புதிய தேர்தல்முறை தமிழர்களுக்கு பாதகமாகவே அமையும்

தமிழர்கள் ஏற்கனவே பெற்றுவந்த ஆசனங்களை கூட புதிய தேர்தல் முறையில் இழக்க நேரிடும் : ஞா. சிறிநேசன்

புதிய முறையிலான தேர்தல் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளமையால் பழைய முறையிலான தேர்தலே பொருத்தமானதாக இருக்கும். என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (24.08.2018) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற புதிய தேர்தல் முறைக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறான கருத்தை தெரிவித்திருந்தார்.

இனவாரிப்பிரதிநிதித்துவ தேர்தல் முறைக்கு ஓர் முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே 1931 ஆம் ஆண்டில் வட்டார முறையிலான (பிரதேசவாரி) பிரதிநிதித்துவ முறையினை எமது நாட்டிற்கு ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்து வைத்தார்கள். இருந்தும் இம்முறையில் கட்சிகள் பெறுகின்ற வாக்குகளிற்கு ஏற்ப ஆசனங்கள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு காணப்பட்டமையால் 1978 ஆம் ஆண்டில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல்முறை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்த விகிதாசார தேர்தலில் உள்ள விருப்பு வாக்கு முறைமையால் பல பிரச்சனைகள் காணப்படுவதாகத் தெரிவித்தே அத்தேர்தல் முறையானது திருத்தப்பட்டு விகிதாசார முறையில் 40 வீதமும் வட்டார முறயில் 60 வீதமுமாக கலப்பு முறையில் கடந்த உள்ளுராட்சி தேர்தல்கள் நடாத்தப்பட்டான. இந்த தேர்தல் முறையை கோட்பாடு ரீதியாக சிந்திப்பதிலிருந்து செயற்பாட்டு ரீதியாக பார்க்கும் போது பல குறைபாடுகளைக் கொண்டுள்ள ஓர் தேர்தல் முறையாகவே காணப்படுகின்றது. அதாவது இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் பெரும்பலான சபைகள் அறுதிப் பெரும்பான்மையை பெறுவதில் சிக்கல் நிலையை எதிர்நோக்கி உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்கனவே விகிதாசார முறையில் தமிழர்கள் பெற்றுவந்த வாக்குகள் , ஆசனங்களை கூட இந்த புதிய தேர்தல் முறையில் இழக்க கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஆசனங்களை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அதுமட்டுமன்றி அறுபதுக்கு நாற்பது, ஐம்பதுக்கு ஐம்பது என மீண்டும் மீண்டும் திருத்தங்களை மேற்கொண்டவாறு இருந்தோமானால் கால தாமதங்களே ஏற்படும். ஏற்கனவே கலைக்கப்பட்டு மக்களால் தெரிவு செய்யப்படாத ஆளுநர்கள் வசம் உள்ள அனைத்து மாகாண சபைகளுக்கும் உடனடியாக தேர்தலை நடாத்தி அவற்றை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு உடனடியாக தேர்தலை நடாத்த வேண்டுமாயின் பழைய தேர்தல் முறையே சாத்தியமானதாக இருக்கும். எனவே இந்த எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் என தெரிவித்தார்.