படும் வரை வடமாகாணத்துக்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்தாத களநிலையைக் கருத்திற்கொண்டு கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான சமூக, பொருளாதார பிரச்சினைகளைக் கையாளும் வகையில் பொருத்தமான ‘அரசியல் வியூகம்’ களைக் கிழக்குத் தமிழர் ஒன்றியம் வகுத்து அதனை வினைத்திறனுடன் செயற்படுத்தும்.” இந்த விடயம் உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பெறும்.
கேள்வி : இத்தகைய கூட்டு அணிக்குத் தலைமை வகிப்பது யார்?
பதில் : பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணையும் கட்சிகளின் குறிப்பிட்ட எண்ணிக்கையான பிரதிநிதிகளும் புரிந்துணர்வுடன் கூடிய கலந்துரையாடலை மேற்கொண்டு உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்த விதிகளுக்கமையத் தலைவரைப் பின்னர் தேர்ந்தெடுப்பர். அதையிட்ட இப்போது அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
கேள்வி : இதன் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
பதில் : கிழக்குத் தமிழர் ஒன்றியம் ஏற்கனவே அதன் சமூக பொருளாதார அரசியல் வேலைத்திட்ட வரைபை வெளியிட்டுள்ளது. அதில் அரசியல் ஒரு அங்கம் மட்டுமே. எனினும் பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணையும் கட்சிகளுக்கான பொது வேலைத்திட்டம் பின்னர் புரிந்தணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பெற்று மக்களுக்கு பகிரங்கப்படுத்தப் பெறும்.
கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கைக்கும் நிலைப்பாட்டிற்கும் ஆதரவளிக்க முன்வந்துள்ளன என்றே அறியக் கிடைக்கின்றது. பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வராதுவிட்டால் கிழக்குத் தமிழர் ஒன்றியம் என்ன நிலைப்பாட்டை எடுக்கும்?
பதில் : சிக்கலான ஆனால் தேவையான கேள்வி. இப்போது உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்குள்ளே மிகப்பழையது அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம் 1944 இல் ஆரம்பித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகும். அதன் சின்னம் சைக்கிள் ஆகும். அக்கட்சியிலிருந்து பிரிந்துவந்த அமரர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் (தந்தைசெல்வா) 1949 இல் ஆரம்பித்ததே இலங்கைத்தமிழரசுக்கட்சி. அதன் சின்னம் ‘வீடு’. சுமார் கால்நூற்றாண்டுகாலம் இவ்விரு கட்சிகளும் கீரியும் பாம்பும் போலவே அரசியல் செய்தன. ஆனால் 1972 ஆம் ஆண்டு பிரதமர் அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கம் 1972 இல் கொண்டுவந்த தமிழர்களின் அடிமைச்சாசனம்’ என வர்ணிக்கப்படுகின்ற குடியரசு அரசியலமைப்பைத் தொடர்ந்து தமிழ் மக்களின் ஐக்கியம் கருதியும் அரசியல் தேவை கருதியும் இரண்டு கட்சிகளும் இணைந்தே பொதுவான ‘ தமிழர் விடுதலைக்கூட்டணி’  என்ற அரசியல் கூட்டமைப்பும் அதன் பொதுவான சின்னமான ‘உதயசூரியன்’ சின்னமும் 1976 இல் உருவாகின.
இவ்விரு தலைவர்களும் தத்தம் கட்சிகளையும் சின்னங்களையும் தூக்கிப்பிடிக்காமல் பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்தனர் . அமரர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள் அதுவரை கடைபிடித்த ‘சமஸ்டி’க் கொள்கையையும் அமரர் ஜி. ஜி. பொன்னம்பலம் அதுவரை கடைபிடித்த ‘ஒற்றையாட்சி’க் கொள்கையையும் கைவிட்டுத்தான் புதிய ‘ தமிழீழத்தனிநாட்டு’க் கொள்கையினை ஏற்றுக்கொண்டிருந்தனர்.
இவ்வரசியல் நிகழ்வு தற்போதுள்ள தமிழரசுக்கட்சிகள் மனம்கொள்ளவேண்டியதொரு முன்னுதாரணமாகும். எனவே இன்றைய கிழக்கு மாகாணத்தின் அரசியல் களநிலையைக் கருத்தில் கொண்டு சமகால அரசியல் தேவைகருதி தத்தம் அரசியல் கட்சிகளையும் கருத்தியல் முரண்பாடுகளையும் கட்சிகளுக்கிடையேயுள்ள தனிநபர் முரண்பாடுகளையும் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உருவாக இருக்கின்ற சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்த கூட்டணியின் பொதுச்சின்னத்தின் கீழ் எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டும்.
இந்த இலக்கினை அடைவதற்கு கிழக்கு மகாண தமிழர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பின்னால் அணி திரள வேண்டும். அவ்வாறு மக்கள் ஓரணியில் திரளுகின்றபோது தலைவர்களும் கட்சிகளும் மனம் மாறுவார்கள். கட்சிகளும் சின்னங்களும் மக்களுக்கானவையே தவிர கட்சிகளுக்கும் சின்னங்களுக்கும் மக்கள் அடிமைப்படமுடியாது.
எனவே கிழக்கிலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலுள்ள பொது அமைப்புக்களும் , ஆன்மிகவாதிகளும், கல்விமான்களும், புத்திஜீவிகளும், துறைசார் நிபுணர்களும், தொழில்வாண்மையாளர்களும், கலை இலக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர் சமூகங்களும் வர்த்தக நடவடிக்கையாளர்களும் எனச் சமூகத்தின் அத்தனை தரப்புக்களும் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உருவாகவுள்ள அரசியல் கூட்டு அணியின் கீழும் அக்கூட்டு அணியின் பொதுச்சின்னத்தின் கீழும் ஒன்றிணையும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளினதும் தலைமைப்பீடங்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
அப்படியொரு நிலையில் மக்களின் அபிலாசையைத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினால் புறந்தள்ள முடியாது. எனவே இறுதிக்கட்டத்திலாவது யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு பொதுச்சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இணைந்துகொள்ளும் எனக் கிழக்குத் தமிழர் ஒன்றியம் நம்பிக்கை கொண்டுள்ளது.
கேள்வி : அப்படியான நிலையிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மனம் மாறவில்லையானால் கிழக்குத் தமிழர் ஒன்றியம் என்ன நிலைப்பாட்டை எடுக்கும்?
பதில் : அப்படியான நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இலக்கிற்குக் குறுக்கே நில்லாது 2008 ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது கிழக்கு மகாணசபைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகி நின்றதுபோல் விலகி வழிவிடவேண்டும் என்பதே கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் நியாயமான எதிர்பார்ப்பாக இருக்கும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தவிடயத்தில் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் தராமலாவது இருக்கலாமல்லவா?
கேள்வி : அப்படியும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வழிக்கு வரவில்லையாயின்….?
பதில் : விடமாட்டீர்கள் போல் இருக்கிறது. அப்படியாயின் பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைய முன்வருகின்ற கட்சிகளடன் கலந்தரையாடித் தீர்க்கமான முடிவொன்றினை கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுக்கும். அம்முடிவினை மக்களிடம் கொண்டு செல்வோம். மக்கள் முடிவு எடுப்பார்கள். இத தவிர்க்கமுடியாததாகும். தீராத நோயொன்றைக் குணப்படுத்த அறுவைச் சிகிச்சைதான் ஒரேயொரு வழி என்றாகிவிட்டால் அதனை மேற்கொள்வதுதானே விஞ்ஞானபூர்வமான செயற்பாடு ஆகும். அரசியல் என்பது ஒரு சமூக விஞ்ஞானம் ஆகும். அதில் பரிசோதனை முயற்சிகள் அவசியமானதும் தவிர்க்கமுடியாதவையுமாகும்.