மட்டக்களப்பில் என்ரப்பிரைஸ் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கை

பிரதேச அபிவிருத்தி வங்கியினால் என்ரப்பிரைஸ் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கை
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றை  நோக்காகக் கொண்டு  அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் என்ரப்பிரைஸ் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பான செயற்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வங்கிகளினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

வங்கி உத்தியோகத்தர்களுக்கு இக் கடன் திட்டங்கள் தொடர்பான விளக்கமளிப்பு மற்றும் பிரதேசத்திலுள்ள மக்களுக்கு அறிவூட்டும் வகையிலாள வேலைத்திட்டமொன்று இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிளைகளினால் முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் உதவிப் பொது முகாமையாளர் பி.ஜீ.டப்ளியூ. அத்துல குமார தலைமையில் மட்டக்களப்பு நகரக்கிளையில் இது தொடர்பான நிகழ:வு நடைபெற்றது. உதவி மாவட்ட முகாமையாளர் ஏ.ஏ.எம்.றிபாத், வியாபார அபிவிருத்தி முகாமையாளர் கே.சத்தியநாதன், கிளை முகாமையாளர் என்.எம்.சியாத், உதவி முகாமையாளர்கள் உள்ளிட்ட பலரும் இன்றைய நிகழ்வில் பங்கு கொண்டிருந்தனர்.
என்ரபிறைஸ் சிறிலங்கா கடன் வழங்கும் வேலைத்திட்டத்தில், விவசாய, கைத்தொழில், வர்த்தகத்துறைசார் பல்வேறு கடன் திட்டங்கள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இவை சார்ந்த செயற்பாடுகளுக்கான தனியான பகுதிகள், உத்தியோகத்தர்கள் ஒதுக்கப்பட்டு வங்கிகளினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசாங்கத்தினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதேச அபிவிருத்தி வங்கியினால் என்ரப்பிரைஸ் சிறிலங்கா கடன் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளுக்காகவும் ஒரு கோடியே 24 லட்சம் ரூபா 152 பயனாளிகளுக்கு தொழில் முயற்சிகளுக்காக இதுவரையில் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிழக்கு பிராந்திய வியாபார அபிவிருத்தி முகாமையாளர் கே.சத்தியநாதன் தெரிவித்தார். அத்துடன், தொடர்ச்சியாக தமது வங்கி இக் கடன் திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கி வருவதாகவும் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து வருவதாகவும் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் 19ஆம் திகதி மட்டக்களப்பில் பணிகளை ஆரம்பித்த பிரதேச அபிவிருத்தி வங்கி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் வருமான மேம்பாட்டுக்கான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரம், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை ஆகிய 7 கிளைகளைக் கொண்டு கடந்த 6 வருடங்களாக பணியாற்றுக்கிறது. அத்துடன் இந்த வருடத்தில் வாகரை, கிரான ஆகிய இடங்களில் இரண்டு கிளைகளையும் திறக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதேச அபிவிருத்தி வங்கியானது இலங்கையில் 3ஆவது பெரிய வலையமைப்பைக் கொண்டதும் அரசாங்கத்தின் ஒரேயொரு அபிவிருத்தி வங்கியாகவும் இருந்து செயற்படுகிறது.
1985ஆம் ஆண்டு புளத் சிங்கள என்னுமிடத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ரொனி டி மெல் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வங்கியே பிரதேச அபிவிருத்தி வங்கியாகும்.
இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்கள ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையின் சனத்தொகையின் 70 வீதமாக உள்ள கிராமிய மக்களை முன்னேற்றுவதற்காக 85ஆம் ஆண்டு களுத்துறை, குருநாகல், மாத்தறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது 17 மாவட்டங்களில் 268 கிளைகளைக் கொண்டு இயங்குகிறது