மீண்டும் மீன்பாடும் தேநாட்டில் களைகட்டுகிறது நம்மை விட்டுப்போன பௌர்ணமிக் கலை விழா.

எதிர்வரும் பௌர்ணமி நாள் சனிக்கிழமை 25.08.2018 அன்று மாலை நேரம் 5 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மட்டக்களப்பு மாநகர சபையும் மாவட்ட செயலகமும், மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து பௌர்ணமிக் கலை விழாவை மட்டக்களப்பு மாநகர சபைக் கலை, கலாச்சார விழாக்  குழு அதன் தலைவர் வே.தவராசா தலைமையில் நடத்தவிருக்கின்றது.

ஏறக்குறைய 47 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தொடரும் பௌர்ணமிக் கலை விழா பற்றியதொரு பார்வையை நாம் இங்கு பார்ப்பது பொருத்தமானதாகும்.
1971 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாநகர சபையில் மீண்டும் மக்களாட்சி மலர்கிறது. மாநகர சபையின் முதல்வராக அமரர் க.தியாகராசா அவர்கள் பொறுப்பேற்கிறார். அவர் இயல்பாகவே தமிழ் மொழியிலும், கலைகளிலும் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அதிலும் குறிப்பாக நாட்டுக் கூத்தில் நாட்டம் உடையவர்.
ஊரூராய்க் கூத்தாடும் ஊரம்மா… எங்கள் ஊரினிலே கலைச் செல்வம் நூறம்மா என்ற உணர்ச்சிக் கவிஞரின் வரிகளுக்கு வலுவூட்ட எண்ணம் கொண்டார். நமது கலைகள் பல இருப்பிளந்து போகின்றன. அவைகளை புத்துயிர் பெற சிந்தை கொண்டார்.
சாலைகள் அமைப்பதும், வீதிகளுக்கு விளக்கேற்றி ஒளியூட்டுவதும், நீர் வழிந்தோட வாய்க்கால் அமைப்பதும்தான் மாநகர சபையின் பணிகள் என்று மட்டுப்படுத்தாமல், நமது மொழி, கலை, பண்பாடுகளைப் பேணிப் பாதுகாப்பதும் மாநகர சபைக்கான கடமையாகும் என்று உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளை வரையறை செய்ய முனைப்புக் கொண்டார்.

கலைகள் வளர்க்க ஆர்வம் கொண்டார். அவ்வுயரிய கலைப்பணி பேணிட கலை, கலாசார விசேட குழுவொன்றை உருவாக்கிடும் நோக்கில் பிரேரணையொன்றை சபையில் சமர்ப்பித்து ஏகமனதாக நிறைவேற்றிக்கொண்டார்.
கலையில் ஆர்வமுடைய உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பொருத்தமான மாநகர சபை அதிகாரியொருவரை இணைப்பாளராகக் கொண்டு கலைப் பணியைத் தொடங்கினார்.

அப்போது மட்டக்களப்பிலே இயங்கிய இலக்கிய கலை மன்றங்கள் காலத்திற்கேற்ப நாடகங்கள், நாட்டுக் கூத்துக்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் போன்ற இன்னோரன்ன தரமான நிகழ்வுகளை வழங்கிப் பெரும் பங்களிப்பினை நல்கினர்.
எப்போது அடுத்த பௌர்ணமி வரும் என்ற ஏக்கத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்குமளவிற்கு கலை நிகழ்வுகள் சக்கைபோடு போட்டன.மட்டக்களப்பு முத்தவெளி திறந்த வெளி அரங்கை நிரப்பி கலை நிகழ்வுகளை நமது மக்கள் சுவைத்தார்கள் எனும் செய்தி நமக்குப் பெரும் மகிழ்வாய் இருக்கின்றது.
காலையிலே அரங்கிலே கூடி நள்ளிரவு வரை நிகழ்வில் மகிழ்ந்து வீதியால் சாரிசாரியாகத் தங்கள் வீடு திரும்பும் வேளையில் பார்த்து மகிழ்ந்த கலை நிகழ்வுகளைப் பாராட்டிச் செல்வார்கள்.
பௌர்ணமி நாள் மாதமொருமுறை மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் நன்னாள்!
பல மதங்களுக்கு அந்த நாள் புனித நாள்!
சைவ ஆலயங்களிலே சிறப்பு வழிபாடு!
பௌத்த ஆலயங்களிலே விசேட ஆராதனை!
கண்ணகி அம்மன் குளிர்ந்தருளும் திங்கள், அதுதான் வைகாசித் திங்கள்.
சிலப்பதிகாரம் செப்பிடும் இந்திர விழா சித்திரைப் பௌர்ணமி நாளையொட்டியது.
மார்கழித் திங்கள் அது மதி கொஞ்சும் நாளல்லவா என்பார்கள்.
தழிழ்நாடு கேரளா எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோட்டத்தில் பௌர்ணமி தோறும் கலை விழா!
எனவே பௌர்ணமி மக்கள் மனங்கொள்ளும் மகிழ்வான நாள்.
எனவேதான் மட்டக்களப்பு மாநகர சபையும் கலை விழாவுக்குரிய நாளாக பௌர்ணமி நாளைத் தெரிவு செய்தது.
முப்பது பௌர்ணமிக் கலை விழாக்கள் முழுமையாக அரங்கேறிக் கொண்டிருந்த கால வேளையில் ஏற்பட்ட அரசியல் அனர்த்தம் அதனை முற்றுப் பெற வைத்துவிட்டது.
அதன் பின்பும் மக்கள் ஆட்சிகள் மலர்ந்தன. பௌர்ணமிக் கலை விழா காணாமல் முத்தவெளி அரங்கு அழுதது.
நீண்டதொரு இடைவேளையின் பின்பு மீண்டும் மக்களாட்சி மலர்ந்திருக்கின்றது. பௌர்ணமிக் கலை விழா கண்ட மாநகர முதல்வரின் மகன் முதல்வராய் தெரிவாகியுள்ளார்.
தந்தை தொட்டு மகிழ்ந்த கலைப் பணியை மீட்டெடுத்துள்ளார்.
மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரதும் ஆதரவுடனும், நமது மண்ணில் வாழும் கலைஞர்களின் பங்களிப்புடனும் மீண்டும் மீன்பாடும் தேநாட்டில் களைகட்டுகிறது நம்மை விட்டுப்போன பௌர்ணமிக் கலை விழா.
போராட்டக் களமாக விளங்கிய காந்திப் பூங்கா கலை கொட்டும் களமாகவும் மாறியிருக்கின்றது.
மாலை நேரம் சூரியன் மறைந்திட சந்திரன் முகிழ்ந்தெழும் நேரம் முழு நிலா முற்றத்தில் முகம் காட்டிச் சிரிக்கும்.
ஆடிடும் வாவியைத் தொட்டு பூங்காவில் கூடிடும் மக்களை தழுவிச் செல்லும் குளிர்த் தென்றல் திரும்பிடும் பக்கமெல்லாம் பச்சைப் பசேல் என்ற காட்சி கண்களைக் கவர்ந்திட மாநகர சபை வழங்கிடும் பௌர்ணமிக் கலை விழா மக்களை ஆராதித்திடும். கலையன்பர்களே கூடிடுங்கள் கலைகள் கூட்டிடுவோம்.

வே.தவராசா,
தலைவர், கலை, கலாச்சார குழு,
மாநகரசபை உறுப்பினர்
மாநகர சபை, மட்டக்களப்பு