உலகில் சொந்தக்காணியைப்பெற போராடுகின்றவன் தமிழன் மட்டுமே!

பொத்துவில் ஆர்ப்பாட்டமக்கள் மத்தியில் தவிசாளர் ஜெயசிறில்!
(காரைதீவு  நிருபர் சகா)
 
உலகில் தாம்வாழ்ந்த சொந்தக்காணியைப்பெற போராடுகின்ற துர்ப்பாக்கியநிலை தமிழினத்திற்கு மட்டுமே உள்ளது. அது பொத்துவில் கனகர்கிராம தமிழ் மக்களுக்கு விதிவிலக்கல்ல. எனவே இடைவிடாது போராட்டத்தைத் தொடருங்கள்.

 
இவ்வாறு பொத்துவில் கனகர் கிராமத்தில் 14வதுநாளாக நிலமீட்புப்போராட்டத்திலீடுபட்டுவரும் தமிழ்மக்கள் மத்தியில் உரையாற்றிய த.தே.கூட்டமைப்பின் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
 இன்று(27) மாலை 14வதுநாளாக போராடும் மக்களுக்கு ஒருதொகுதி உலருணவுப்பொருட்களைக் கையளித்துவிட்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவருடன் த.தே.கூட்டமைப்பின் காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் சின்னையா ஜெயராணி மூத்தசமுகசேவையாளர் எஸ்.தம்பிராசா ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.
இவர்கள் அங்குசென்றசமயம் த.தே.கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேசசபைத்தவிசாளர் த.கமலராஜன் பொத்துவில் உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபன் முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் கே.செல்வராஜா ள்ளிட்ட பிரமுகர்களும் நின்றிருந்தனர்.
 
அங்கு தவிசாளர் சிறில் மேலும் பேசுகையில்:
சந்திரிகா அம்மையார் சமாதானம் என்றுவந்து தமிழ்மக்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. கொடுங்கொல் ஆட்சிசெய்த மஹிந்தவின் காலத்தில் தமிழினம்பட்டவேதனை சொல்லொண்ணாதது. அதற்காக தமிழ்மக்கள் சேர்ந்து நல்லாட்சியைக் கொண்டுவந்தோம்.
 
அந்த நல்லாட்சியிலும் தமிழ்மக்கள் வடக்கு கிழக்கில் தமது சொந்த நிலத்திற்காகப் போராடவேண்டியுள்ளது. இது நல்லாட்சியா பொல்லாட்சியா? வெட்கப்படவேண்டியுள்ளது. ஏன் தமிழ்அரசியல்தலைவர்களும் வெட்கப்படவேண்டியவர்களாக உள்ளனர்.
 
நிலத்திற்காக உரிமைக்காக போராட அன்று புறப்பட்ட தமிழன் இன்றும் பலதசாப்தகாலமாக போராடிக்கொண்டிருக்கின்றான். ஏன் மயானத்திற்காக வேண்டியும் போராடவேண்டியுள்ளது. ஆனால் தமிழனை மெல்லெனக்கொல்லும் திட்டத்தில் பலர் ஈடுபட்டுள்ளனர். இன்னுமொருசமுகம் எமது சகல உரிமைகளையும் அபிவிருத்திகளையும் தட்டிப்பறித்து அனுபவித்துக்கொண்டிருக்கிறது.
 
இங்கு வாழ்ந்ததற்கான அடையாளங்கள் வீடுகள் மலசலகூடங்கள் ஆலயங்கள் இன்னுமிருக்கின்றன. இதற்கு ஆய்வாளர்களோ களஆய்வறிக்கையோ தேவையில்லை.
நாம் வாழந்த காணியைத்தர பின்னடிக்கின்ற நீங்கள் எப்படி வீட்டைத்தரப்போகிறீர்கள்? 
ஏனையவசதிகளைத்தரப்போகிறீர்கள்?
இங்கு வாழ்ந்த அருணாசலம் போன்றவர்கள் உயிருடன் இருக்கு எமக்கும் போதே இக்காணியைமீட்டெடுக்கவேண்டும். எனவே தொடர்ந்து போராட எமது முழுஒத்துழைப்பையும் வழங்குவோம். என்றார்.
 
பொத்துவில் உபதவிசாளர் பெ.பார்த்தீபன் பேசுகையில்: எமது மக்களின் காணிகளுக்கான பெர்மிட்டுகள் செல்லுபடியற்றது என்று யாரும் கூறுவார்களாயின் அந்தக்காலப்பகுதியில் இலங்கையில் வழங்கப்பட்ட அத்தனை பெர்மிட்டுக்களையும் செல்லுபடியற்றதாக்குவார்களா? இங்கு; வாழ்ந்ததற்கான சகல ஆதாரங்களும் உள்ளன. இதற்கு களஆய்வு அவசியமே இல்லை. என்றார்.
 
 
 
மக்கள் கருத்துக்கூறுகையில்:
இங்கு பலரும் வருகின்றனர் போகின்றனர். எமக்கு அரைஏக்கரில் வீடுகட்டித்தரப்போவதாகக்கூறுகின்றனர். எமக்கு வீடு வேண்டாம். எமது சொந்தக்காணியினை வழங்குங்கள்.
ஜனாதிபதியுடன் எம்.பி. பேசியதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டன. ஆனால் ஜனாதிபதி எந்த உறுதியையும் அல்லது தீர்வையும் சொல்லவில்லை. 
எம்மில் மூவர் இன்று ஆஸ்பத்திரியில்.எமது பிள்ளைகளின் படிப்பு சீரழிந்துவருகின்றது.  இன்றுடன் 14தினங்களாகின்றன. இன்னும் தீர்வில்லை.எனவே நீங்களாவது முதலில் எமது காணியினைப் பெற்றுத்தாருங்கள். 
தமிழ்த்தலைமைகள் வடக்கில் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றனரே தவிர பொத்துவில் காணியை விடுவிக்குமாறு கூறாதது கவலையளிக்கிறது.என்றனர்.
 
ஆர்ப்பாட்டக்காரர்களுள் இதயவலி காரணமாக இ.நடேசபிள்ளை க.யோகேஸ்வரி க.சுபத்ரா ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.