திருக்கோவில் பிரதேசத்தில் 15ஆயிரம் தமிழ்மக்கள் குடிநீரின்றி அவதி!

குழாய்நீர்விநியோகம் துண்டிப்பு:பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்: அலுவலகத்திற்கு பூட்டு!
திருக்கோவில் பிரதேசசபைத் தவிசாளர் கமலராஜன் கூறுகிறார்!
(காரைதீவு  நிருபர் சகா)
 
கொடியவரட்சி மற்றும் குழாய்நீர்விநியோகம் துண்டிப்பு காரணமாக திருக்கோவில் பிரதேசத்தில் 15ஆயிரம் தமிழ்மக்கள் குடிநீரின்றி அவதியுறுகின்றனர். வரட்சி நீடிப்பின் நிலைமை மேலும் மோசமாகும்.
 
இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேசசபைத் தவிசாளர் இராசையா வில்சன் கமலராஜன்  தெரிவித்தார்.
 
மோசமான குடிநீர்ப்பிரச்சினை தொடர்பாக  இன்று  (27) திருக்கோவில் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பிரதேச செயலகம் பிரதேசசபை நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை ஆகியவற்றை அழைத்து அவசரமாக கூட்டமொன்றை தவிசாளர் கமலராஜன் நடாத்தினார்.
 
அதற்கு முன்னதாக தவிசாளர் கமலராஜன் குடிநீர்ப்பிரச்சினை பற்றி விபரிக்கையில்:
எமது பிரதேசத்தில் கஞ்சிகுடிச்சாறு காஞ்சிரன்குடா தங்கவேலாயுதபுரம் ஸ்ரீவள்ளிபுரம் மண்டானை குடிநிலம் சாகாமம் தாண்டியடி நேருபுரம் போன்ற கிராமங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஒருசொட்டுத் தண்ணீர்கூட இக்கிராமங்களில் இல்லை.
 
குறிப்பாக 76குடும்பங்களுள்ள ஸ்ரீவள்ளிபுரத்தில் ஒருதுளி தண்ணீரையும் காணவில்லை. அந்த மக்கள் இடம்பெயரும் தறுவாயிலுள்ளனர்.
 இவர்களுக்கு எமது பிரதேசசபையும் பிரதேசசெயலகமும் இணைந்து 3 நீர் பவுசர்களில் மக்களுக்கு குடிநீரை மட்டும் வழங்கிவருகின்றது. நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையும் ஒருபவுசரில் குடிநீர் வழங்கிவருகின்றது.
 
அக்கரைப்பற்றுக்குச் சென்று பவுசரில் இந்த தண்ணீர்கொண்டுவரப்படுகின்றது. இதனால் நாளொன்றுக்கு 2 அல்லது 3தடவைகள்தான் கொண்டுவரமுடியும்.
ஆனால் இது அவர்களுக்கு குடிப்பதற்குக்கூட போதுமானதல்ல.
ஏனைய குளிப்பு மலசலப்பாவனை உடுப்புத்துவைத்தல் போன்ற இன்னொரன்ன தேவைகளுக்கு அந்த மக்கள் நீண்டதூரம் சிறுகுளங்களை நாடவேண்டியுள்ளது. 
 
அவையும் தற்போது படிப்படியாக வற்றிவருகின்றன.கால்நடைகள் தீவனத்திற்காக அலைவது பரிதாபகரமாகவுள்ளது. மக்களுக்கு நோய்த்தாக்கமும் பீடித்துவருகின்றது.
 
இப்பிரதேசத்திற்கான குழாய்நீர் வழங்கல் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. அக்கரைப்பற்றிலுள்ள அலுவலகத்தில் வினவியபோது போதுமானளவு தண்ணீர் இல்லாமையே காரணம் என்றனர்.
இதனிடையே மண்டானை மற்றும் தாண்டியடி கிராம மக்கள் தண்ணீர்வேண்டி ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுவருகின்றனர். மண்டானையிலுள்ள நீர்வழங்கல்வடிகாலமைச்சபை உப அலுவலகத்திற்கு பொதுமக்கள் பூட்டுப்போட்டுள்ளனர்.
 
இவ்வாறு அவலநிலையிலுள்ள குடிநீர்ப்பிரச்சினை வரட்சி நீடித்தால் இதைவிட மோசமாகும். 
இதேவேளை தம்பட்டை தம்பிலுவில் திருக்கோவில் வினாயகபுரம் போன்ற கிராமங்களில் ஆங்காங்கே சொந்தக்கிணறுகளிருப்பதனால் உருவாறு சமாளித்துவருகின்றார்கள். வரட்சி நீடித்தால் அவர்களும் மேற்சொன்ன பிரச்சினைகளை எதிர்நோக்குவார்கள். என்றார்.
 
இதுஇவ்வாறிருக்க இப்பிரதேசத்திற்கு குழாய்நீர்வழங்கவென சாகாமத்தில் கோடிக்கணக்கில் செலவழித்துக் கட்டப்பட்டுள்ள குழாய்நீர்விநியோகமையம் எதுவித பிரயோசனமுமில்லாமல் பூச்சியஉற்பத்தியுடன் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இம்மையத்திற்கு நீர்வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட மூலங்கள் அடைக்கப்பட்டுவிட்டதால் பலகோடிருபா செலவழித்துக் கட்டப்பட்ட இவ்விநியோகமையம் வீணாக காலத்தைக்கடத்துகிறது என்றும் தெரியவருகின்றது.