கால்நடைகள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வுகாண அதிகாரிகள், பண்ணையாளர்கள் இடையியே ஒன்றுகூடலை நடாத்த தீர்மானம்.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் கால்நடைகள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு, கால்நடைகளுடன் தொடர்புடைய திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸார், பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஆகியோர்களுக்கிடையில் ஒன்றுகூடல் ஒன்றினை ஏற்படுத்துவதென மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் இன்று(24) வெள்ளிக்கிழமை நடைபெற்ற 6வது சபை அமர்வின் போது, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் அசௌகரியங்கள், சட்டவிரோத மாடு கடத்தல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் இவ்வொன்றுகூடலை நடத்தவுள்ளதாக அமர்வில் கூறப்பட்டதுடன், பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளினால் கொண்டு செல்லப்படும் மண் மற்றும் மாடுகளுக்கான வரி அறவீடு தொடர்பிலும் இதன்போது, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கின்ற வரட்சி காரணமாக, குடிநீருக்கு பல கிராமங்களில் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வற்றினை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நீர்தாங்கிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுவருவதாகவும், சில கிராமங்களுக்கு இன்னமும் குடிநீர் தேவையுள்ளதாக சபை உறுப்பினர்களால் கூறப்பட்டதோடு, அதற்கான விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தவிசாளர் குறிப்பிட்டதுடன், குடிநீர் தொடர்பிலான பிரச்சினைகளை குறித்த வட்டாரங்களில் உள்ள சபை உறுப்பினர்களை கண்காணிக்குமாறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.