அம்பாறையில் தண்ணீருக்கு அலையும் தமிழ்மக்கள்! வறட்சி நீடித்தால் அதோகதி!

சகா)
 
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடும் வரட்சி நிலவிவருகின்றது. இதனால் குடிதண்ணீருக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது.
 
பெரும்பாலான பகுதிகளில் நீர்நிலைகள் வற்றிவருகின்றன. கால்நடைகள் உரிய தீவனமின்றி அலைந்து திரிகின்றன. வேம்புமரங்கள் பட்டுவருகின்றன. பச்சைநிற பயிர்பச்சைகள் மஞ்சளாகி வருகின்றன. மக்களுக்கு ஒருவகை நோய் பீடித்துவருகின்றது.

 
தினமும் மாலைவேளைகளில் மழைக்கான அறிகுறிகள் தென்படுகின்றபோதிலும் மழைபொழிவதில்லை. இதனால் பிரதேசம் வரண்டுபோயுள்ளது.
 
குறிப்பாக அம்பாறையின் தென்கோடியிலே ஏ4 பிரதான சாலையிலுள்ள பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்குமண்கண்டி களுகொல்ல ஊறணி செல்வபுரம் றொட்டை போன்ற தமிழ்மக்கள் வாழுகின்ற பிரதேசங்கள் வரட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
 
குறிப்பாக இப்பிரதேசங்களில் குழாய்நீர் இணைப்புகள் பொருத்தப்படாமையினாலும் வரட்சியினாலும் குடிதண்ணீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுகின்றது.
 
மக்கள் நலன்கருதி பொத்துவில் பிரதேச செயலகம் இராணுவ சிவில் படையினரின் உதவியுடன் மக்களுக்கு வாரத்தில் இருமுறை தண்ணீர் பவுசர்களில் தண்ணீரை விநியோகித்துவருகின்றது. அதற்கும் முண்டியடிப்பு.
 
அவர்களிடமுள்ள கொள்கலன்களில் இந்தநீரைப்பிடித்து நிரப்பி ஒருவாரத்திற்கான குடிதண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்கிறார்கள். தண்ணீரின் அருமை இப்போதுதான் புரிகிறது என்கிறார்கள் அவர்கள்.
 
தண்ணீர்த்தட்டுப்பாடு தொடர்பில் மக்களிடம் கேட்டபோது:
 
வழமையாக நாம் சங்குமண்கண்டிப்பிள்ளையார் ஆலயத்திலுள்ள கிணற்றில் தண்ணீர் எடுப்போம். ஆனால் அண்மைய வரட்சி காரணமான அக்கிணறு வற்றிவிட்டது. மேலும் ஆலயம்வரை வந்த குழாய்நீர்விநியோக இணைப்புகள் எமது பகுதிக்கு விஸ்தரிக்கப்படவில்லை. இது எமக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். நாம் தமிழர்கள் ஏழைகள் என்பதால் இந்தப்புறக்கணிப்போ தெரியாது.
 
மொத்தத்தில்  தண்ணீர் இல்லை. வாரமிருமுறை வவுசர்களில் விநியோகிக்கப்படும் தண்ணீரை இருக்கின்ற கொள்கலனில் பிடித்து சேமித்து வைக்கின்றோம். அது குடிதண்ணீருக்கு மாத்திரமே பயன்படுத்துகின்றோம்.
 
ஏனைய குளிப்பு முழுக்குகள் சலவை போன்ற தேவைகளுக்கு கனதூரம் சென்று சிறுகுளத்தைப் பயன்படுத்தவேண்டியுள்ளது. வரட்சி நீடித்தால் அதுவும் கைவிட்டுவிடும்நிலை தோன்றும். எம்கதி அதோகதிதான். என்றார்கள்.