கிழக்கில் தமிழ்கட்சிகள் ஒன்றினையுமா .தலைவர்கள் மட்டக்களப்பில் சந்திப்பு

கிழக்கு மாகாணத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்வரும் தேர்தலில் பொதுச் சின்னம் ஒன்றில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கோபாலகிருஸ்ணன் தலைமையில் இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பலதரப்பட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எதிர்கால நன்மைகருதி அனைத்த கட்சிகளையும் ஒன்றிணைந்து தேர்தலின்போது தமிழ் மக்களின் பலத்தினை நிலை நிறுத்தும் முகமாக குறித்த கலந்துரையாடல் மேற்படி கிழக்கு மாகாண தமிழர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து குறித்த விடயத்தினை முன்வைத்து கலந்துரையாடியிருந்தனர் இந் நிலையில் நேற்று அனைத்து கட்சிகளும் ஓரிடத்திற்கு அழைத்து கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பாக கேட்டறியும் முகமாக குறித்த கலந்துரையாடல் எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் பலதரப்பட்ட கட்சியின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர் அந்தவகையில் தமிழரசு கட்சி சார்பாக அதன் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பாக அதன் பொதுச் செயலாளர், வீ.ஆனந்தசங்கரி, உபதலைவர் ஞா.கிருஸ்ணபிள்ளை, தமிழர் விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பாக அதன் உபதலைர் இந்திரகுமார் பிரசன்னா, தலைமைக்குழு உறுப்பினர் கோ.கருணாகரம் தமிழீழ விடுதலைப்புலிகள் கட்சி சார்பாக அதன் செயலாளர் பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலை கழகம்(புளோட்) ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பீ.டீ.பீ) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிசார்பாக(ஈ.பீ.ஆர்.எல்.எவ்) இரா.துரைரெட்ணம், தமிழ் மக்கள் விடுதலைக்கட்சி , ஈழவர் ஐனாயக அமைப்பு, தமிழர் மகாசபை, தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் இக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர.
இக் கலந்தரையாடலின் போது கட்சிகள் ஒன்றிணைவதாயின் என்ன சின்னத்தில் போட்யிடுவது, இதன் கொள்கைள் என்ன, இணைந்த வடக்கு கிழக்கு எனும் தமிழர்களின் கொள்கை பாதிப்படையாதா? இதற்கு தலைவகிப்பது யார்? இதன் எதிகால திட்டங்கள் என்ன கிழக்கு மாகாண தமிழர் ஒன்றியம் தேர்தலில் போட்டியிடுமா? போன்ற ஐய வினாக்கள் பலதரப்பட்ட கட்சியினால் தொடுக்கப்பட்டு இது தொடர்பில் ஆராயப்பட்டது.
பல கட்சிகள் தமிழ் மக்களின் ஒற்றுமைகருதி ஒன்றிணைய தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தனர். இருந்தும் சிலகட்சிகள் இதற்கு தமது சம்மதத்தினை வெளிப்படையாக தெரிவித்திருக்கவில்லை குறித்த நிலைப்பாட்டை தமது தலைமைப்பீடத்திற்கு அறிவித்து அதன் கிழக்கு தமிழர் ஒன்றியத்தினால் வெளியிடப்படும் திட்டவரைபை ஆரய்ந்து அதற்கமைவாக தங்களது முடிவுகள் எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்