காரைதீவுப்பிரதேசத்துள் இனிமேல் நுண்கடன் வழங்கலுக்கு தடை!

நுண்கடன்நிறுவனங்களுடனான கூட்டத்தில் தவிசாளர் அதிரடிஉத்தரவு!
(காரைதீவு  நிருபர் சகா)
 
காரைதீவுப் பிரதேச எல்லைக்குள் இனிமேல் நுண்கடன்  எதுவும் வழங்கமுடியாது. நுண்கடன்வழங்கல் தடைசெய்யப்பட்டுள்ளது.

 
இவ்வாறான உத்தரவை நுண்கடன்வழங்கும்நிறுவனங்களுடனான கூட்டத்தில் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் உத்தரவிட்டார்.
 
காரைதீவுப்பிரதேசத்துள் நுண்கடன் வழங்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு காரைதீவு பிரதான நூலக மேல்தள கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. 
இச்சந்திப்பில் 12 நுண்கடன் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தவிசாளருடன் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
 
குறித்த 12நிறுவனங்களும் சுமார் 2000 பேருக்கு தமது நுண்கடன்களை வாராந்த மாதாந்த வட்டி அடிப்படையில் வழங்கியிருந்தது. நாளாந்த வட்டியில் வழங்கிய 2 நுண்கடன்நிறுவனங்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
 
இருமணிநேரம் தவிசாளர் ஜெயசிறில் நிறுவனப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி சில தீர்மானங்களிற்கு வந்தார்.
 
இனிமேல் புதிய நுண்கடன்கள் வழங்குவதில்லை எனவும் நாளாந்த வட்டிவசூலிப்பை முற்றாக தடைசெய்வதெனவும் ஏலவே வழங்கிய கடன்களுக்கான வட்டியை அல்லது முதலை மாதாந்த அடிப்படையில் வசூலிப்பது எனவும் அதற்கு முன்பதாக நிறுவனங்கள் தத்தமது பயனாளிகளுடன் கலந்துரையாடி முடிவுக்குவரவேண்டும் என்றும் தீர்மாங்கள் எடுக்கப்பட்டன.
 
நிறுவனங்கள் தமது பயனாளிகளுடன் சந்தித்து முடிவெடுக்க எதிர்வரும் 25ஆம் திகதி முதல் செப் 6ஆம் திகதி வரை தினம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் வட்டியை வசூலிப்பதற்காக காலை 8மணிமுதல் மாலை 4மணிவரை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தநேரத்துள் நிறுவன முகவர்கள் நாகரீகமான வார்த்தைகளைப்பிரயோகித்து கடனைவசூலிக்கலாம். கணவன் இல்லாத வீடுகளில் கூடுதல்நேரம் தரித்துநிற்பதை தவிர்த்தல் போன்ற பல்வேறு தீர்மானங்களுக்கு இணக்கம் காணப்பட்டன