மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட சந்தோசபுரம் கிராமத்தில் கைத்தொழில் நிலையம்

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட சந்தோசபுரம் கிராமத்தில் ஏற்றம் நிறுவனத்தினரால் கைத்தொழில் நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.  ஏற்றம் அவுஸ்திரேலியாவின் நிதிப் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக் கைத்தொழில் நிலையத்தில் தற்போது ஊதுபத்திகள் தயாரிக்கப்படுகின்றன.

ஏற்றம் நிறுவனப் பணிப்பாளர் இராசரத்தினம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஒழுங்கமைப்பை ஏற்றம் அறக்கட்டளையின் திருகோணைமலை மாவட்ட இணைப்பாளர்  டிசான் அவர்கள் செய்திருந்தார். ஏற்றம் அறக்கட்டளையின் கிளிநொச்சி இணைப்பாளர் மதிவாணன் அவர்களும் இந்திகழ்வில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலர் அவர்கள் ஏற்றம் நிறுவனத்தின் இம்முயற்சியைப் பாராட்டியதோடு  ஊதுபத்தியுடன் ஏற்கனவே கலந்தாலோசிக்கப்பட்ட செருப்பு மற்றும் மெழுகுவர்த்தி தயாரிப்பையும் ஆரம்பிக்கவேண்டும் என்று ஏற்றம் நிறுவனத்தினரைக் கேட்டுக்கொண்டார். மேலும் இத்திட்டத்திற்கு கிராமமக்களின் முழுப்பங்களிப்பும் தேவை என்றும் கிராமமக்கள் இதற்கு ஆதரவு வழங்கத் தவறினால் இப்பபடியான திட்டங்கள் எதிர்காலத்தில் இக்கிராமத்திற்குப் வராமல்போய்விடும் என்றார். அத்துடன் இத்திட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக அலுவலகத்தின் பலபணிகளை இடையில் விட்டு விட்டு இங்கே கலந்துகொண்டதாகத் தெரிவித்தார். அத்துடன் கிராமத்தில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இரண்டு தண்ணீர் தாங்கிகள் வழங்கி அந்த தண்ணீர் தாங்கிகள் பிரதேச செயலகத்தால் நிரப்படும் என்று உறுதி அளித்ததுடன் அன்று மாலையே தண்ணீர் தாங்கிகளை வழங்கியும் வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய கிரவற்குழி சிவசக்தி வித்தியாலய அதிபர்  அவர்கள், ஏற்றம் நிறுவனத்தினரால் நடாத்தப்படும்  மாலைநேரவகுப்புக்கள் மாணவர்களின் எழுத்தறிவு வீதத்தை அதிகரிப்பதற்கு உதவுதாகவும் அதற்கு ஏற்றம் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவிப்பபதுடன் கல்வியை ஊக்குவிக்க இன்னும் திட்டங்களை செயற்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள ஊதுபத்தி கைத்தொழில் நிலையம்போல் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் இன்னும் பல செயற்திட்டங்களை செயற்படுத்துவதற்கு கிராம மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்று குறிப்பிட்ட ஏற்றம் அறக்கட்டளைப் பணிப்பாளர் இராசரத்தினம் அவர்கள்,  கல்வி வளர்ச்சியுடன் கிராமத்தின் பொருளாதார வளத்தினை மேம்படுத்த  அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் செயற்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

ஏற்றம் அறக்கட்டளையின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் டிசான் அவர்கள்   தனது உரையில்,

“எமது ஏற்றம் அறக்கட்டளையானது இக் கிராம மக்களில் வரிய நிலையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எங்களின் நோக்கமாகும்  அதில் ஒரு கட்டமாகத்தான் ஊதுபத்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு தொழில் முயற்சி வழங்கப்பட்டுள்ளது மேலும் இக் கிராமத்தில் பல் வேறு வேலைத்திட்டங்கள் கொண்டுவருவதாக உள்ளோம் இருந்தும் இக் கிராம மக்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மந்தமாக உள்ளது என்பதை நேரடியாக அறியக்கூடியதாக உள்ளது இங்கு இந்த நிறுவனம் மட்டும் இல்லாமல் மேலும் பல நிறுவனங்கள் வருவதும் வராமல் போவதும் நீங்கள் தரும் ஒத்துழைப்பிலும் பங்களிப்பிலும் தங்கியுள்ளது உங்களது தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி வரும் வாய்ப்புகளை இழப்பதனூடாக இங்கு பொருளாதாரத்தையோ வாழ்வாதாரத்தையோ மேம்படுத்த முடியாது மேலும் கல்வி வளர்ச்சி மிகவும் முக்கியமானதொன்று அதையும் எங்கள் நிறுவனம் செயற்படுத்திகொண்டிருக்கிறது இருந்தாலும் கிராம மக்கள் வெறுமனே வாயால் கல்வியை பற்றி சொல்விட்டுச் செல்லாமல் பெற்றோர் ஆசிரியர்கள் அனைவரும் படிக்கும் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்பிணை முன்னெடுக்க வேண்டும் இக் கிராமத்தில் இருந்து ஒரு மாணவி மாத்திரமே கிழக்கு பல்கலை கழகத்திற்கு சென்றிருப்பது போல இனி வரும் காலங்களில் பெருவாரியான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்பதே எங்கள் நிறுவனத்தின் தூரநோக்கும் ஆகும். எனவே ஊர் திரண்டால் தேர் திரளும் என்று கூறி உங்களின் ஒற்றுமையும் பங்களிப்பும் தொடரட்டும் ’’ என்றார்.