கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் மீது எழுந்திருக்கும் சந்தேகங்கள்.

அண்மையில் கிழக்கில் உருவாக்கப்பட்ட கிழக்கு தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பின் செயற்பாடுகளை கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஒரு சாரார் வரவேற்றாலும் அந்த அமைப்பில் உள்ளவர்களின் பின்னணிகள், அவர்களின் நோக்கங்கள் பற்றி பலத்த சந்தேகங்களும் எழுந்துள்ளன.
கிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது, கிழக்கு மாகாணசபையை தமிழர்கள் கைப்பற்றுவது என்ற இலக்கில் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒரே அணியில் பொது சின்னம் ஒன்றில் போட்டியிட வைப்பதே தமது நோக்கம் என கிழக்கு தமிழர் ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ஆம் திகதி மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் அம்பாறையிலும் திருகோணமலையிலும் கூட்டங்கள் நடைபெற்றன.
தமிழ் அரசியல் கட்சிகளை தனித்தனியாக சந்தித்த இந்த அமைப்பு இறுதியாக கடந்த வியாழக்கிழமை தமிழ் அரசியல் கட்சிகளை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறது.
இலங்கை தமிழரசுகட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆகிய 11 தமிழ் அரசியல் கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டன. அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
கிழக்கு தமிழர் ஒன்றியம் அரசியல் சார்பற்றது என தம்மை பிரகடப்படுத்தியிருக்கிறது. ஆனால் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அமைப்பாளர்கள் அரசியல் கட்சிகளை சாராத நடுநிலையாளர்கள் என சொல்ல முடியாது. அவர்கள் இருவரும் ஏற்கனவே அரசியல் கட்சிகளில் தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் தான்.
இந்த அமைப்பின் அமைப்பாளர்களாக சட்டத்தரணி தட்சணாமூர்த்தி சிவநாதனும், காரைதீவைச்சேர்ந்த தம்பையா கோபாலகிருஷ்ணனும் உள்ளனர்.
சட்டத்தரணி சிவநாதன் 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டவர்.
காரைதீவைச்சேர்ந்த செங்கதிரோன் என அழைக்கப்படும் த.கோபாலகிருஷ்ணன் பல அரசியல் கட்சிகளில் அங்கம் வகித்தவர். அம்பாறை தமிழர் மகாசபை என்ற அமைப்பின் ஊடாக சுயேட்சைக்குழுவாகவும் தேர்தலில் போட்டியிட்டவர்.
வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சார்பிலும் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
தற்போது அகில இலங்கை தமிழர் மகாசபை என்ற அரசியல் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார்.
1994ஆம் ஆண்டிலிருந்து கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் வரை 6பொதுத்தேர்தல்களிலும் மாகாணசபை தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த கோபாலகிருஷ்ணன் அவர்களை அரசியல் கட்சி சார்பற்ற நடுநிலையாளர் என சொல்ல முடியாது.
கிழக்கு தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பின் இணைப்பாளர்களாக இருப்பவர்கள் அரசியல்சார்பற்ற நடுநிலையாளர்கள் என்றோ அல்லது அரசியல் பதவிகளுக்கு ஆசைப்படாதவர்கள் என்றோ சொல்ல முடியாது.
எனினும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்க கூடியவை அல்ல.
ஆனால் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் சில கோரிக்கைகள் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் பலமான அரசியல் தலைமை ஒன்றை சிதைத்து கிழக்கை பிரித்தெடுத்து தமிழர்களை பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டவை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களாக பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
• வடமாகாணத்துக்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்தாத களநிலையைக் கருத்தில் கொண்டு கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான சமூக, பொருளாதார பிரச்சினைகளைக் கையாளும் வகையில் பொருத்தமான ‘அரசியல் வியூகங்களைக் கிழக்குத் தமிழர் ஒன்றியம் வகுத்து அதனை வினைத்திறனுடன் செயற்படுத்தும்.
• எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிடும் வண்ணம் மக்களைத் தயார்ப்படுத்தல்;;. கட்சி அரசியலுக்கு அப்பால் கிழக்கு மாகாணத் தமிழர்களை ஒன்றிணைத்தல். இந்த நடைமுறையை எல்லாத் தேர்தலுக்கும் விரிவுபடுத்தல்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதி கூடிய ஆசனங்களை பெற்று கிழக்கு மாகாண ஆட்சியை தமிழர்கள் கைப்பற்ற வேண்டும் என்பதில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழர்களும் உடன்படுவார்கள் என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஆனால் கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் இணைப்பாளர்களாக இருக்கும் கோபாலகிருஷ்ணன் போன்றவர்களின் நோக்கம் வேறு என சுட்டிக்காட்டுகிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்.
கிழக்கு தமிழர் ஒன்றியம் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன என இக்கட்டுரையாளர் கோவிந்தன் கருணாகரம் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அது ஒரு உதவாக்கரை என ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளராக இருக்கும் கோபாலகிருஷ்ணனின் பிரதானமான நோக்கம் தமிழ் கட்சிகளை இணைத்து தான் செயலாளராக இருக்கும் தமிழர் மகாசபை என்ற கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக்குவதாகும். அவர்களின் சுயநல செயற்பாட்டிற்கு நாம் ஆதரவளிக்க முடியாது என கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் தமிழர் மகாசபை கோபாலகிருஷ்ணன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அவர்கள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்கு 401ஆகும். மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழர் மகாசபை போன்ற கட்சிக்கு வெள்ளையடித்து அங்கீகாரம் கொடுப்பதற்கும் தாண்டுபோன கப்பலை மீட்பதற்கும், பிள்ளையானை மீண்டும் முதலமைச்சராக்குவதற்கும் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் பலிக்கடாவாக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
கிழக்கு தமிழர் ஒன்றியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை தயாரித்து அதில் அனைத்து கட்சிகளையும் கையொப்பம் இடுமாறு வலியுறுத்துவோம் என்றும் அதற்கு இணங்காத கட்சிகளை நிராகரிக்குமாறு மக்களிடம் பிரசாரம் செய்வோம் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் இறுதியாக நடந்த கூட்டத்தில் தெரிவித்திருக்கிறாரே என கோவிந்தன் கருணாகரம் அவர்களிடம் கேட்ட போது கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் காலம் காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பிரசாரம் செய்து வந்திருக்கிறார்கள். கடந்த பொதுத்தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பிரசாரம் செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் 401தான். எனவே அவர்களின் எதிர்பிரசாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாதிக்கப்போவதில்லை என தெரிவித்தார்.
எதிர்காலத்தில் கிழக்கு தமிழர் ஒன்றியம் நடத்தும் எந்த கூட்டத்திலும் ரெலோ கலந்து கொள்ளாது. இந்த நிலைப்பாட்டில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளும் உள்ளன என அவர் தெரிவித்தார்.
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இறுதிக் கூட்டத்தில் 11 தமிழ் கட்சிகள் கலந்து கொண்டன. பொதுத்தேர்தலிலோ அல்லது மாகாணசபை தேர்தலிலோ இந்த 11 கட்சிகளுக்கும் சமமான தொகுதி ஒதுக்கீடுகள் எவ்வாறு வழங்க முடியும். இந்த 11 கட்சிகளில் பெரும்பாலான கட்சிகள் மக்கள் செல்வாக்கற்ற 100 வாக்குகளை கூட பெற முடியாதவை என அவர் தெரிவித்;தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் இணையப்போவதில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுக்கட்சி தலைவருமான பா.அரியநேத்திரம் அவர்களிடம் கிழக்கு தமிழர் ஒன்றியம் பற்றி இக்கட்டுரையாளர் தொடர்பு கொண்டு கேட்ட போது தமிழர்களின் ஒற்றுமை தான் எமது இலக்கு. இதில் நாம் உறுதியாக இருக்கிறோம். வடக்கு கிழக்கு என்ற பேதம் இன்றி ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒரே அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் பலமான சக்தியாக திகழ வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாம் செயற்பட்டு வருகிறோம். இதனை நான் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் கூட்டத்தில் தெளிவாக கூறியிருக்கிறேன் என அரியநேத்திரம் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு என தமிழர்களை பிரிப்பதற்கோ தமிழ் மக்களின் அரசியல் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைத்து பலவீனப்படுத்துவதற்கோ நாம் துணைபோக முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முயற்சியினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் 2001ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரனின் சிந்தனையில் உருவாக்கப்பட்டது. அதை கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் மூலம் இரண்டாக உடைக்க துணைபோக வேண்டாம். தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழர்களின் அரசியல் பலம் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் கூட்டத்தில் தெளிவாக கூறியிருக்கிறேன் என்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஆயுதப்போர் காலத்தில்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு 2001,காலப்பகுதிகளில் பல விடுதலை இயக்கங்களையும் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தி கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் விடுதலைப்புலிகளின் ஒப்புதலுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது அன்று தொடக்கம் இன்றுவரையும் இணைந்த வடக்கு கிழக்கை தாயகமாக ஏற்று ஒரு கொள்கைரீதியான செயல்பாட்டு அரசியலைத்தான் தமிழ்தேசியகூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
ஐம்பதாயிரம் மாவீர்கள் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ்மக்களின் உயிர்தியாகம் எல்லாமே வடகிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் நோக்கில் ஏற்பட்ட போராட்டமே தவிர வடக்கை வேறாகவும் கிழக்கை வேறாகவும் பிரிப்பதற்கு இல்லை.
ஆனால் இங்கு சமூகம் தந்திருக்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ( பிள்ளையான் குழு ) கொள்கை தனியான கிழக்குமாகாணத்தை மையப்படுத்திய அபிவிருத்தி அரசியலாகும். அப்படியானால் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் வடக்கு கிழக்கு இணைப்பு கொள்கையை பிள்ளையான் குழு ஏற்றுள்ளதா? என்பதற்கு பதில்வேண்டும்.
வடமாகாணம், கிழக்குமாகாணம் இரண்டு மாகாணசபை தேர்தல்களும் ஒரே தினத்தில்தான் இம்முறை இடம்பெற போகின்றது அப்படி இடம்பெறும்போது வடமாகாணத்தில் தமிழ்தேசியகூட்டமைப்பு வீட்டு சின்னத்திலும் கிழக்கு மாகாணத்தில் வேறொரு பொதுச்சின்னத்திலும் போட்டியிடும் போது இரண்டுவிதமான செய்திகள் வெளிவரும். ஒன்று வடமாகாணத்தில் தமிழ்தேசியத்துக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர் எனவும் கிழக்குமாகாணத்தில் தமிழ்தேசியத்துக்கு எதிராக வாக்களித்தனர் என்ற பிரசாரத்தை தென்பகுதி இனவாதிகளால் பரப்புவதற்கு வாய்ப்புக்களை நாமே ஏற்படுத்தி கொடுப்பதாக அமையும்.
கிழக்குதமிழர் ஒன்றியத்தில் உள்ள அனைவருமே எந்த அரசியல் கட்சியும் சாராத நடுநிலைவாதிகள் என்றுதான் இங்கு பேசப்பட்டது. ஆனால் தற்போது தலைமை தாங்கும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவர் கோபாலகிஷ்ணன் தமிழர் மகாசபை என்ற கட்சியின் பொதுச்செயலாளர். அதுமட்டுமல்ல கோபாலகிருஷ்ணன் தொடர்சியாக நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக வெவ்வேறு அரசியல் கட்சி அல்லது சுயேட்சை குழுக்களில் வேட்பாளராக போட்டியிட்ட ஒரு அரசியல்வாதி என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே கிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது என கிழக்கு தமிழர் ஒன்றியம் வெளிப்படையாக கூறினாலும் அதன் உள்நோக்கம் வேறு என அரியநேத்திரன் தெரிவித்தார்.
கிழக்கு தமிழர் ஒன்றியம் தொடர்பாக கிழக்கில் உள்ள தமிழரசுக்கட்சி உறுப்பினர்களே முடிவெடுங்கள் என தமிழரசுக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியிருக்கிறது. கிழக்கில் உள்ள தமிழரசுக்கட்சியாகிய நாம் மிகத்தெளிவாக இருக்கிறோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைக்க அனுமதிக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமான வீட்டு சின்னத்தை தவிர வேறு சின்னத்தில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்திருக்கிறோம்.
கிழக்கில் தமிழர் ஒற்றுமையை விரும்புபவர்கள் வடக்கு கிழக்கில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பலமான சக்தியாக விளங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளலாம். தமிழ் மக்களின் அரசியல் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமே ஒழிய ஆனந்தசங்கரி போன்ற மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் கூறுவது போல தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிக்க முடியாது என அரியநேத்திரன் கூறினார்.
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே நிராகரித்து விட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் சேர மறுத்தால் மிச்சம் இருப்பவர்கள் மக்கள் செல்வாக்கற்ற உதிரி கட்சிகளாகும்.
இந்த உதிரி கட்சிகளால் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் கூட ஒரு வட்டாரத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கும் முயற்சியே தவிர கிழக்கு தமிழர் ஒன்றியத்திடம் தமிழர் நலன்கள் இருப்பதாக தெரியவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது.
இந்த உதிரி கட்சிகளால் பொதுத்தேர்தலிலோ அல்லது மாகாணசபை தேர்தலிலோ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.
கிழக்கு தமிழர் ஒன்றியம் எதிர்பார்ப்பது போல கிழக்கில் உள்ள தமிழர்கள் அனைவரையும் ஒரே கட்சியின் கீழ் போட்டியிட வைப்பது என்பது இயலாத காரியமாகும்.
ஐக்கிய தேசியக்கட்சி, மற்றும் சிறிலங்கா சுதந்திரகட்சி போன்ற சிங்கள தேசியக்கட்சிகளில் கிழக்கில் தமிழர்கள் போட்டியிடுவதை தடுக்க முடியாது.
கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக செயற்படாத நடுநிலையாளர்களை கொண்டு கிழக்கு தமிழர் ஒன்றியம் உருவாக்கப்பட்டிருந்தால் – கோபாலகிருஷ்ணன் தலைமையிலான தமிழர் மகாசபை என்ற அரசியல் கட்சிக்கு கிழக்கில் அங்கீகாரம் கொடுப்பது, பிள்ளையானை முதலமைச்சராக்குவது என்ற உள்நோக்கங்கள் இன்றி பொது நலனுடன் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டிருந்தால்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் சில வேளைகளில் அவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கி வந்திருக்கலாம்.
எனவே கிழக்கு தமிழர் ஒன்றியம் அரசியல் சார்பற்ற நடுநிலையாளர்களால் வழி நடத்தப்படாதவரை தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பது சாத்தியமற்ற ஒன்றே.
(இரா.துரைரத்தினம்.)