மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மரங்களை நட தீர்மானம்.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பயன்தரு மரங்களை நட்டு, இயற்கையான அழகுமிக்க சூழலை உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் ஆறாவது சபை அமர்வு, சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் இன்று(24) நடைபெற்ற போதே, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த காலங்களில் பிரதேசத்திற்குட்பட்ட பல மரங்கள் அழிக்கப்பட்டமையினால், காட்டுவிலங்குகளும், மனிதர்களும் இயற்கையின் சீற்றங்களுக்கு ஈடுகொடுத்து வருகின்றனர். இயற்கையின் சமநிலையையும், இயற்கையான சூழலையும் ஏற்படுத்தி மனிதர்களுக்கு பயனையேற்படுத்தும் வகையில், மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வீதியோரங்களிலும், ஆற்றாங்கரை ஓரங்களிலும், பொது இடங்களிலும் நிழல்தரு மரங்களையும், காய், கனி தரும் மரங்களையும் நட்டு பாதுகாப்பதென சபையின் உறுப்பினர் மு.அருட்செல்வம் முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்பட்டு, பிரதேசத்தில் மரங்கள் நடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மரங்கள் நடுவதன் மூலம் மண்ணரிப்பு மற்றும், வெயிலின் தாக்கம் போன்றவற்றினை குறைக்க முடியும் எனவும் இதன்போது கூறப்பட்டது.