முதற்தடவையாக மட்டக்களப்பு நகரின் அழகை கண்டுகளிக்க உலங்குவானூர்தி (ஹெலிகொப்டர்) சுற்றுலா சேவை ஆரம்பம் –படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு விமான நிலையத்துடன் இணைந்து மட்டக்களப்பு மற்றும் அதனை அண்டிய நகரங்களின் கடற்கரை அழகுகள்,இயற்கை காடுகள் ஏரிகள் போன்றவற்றை மேலிருந்து பார்க்கும் உலங்குவானூர்தி (ஹெலிகொப்டர்) சுற்றுலா சேவை இன்று 24 வெள்ளிக்கிழமை காலை சுமார் 9.45 மணியளவில் மட்டக்களப்பு விமான நிலையத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை சுற்றுலா மற்றும் கைதொழில் மன்றத்தின்; தலைவர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி உலங்குவானூர்தி (ஹெலிகாப்டர்) சுற்றுலா சேவை அங்குரார்ப்பண நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவான், மட்டக்களப்பு விமான நிலையத்தின் முகாமையாளர் சிந்தக பொன்சேகா,மட்டக்களப்பு வர்த்;தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராஜா, மட்டு- மாநகர சபை உறுப்பினர் திருமதி பல்தசார் ஆகியோர்; கலந்து கொண்டு முதலாவது ஹெலிகொப்டர் சுற்றுலா சேவையை ஆரம்பித்து வைத்தனர்.

இங்கு இடம்பெற்ற உலங்குவானூர்தி (ஹெலிகொப்டர்) சுற்றுலா சேவையை உள்ளுர் சுற்றுலா பயணிகளும் மிக ஆர்வமாக பயன்படுத்தியிருந்தனர்.

குறித்த உலங்குவானூர்தி (ஹெலிகொப்டர்) சுற்றுலாவில் மட்டக்களப்பு நகரம் உட்பட மட்டக்களப்பு நகரத்தின் கிராமங்கள்,காத்தான்குடி நகரம்,  ஏறாவூர் நகரம் என்பவற்றின் கடற்கரை அழகுகள்,இயற்கை காடுகள் ஏரிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டதுடன், இதற்கான உலங்குவானூர்தி (ஹெலிகொப்டர்) சுற்றுலா பயணச் சீட்டு  கட்டணமாக ஒருவருக்கு சுமார் 12000.00 பன்னிரண்டாயிரம் ரூபாய் அறவிடப்படுவதுடன்,2 வயது பிள்ளைகளுக்கு மாத்திரம் இலவசமாக கண்டுகளிக்க அனுமதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.